நிர்மலா ராகவன்

பயணம் செய்யலாமா?

நலம்

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஆசிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்திருந்தனர். நீதிபதிகள் ஒரு கண்டுபிடிப்பைத் தெரிவித்திருந்தனர்: அந்த இருபது எழுத்தாளர்களும் ஒரு நாட்டிற்குமேல் வசித்திருப்பவர்கள். (அவைகளில் என்னுடையதும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது).

வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவர்களைத் தவிர, வெகு சிலருக்குத்தான் பயணம் செய்யப் பிடிக்கிறது. சிலர் உள்நாட்டில்கூடப் பிரயாணம் செய்யத் தயங்குவார்கள்.

கதை

“விடுமுறை வரப்போகிறதே! எங்கே போகப்போகிறாய்?” என்று என்னுடன் வேலை பார்த்த மிஸஸ் சின்னைக் கேட்டேன்.

அந்த இளம் சீனப்பெண், “எனக்கு வெளியூர்களுக்குப் போகவே பிடிக்காது. திரும்பி வந்ததும் குப்பை மாதிரி சாமான்கள் கிடக்கும்! அவைகளை ஒழித்துவைக்க எனக்குப் பொறுமை கிடையாது,” என்று முகத்தைச் சுளித்தாள்.

அவளுடைய போலிச்சிரிப்பும், நயந்து பேசி, பிறரை உபயோகப்படுத்தும் தன்மையும் அவளைப் பிறருக்குப் பிடிக்காமல் செய்திருந்தது.

நிறையப் பயணம் செய்பவளாக இருந்திருந்தால், பலதரமான மக்களை அறிந்திருக்க முடியும். பார்ப்பவர்களெல்லாம் தனக்கே உதவ வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை அகன்றிருக்குமோ?

அனுபவம் புதுமை

`வாழ்க்கை ஒரு நீண்ட பயணம்!’ என்கிறார்கள். நம் வாழ்வில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்று தெரியாது. அதுதான் சுவாரசியமே.

வீட்டைவிட்டு வெளியே செல்லும் பயணமும் அப்படித்தான். நல்லதும் நடக்கலாம், நமக்குப் பிடிக்காததும் நடக்கக்கூடும். அனுபவங்கள் என்று எடுத்துக்கொண்டால், நமக்கு வேண்டாதவற்றை மறுமுறை தவிர்க்கலாம்.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு என்று சொல்லி வைத்திருக்கிறார்களே! பிறர் வீட்டில் தங்கினால் நாம் அடுத்தவருக்குச் செலவு வைக்கிறோம் என்பது ஒருபுறமிருக்க, அவர்களுடைய அன்றாட நடவடிக்கைகளை நம் சௌகரியத்துக்காக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். புதிய இடத்தில் வசதி, பிறருடைய பழக்கவழக்கங்களைப் புரிந்து நடப்பது — இதெல்லாம் நமக்கும் கடினம்தான்.

நாட்டின் அருகாமையிலுள்ள பிற நாடுகளைச் சுற்றிப் பார்க்கவோ சில தினங்களே போதும். வீடு திரும்புகையில், எல்லாமே புதியதாகத் தோற்றமளிக்கும். புத்துணர்ச்சி பெருகுவது இதனால்தான். எவ்வளவுதான் புதிய அனுபவங்களைப் பெற்று வந்தாலும், வெளியில் அலைந்து திரிந்து, ஓய்ந்துபோய் வந்தால், `நம் வீடு, நம் அறை!’ என்று நிம்மதியாக, மிதப்பாக இருக்கும்.

வியட்நாமில் ஒரு கோயிலில் ஷேக்ஸ்பியரைக் கடவுளாகக் கும்பிடுகிறர்கள்! புதிதாக ஓரிடத்திற்குச் செல்கையில், அங்கு எதை எதிர்பார்க்க முடியும் என்பதை அறியாததே உற்சாகத்தை அளிக்கவல்லது. எதையும் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடிவதால், அங்கு பெறும் அனுபவங்களே சிறந்த கல்வி.

வித்தியாசமான பிறரை ஏற்று, விசாலமான மனப்பான்மையை அடைய ஒருவருக்கு தூரப்பயணத்தைப்போன்று வேறில்லை. ஆனால், அவை மட்டமானவை என்ற எண்ணம் கொண்டால் நம் வளர்ச்சியில் ஒரு மாற்றமும் இருக்காது.

இருபது ஆண்டுகளுக்குமுன், இந்தோனீசியாவிலுள்ள பாலித் தீவில் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இடுப்பில் சாரோங் மட்டும் உடுத்துப் போவதைக் கண்டிருக்கிறேன். மார்பு திறந்திருக்கும். அது அவர்கள் கலாசாரம். மலேசியாவிலும், பூர்வ குடியினப் பெண்கள் அப்படித்தான். வெளிநாட்டுக்காரர்கள் இவர்களை புகைப்படம் எடுத்ததைப் பார்த்து எனக்கு ஒரே ஆத்திரமாக இருந்தது. பெண்மையை மதிக்கத் தெரியாதவர்கள்!

ஆனால், இப்போது இப்பெண்களெல்லாம் சட்டை அணிகிறார்கள். அவர்களது நாகரீகத்தை மதிக்காது, உல்லாசப்பயணிகள் விரிந்த கண்களுடன் புகைப்படம் எடுத்ததன் விளைவோ?

புதிய இடங்களில், நமக்குச் சிறுவயதில் சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளை வேறு கோணத்திலிருந்து பார்க்கவும் கற்கிறோம். அவைகளை மாற்றுவதிலேயே ஒரு மகிழ்ச்சி.

கதை

மழை நாட்களில் என் தாய் என்னை பள்ளிக்கூடம் அனுப்பமாட்டாள், `மழையில் நனைந்தால் ஜூரம் வரும்!’ என்று.

மறுநாள் ஆசிரியரிடம் திட்டு வாங்குவேன், `நீ என்ன வெல்லக்கட்டியா? கரைஞ்சு போயிடுவியா?’ என்று.

சில ஆண்டுகளுக்குமுன், பாலியில் நானும் என் பேத்தியும் ஒரு சாயங்கால வேளையில் உலவச் சென்றோம். எங்களுடன் அருகில் தங்கியிருந்த செல்லம்மாள் என்ற ஒரு மூதாட்டியும் வந்திருந்தாள்.

வழியில் மழை வரும்போல் இருந்தது. அந்த அம்மாள் பயந்து, திரும்பிப் போய்விட்டாள்.

நாங்கள் தங்குமிடம் பதினைந்து நிமிடத் தொலைவில் இருக்க, “இன்னும் சில நிமிடங்களில் மழை வரப்போகிறது. எப்படியும் நனையப்போகிறோம். எதற்காக ஓடவேண்டும்?” என்றேன். என் பேத்திக்குப் பரம சந்தோஷம். (எந்தச் சிறுமியைத்தான் நனைய விட்டார்கள் பெற்றோர்!)

மழை கொட்ட, இருவரும் கைகளைக் கோர்த்து, வீசிக்கொண்டு, பாடியபடி மெதுவாக நடந்தோம். பார்ப்பவர்களெல்லாம் சிரித்து, “குடை கொண்டுவரவில்லையா?” என்று (அநாவசியமாக) விசாரித்தார்கள்.

நாங்களும் சிரித்தபடி கையை ஆட்டினோம்.

அறைக்குத் திரும்பியதும், குளிர்ந்த நீரில் தலைக்குக் குளித்தோம். அப்போதுதான் மழைநீர் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மறுநாள் காலை. செல்லம்மாள், “நல்ல வேளை, நான் ஓட்டமும் நடையுமா மழைக்குமுந்தி வந்துட்டேன்!” என, நான், “நாங்க ஜாலியா மழையிலே நனைஞ்சுண்டே வந்தோம்!” என்றேன், அந்த நினைவு எழுப்பிய பூரிப்புடன்.

“ஜாலியா?” என்று விழித்தாள் அம்மாது.

எங்களுக்குக் காய்ச்சல் வரவில்லை என்பதுடன், சில வருடங்களுக்குப் பின்னரும் அந்த நிகழ்ச்சி பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது என்றால், அது அந்த வித்தியாசமான அனுபவம் அளித்த மகிழ்ச்சியால்.

எல்லாம் மனதில்தான்

கானடா நாட்டிலுள்ள விக்டோரியா தீவில் (அது ஆர்க்டிக் பகுதியாம்) நான் சந்தித்த ஒரு ஐரோப்பிய மாது மிக மெல்லிய சட்டை மட்டும் அணிந்திருந்தாள். நானோ, சட்டைக்குமேல் ஸ்வெட்டர், கோட்டு இத்தியாதிகளோடு நடுங்கிக்கொண்டிருந்தேன்.

“உங்களுக்குக் குளிரவில்லையா?” என்று அதிசயப்பட்டுக் கேட்டேன்.

“நான் சின்னப்பெண்ணாக இருந்தபோது, என் பாட்டி, “குழந்தே! ரொம்பக் குளிர்கிறது. வாசலில் நிற்காதே!’ என்று பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். இப்போது இந்தக் குளிர் என்னை எதுவும் செய்வதில்லை. எல்லாம் நம் மனதில்தான் இருக்கிறது,” என்று சிரித்தாள்.

அவள் வீட்டில் பல பூனைகள் இருந்தன. சாய்பாபா பஜன் கேட்கும்போதெல்லாம் அவை ஒரே இடத்தில் அமைதியாக அமர்ந்திருக்கும் என்று கூற ஆச்சரியமாக இருந்தது.

எந்தப் பயணமும் எளிதாக அமைந்து விடுவதில்லை. காய்ச்சல், தலைவலி, அஜீரணம் (அல்ட்ரா கார்பன்தான் (ULTRA CARBON) மிகச் சிறந்தது என்று விமானதளத்தில் உள்ள கடையில் சிபாரிசு செய்ய, உடனுக்குடன் குணப்படுத்தும் அது இல்லாமல் நான் எங்கும் செல்வதில்லை), வயிற்றுப்போக்கு என்று பலவித உபாதைகளுக்கும் மருந்துகளை எடுத்துப்போவது நல்லது. புதிய இடத்தில் மருந்துக்கடையைத் தேடி அலைய வேண்டியதில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக நிறைய இடங்களைச் சுற்றிப்பார்க்கலாம்.

எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டாலும், எப்படியோ குளறுபடி ஆகிவிடும். அதற்குப் பயந்து, நமக்குப் பழக்கமான சொகுசான இடத்திலேயே இருந்தால், புதிய அனுபவங்கள் எப்படிக் கிடைக்கும்? என்னதான் படித்தாலும், தொலைகாட்சியில் பார்த்தாலும் நேரில் பார்ப்பதுபோல் ஆகுமா?

தென்கிழக்கு ஆசியாவிலிருக்கும் அங்கோர் வாட்டைக் கண்டு களிக்க கம்போடியா சென்றிருந்தபோது, போரில் கால்களை இழந்தவர்கள் உட்கார்ந்த நிலையில் பாடிப் பிழைப்பதையும், அங்கிருந்த KILLING FIELDS என்னுமிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்டையோட்டையும் கண்டு மிகுந்த அதிர்ச்சி உண்டாயிற்று.
அதேபோன்ற பாதிப்பைத்தான் வியட்நாமிலிருந்த யுத்த கால அருங்காட்சியகமும் உண்டாக்கியது.

“இனிமேல் இங்கெல்லாம் வரவே கூடாது,” என்றேன், அந்த வேதனை அளித்த அலுப்புடன்.

என் மகள், “இங்குள்ள மக்களின் பிழைப்புக்கு நம்மைப்போன்ற உல்லாசப் பயணிகள் பெருமளவு உதவுகிறார்கள். யாருமே வராவிட்டால் என்ன ஆகும்?” என்றாள்.

உண்மைதான். பயணங்கள் மேற்கொள்வதால், நமது அறிவும் விசாலமாகிறது, அந்நியர்களும் பலனடைகிறார்கள்.

`எப்போதும் மகிழ்ச்சி குன்றாத நிலையில்தான் இருப்பேன்!’ என்றால் நடக்கிற காரியமா? துன்பம் அனுபவித்தால்தானே இன்பத்தின் அருமை புரியும்?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *