திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்-21

க. பாலசுப்பிரமணியன்

எந்த வடிவில் இறைவனைக் காணலாம்?

திருமூலர்-1-3

உள்ளத்தில் இறைவனை நிறுத்தி வழிபட நாம் முனைகின்றபொழுது நம்முள்ளே எழும் கேள்வி “எந்த இறைவனை நாம் வழிபட வேண்டும்?” “அவன் உருவம் எவ்வாறு இருக்க வேண்டும்?” “அவன் அமைதியானவனா இல்லை கோபத்தை வெளிக்காட்டிக்கொண்டிருப்பவனா?” என்ற பல தேவையற்ற கேள்விகள் உள்ளே எழுகின்றன. இந்தக் கேள்விகள் அனைத்தும் தெளிவில்லாத மனதின் அறிகுறியாக அமைகின்றது. “உண்மை ஒன்றே; அதைக் காண்பவர்கள் தங்கள் பார்வைக்குத் தகுந்தவாறு விமர்சிக்கின்றார்கள்” என்று நமது மறைகள் அழகாகச் சொல்லுகின்றன.

சுந்தரமூர்த்தி நாயனாரோ இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் கூறுகின்றார்:

பலவுருவுந் தன்னுருவே யாய பெருமான்”

இந்தக் கருத்தை மேலும் தெளிவுறுத்துவதுபோல திருமூலர் விளக்குகின்றார்:

“திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவோர்க்கு

புரையற்   றிருந்தான் புரிசடை யோனே.” 

பட்டினத்தாரோ அவனுடைய எங்கும் நிறைந்த நிலையை விளக்கி அவனை அனுபவபூர்வமாக உணர வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றார்

“நூலா லுணர்வரிய நுண்மையினு  நுண்மையன்காண்

பாலாறு சர்க்கரைபோற் பரந்தபரி பூரணன்காண் “

எவ்வாறு பாலில் கரைந்த சர்க்கரையின் இனிப்பு பால் முழுவதிலும் பரவி நிற்கின்றதோ அதுபோல் அவனும் எங்குமாகி நிற்கின்றான். அப்படிப்பட்ட இறைவனை நாம் எந்த உருவத்தில் காண்பது.? அவன் அணுவுக்குள்ளும் உள்ளானா? அல்லது மாமலைகளிலே இருக்கின்றானா?   இதற்குத் தீர்வு காண்பதுபோல் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்:

ணுவுள் அவனும் அவனுள் அணுவுங்

கணுவுற நின்ற கலப்ப துணரார்

இணையிலி யீச னவனெங்கு மாகித்

தணிவுற நின்றான் சராசரந் தானே..” 

இறைவனின் இந்தப் பரந்த விரிந்த உலகளாவிய உண்மையினை விளக்கும் வகையில் நமக்கு எடுத்துச் சொல்லுகின்றார் மாணிக்க வாசகர்:

அற்புதன் காண்க அனேகன் காண்க

சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க

சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க

பத்தி வலையிற் படுவோன் காண்க

ஒருவ னென்னு மொருவன் காண்க

விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க

அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க

இணைப்பறும் பெருமையி லீசன் காண்க

அரியதில் அரிய அரியோன் காண்க

மருவிய பொருளும் வளர்ப்போன் காண்க

எத்தனை வடிவத்தில் அவன் காட்சி அளிக்கின்றான் ! அவனை ஏதாவது ஒரு வடிவத்தில், ஒரு உருவத்தில் அடைத்து வைக்க முடியுமா?

ஒன்றே பலவாகி நிற்கின்ற இந்த உண்மையை விளக்கும் வண்ணம் வள்ளலாரோ இறைவனை எவ்வாறு காண்கின்றார் எனபதை விளக்குகின்றது கீழ்கண்ட பாடல் :

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ

மறை நான்கின் அடிமுடியும் நீ

மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ

மண்டல மிரண்டேழும் நீ.

பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ

பிறவும் நீ ஒருவன் நீயே

பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ

பெற்ற தாய் தந்தை நீயே.

உணர்வு பூர்வமாக, அறிவு பூர்வமாக நாம் சிந்திக்க முயன்றால் அவனே ஒன்றாகவும் அவனே பலவாகவும் தென்படுவான். எவ்வாறு ஒரே ஒளி பல வண்ணங்களில் கண்களுக்குப் புலப்படுகின்றதோ அவ்வாறே அவனது பல வண்ணங்கள் நம் கண்களுக்குத் தென்படுகின்றன. அனைத்திலும் உள்ளிருந்து அனைத்தையும் கடந்து அனைத்துமாக அனைத்தும் ஒருங்கிணைந்த ஒன்றாகத் தெரிகின்ற அவன் வடிவை நாம் எப்படிப் போற்றினாலென்ன !

தொடருவோம்

Share

About the Author

க. பாலசுப்பிரமணியன்

has written 387 stories on this site.

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]


five + = 10


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.