-மேகலா இராமமூர்த்தி

”பத்தும் பறந்திடும் பசிவந்தால் மறந்திடும்
இளமையில் கொடுமை இந்த வறுமை அம்மா” என்று பாட்டெழுதி வறுமையின் கொடுமையை உருக்கமாய் உலகுக்கு உணர்த்தினார் கவியரசு கண்ணதாசன். வறுமை இளமையில் மட்டுமா கொடுமை? இல்லை… முதுமையிலும் அது கொடுமைதான். ஏன் எந்தப் பருவத்தில் வறுமை வந்தாலும் அது கொடுமைதான்…அவ்வாழ்வே வெறுமைதான்!

பசிவரப் பத்தும் பறந்திடும் என்கிறாரே கவிஞர்…அவை எவை?

“மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந்
தவம்உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த
சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்
திடப்பறந்து போம்”

மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, தானம், தவம், உயர்வு, தொழில்முயற்சி, தேன்மொழி பேசும் பெண்கள்மீது வருங் காதல் ஆகியவையே அப்பத்து. இவ்விவரத்தை நமக்குத் தருவது ஔவையின் ’நல்வழி.’  வறுமை வந்தால் இப்பத்துக்குமே வந்திடும் ஆபத்து!

காரிகையர் மீது வரும் காதலைக் கூடப் பொசுக்கிவிடக் கூடியது பற்றியெரியும் பசித்தீ என்பது பசியின் வீரியத்தைப் பாருக்கு உணர்த்துகின்றது.

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி எனும் பாவி”
என்று பசியின் கொடுமையை உணர்த்தி, அதனைப் பாவி என்று ஏசுகின்றது மணிமேகலைக் காப்பியம். ’இன்மை என ஒரு பாவி’ என்று ஏற்கனவே வள்ளுவர் வறுமையைச் சாடியிருப்பது நாமறிந்ததே. அதைத்தான் தண்டமிழ் ஆசான் சாத்தனார் சற்றே மாற்றிப் பசிப்பிணி எனும் பாவி என்கிறார்.

பிணியென்று வந்துவிட்டால் அதற்கு மருத்துவம் தேவையல்லவா?

பசிப்பிணிக்கு மருத்துவம் அப்பிணியால் பீடிக்கப்பட்டு வாடுவோர்க்கு, வருந்துவோர்க்கு வயிறார உணவளிப்பதே.

வந்தோர்க்கெல்லாம் வரையாது உணவளித்த வள்ளல் ஒருவனைப் ’பசிப்பிணி மருத்துவன்’ என்று புறநானூற்றுப் புலவரொருவர் புகழ்ந்துரைக்கின்றார். அவர் சாமானியர் அல்லர்; சோணாட்டு வேந்தராகிய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் எனும் அரசப் புலவர் அவர்!

யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை
யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானுங் கேட்கும்
பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீ று இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும்
மற்றும்
மற்றும் வினவுதுந் தெற்றெனப்
பசிப்பிணி
மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே. (புறம் – 173: குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்) 

”என் வாழ்நாளையும் பெற்று நீ வாழ்க” என்று சிறுகுடிகிழான் பண்ணனை வாழ்த்தியபடிச் செல்கின்ற பாணர்களே! இதோ என்னருகில் நிற்கும் இந்தப் பாணர்களின் வறுமையை நோக்குங்கள். பழுமரத்தில் பறவைகள் ஆரவாரிப்பதுபோல் ஊணொலி அரவம் எங்கும் கேட்கின்றது. தப்பாது மழை பெய்யுங் காலம்நோக்கித் தம் முட்டைகளைச் சுமந்தவாறு மேட்டுநிலத்தை நோக்கி நகரும் சிற்றெறும்புகளின் வரிசையொழுங்குபோலச் சோறுடைய கையராய்த் தம் சுற்றத்தோடும் சிறுபிள்ளைகளோடும் செல்வோரைக் காண்கின்றபோதும் எம் பசிவருத்தத்தால் மீண்டும் மீண்டும் உம்மைக் கேட்கிறோம்… “பசிப்பிணி மருத்துவன் (சிறுகுடிகிழான் பண்ணன்) இல்லம் பக்கமா… தூரமா… எமக்குக் கூறுங்கள்?” என்று தன்னை ஓர் இரவலனாய் உருவகித்துக் கிள்ளிவளவனே பாடிய அற்புதப் பாடலிது.

அவனால் பசிப்பிணி மருத்துவனாய்ப் பாராட்டப்பெற்றுத் தனக்குரிய வாழ்நாளும் பெற்று வாழ்க என்று வாழ்த்தப்பெறுபவன் சிறுகுடி எனும் சோழநாட்டுச் சிற்றூரில் வசித்துவந்த பண்ணன் எனும் நிலக்கிழான். அரசனையே (அவனினும் எளிய) ஓர்  நிலக்கிழானின் கொடைத்தன்மை பெரிதும் கவர்ந்து, அவன்பால் அன்புகொள்ள வைக்கின்றதென்றால் அக்கிழானின் வண்மை உண்மையிலேயே போற்றத்தக்கதுதான்!   

மன்பதையில் வாழும் மக்கள் யாக்கை உணவின் பிண்டமே ஆகும். ஆதலால் உண்டிகொடுத்தோர் மானுடர்க்கு உயிர்கொடுத்தோரே ஆவர். மாதவிமகள் மணிமேகலை வற்றாது சுரக்கும் அமுதசுரபி எனும் அட்சய பாத்திரங்கொண்டு பசியால் வாடுவோர்க்கெல்லாம் வரையாது உணவூட்டி அறச்செல்வியாய்த் திகழ்ந்தாள்; புகார்நகரச் சிறைக்கோட்டத்தையே அறக்கோட்டமாய் மாற்றினாள் என்று அவள்புகழ் பாடுகின்றது மணிமேகலைக் காப்பியம்.

வளமையுடையோர் இருப்பதுபோலவே வறுமையுடையோரும் வையத்தில் என்றும் இருக்கவே செய்கின்றனர். எல்லாரும் சமநிலை எய்துந்தன்மை ஏட்டளவிலும் பாட்டளவிலுமே இன்றுவரைச் சாத்தியமாகியிருக்கின்றது; நாட்டளவில் இன்னும் அது சாத்தியமாகவில்லை. ஆதலால், தம் செய்வினைப் பயனால் வளமையும் வசதியும் வாய்க்கப்பெற்றோர், வறுமையாளரின் இன்மையைப் போக்குதற்கும் அவர்வாழ்வின் புன்மையை நீக்குதற்கும் தம் செல்வத்தின் சிறுபகுதியையேனும் பயன்படுத்துதல் வேண்டும். ’செல்வத்துப் பயனே ஈதல்’ என்பது சான்றோர் நன்மொழியன்றோ!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *