எழுத்து -3

வேதா.இலங்காதிலகம்

 

 

12987089_1002193306538808_7990803277388296981_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எழுத்து வார்த்தை ஒரு மந்திரம்.

அழுத்தி வரலாறு படைக்கும் சுந்தரம் (நன்மை)

அழுக்கின்றி நீரின் மேலும் வானத்திலும்

முழுக்கவென் தலை மேலும் சுற்றுகிறது.

விழுந்திடாத வண்ணத்துப் பூச்சிச் சிறகசைவு.

எழும் இரகசியக் கனவின் பெருக்கம்.

விழுந்து பொங்கி நனைக்கும் நீரூற்று.

வழுதில்லா மலரின் மலர்வு எழுத்து.

 

என்னிலிருந்து பிறக்கும் எழுத்து விதை

மின்னும்! உலகெங்கும்  பறவையாய் பரவும்!

அன்னியக் காடு, அமைதி வெளி,

சின்னக் கற்பாறை, சதுப்பு நிலமென

என்னவொரு வித்தியாசமின்றிப்  பாரெலாம் பரவுகிறது.

இன்னலற்ற காற்றாக இறுக்கம்  இன்றி

இன்னமுத அன்பாக என்றும் ஊடாடுகிறது.

என்னை வெகு சுதந்திரமாக ஆக்குகிறது.

 

கன்னல் கரும்பென நானெண்ணும் எழுத்து

என் புலன் உயிரிற்குள் புகுந்தது.

கன்னங்கரு இரவிலும் வெள்ளி  தங்கமாய்

மின்னும் பகலிலும் குமிழ்களாய் எழுகிறது.

என்னெழுத்தின் கவர்ச்சியில் நானே மயங்குவேன்.

சின்ன அகக்காயமும் வானவில்லான எழுத்தாகும்.

வன்னிகை (எழுதுகோல்) சுமையல்ல, சுகமான சுமை

வன்னம் (தங்கம்) எழுத்திற்கு பரிசு புகழுண்டு.

 

வின்னியாசம் (பேச்சுத் திறமை)எழுத்தால் தானே நிறைவுறும்.

பொன்னிலவொளி நிறையும் முற்றமாய் எழுத்து

மென்னகையோடு கைபிடித்துலவும் உலக நடைபாதையில்.

என் கவிக்  கதிரின்  பிரகாசம்

அன்வயமாய் (இயைபு) நாளும் மக்களோடு கரையட்டும்.

அன்பித்துக் கனவுகளைக் கைத்தடியாக எழுப்பட்டும்.

இன்பித்துத் துணிவை  ஏற்றட்டும்  எழுத்து.

உன்னதமாயாடும் மயிலின் நடனம் எழுத்து.

 

 

 

Share

About the Author

வேதா இலங்காதிலகம்

has written 37 stories on this site.

(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம் தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை. எனது நூல்களாக 2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு 2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ''..குழந்தைகள் இளையோர் சிறக்க..'' 2007ல் உணர்வுப் பூக்கள் - தொகுப்பு - இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் '' எனது நூல்கள்'' என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம். 1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம். அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ''பெட்டகோ'' எனும் தகுதி பெற்றேன். 14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.

Write a Comment [மறுமொழி இடவும்]


five − = 4


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.