க. பாலசுப்பிரமணியன்

நுண்ணறிவின் பல பரிமாணங்கள் (Multiple Intelligence)

education-1-1-1

நுண்ணறிவைப் பற்றிய ஆராய்ச்சி உலகளாவிய பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது கற்றலைப் பற்றிய ஆராய்ச்சி மையங்கள் (Centers of Educational Research) மூளை – நரம்பியல் பற்றிய ஆராய்ச்சி நிலையங்கள்,(cognitive Research centers) மனநலம் பற்றிய ஆராய்ச்சி மையங்கள்(Mental Health and psychometric research centers) போன்ற பல இடங்களில் நுண்ணறிவு மூளையின் இயற்பியலைச் சார்ந்ததா அல்லது வேறு காரணங்களின் தாக்கத்தால் நுண்ணறிவின் தன்மையும் திறமையும் மாறுபடுகின்றதா என்ற பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. நுண்ணறிவைப் பொதுவாக ஒரு அறிவுசால் திறனாக (cognitive intelligence) மட்டும் கருதப்பட்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மூலமாக ஒருவருக்கு அறிவுசால் நுண்ணறிவு இருக்கும் பட்சத்தில் அதன் தாக்கம் பல மூளைத் திறன்களில் வெளிப்படுகிறது என்றும், இதன் காரணமாக ஒருவருக்கு ஏதாவது ஒரு அறிவு நுட்பத்தில் நுண்ணறிவின் அடையாளங்கள் இருக்கும் பட்சத்தில் அது மற்ற கற்றல் திறன்களிலும் வேறுபட்ட பரிமாணங்களில் வெளிப்படும் என்றும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறிவுசால் நுண்ணறிவை மதிப்பீடு (Assessment of Intelligence Quotient) செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்கான மதிப்பீட்டுக்கு குறியீடுகள் தயாரிக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வரை இந்தக் குறியீடுகள் ஒரு தனி மனிதனின், ஒரு மாணவனின், ஒரு படைப்பாளியின் சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் அடையாளங்களாகக் காட்டப்பட்டன

ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner) என்ற ஒரு அமெரிக்க மூளை மற்றும் உளநல மேதை தன்னுடைய பல ஆராய்ச்சிகள் மூலமாக “அறிவுசால் நுண்ணறிவு” என்பது எவ்வளவு சிறப்பாக அமைந்தாலும் ஒரு மாணவனுடைய பன்முக அறிவித் திறன்களை (Multiple achievements) வெளிப்படுத்த அது போதுமானதாக இல்லை என்ற ஒரு கருத்தைத் தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளின் சாதனையாளர்களின் மற்றும் சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசி ஆராய்ந்து இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான நுண்ணறிவு இருந்தது என்ற ஒரு கருத்தை முன் வைத்தார். ஆகவே நுண்ணறிவுக்குப் பல பரிமாணங்கள் உண்டென்றும் அவைகளை பொதுவாக ஏழு வகைகளாகப் பிரிக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை வெளியிட்டார்.

அது மட்டுமல்ல. கால நேரங்களுக்குத் தகுந்தவரும், சமுதாய விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கேற்றவாறும் கற்றலிலும் மூளை வளர்ச்சி மற்றும் செயல்களிலும் நுண்ணறிவின் செயல்பாடுகளிலும் அதன் அமைப்புகளிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு என்றும், இப்போது சொல்லப்பட்ட ஏழு நுண்ணறிவுகளைத் தவிர மேலும் பல நுண்ணறிவுகள் காலப்போக்கில் வளர செயல்பட வாய்ப்புக்கள் உண்டு என்ற ஒரு கருத்தையும் முன் வைத்தார்

அவர் அறிவித்த ஏழு நுண்ணறிவுகள் கீழ்க்கண்டவை :

1. இசைசார்ந்த நுண்ணறிவு (Musical Intelligence)
2. மொழிசார்ந்த நுண்ணறிவு (Linguistic Intelligence)
3. தர்க்கரீதியான நுண்ணறிவு (Logical Intelligence)
4. இயக்க (தசை) சார்ந்த நுண்ணறிவு (Kinesthetic Intelligence)
5. தனிப்பட்ட உறவுசார்ந்த நுண்ணறிவு (inter-personal intelligence)
6. தனிப்பட்டவரின் உள்ளுணர்வுசார்ந்த நுண்ணறிவு (Intra-personal intelligence)
7. காட்சி-வெளி சார்ந்த நுண்ணறிவு (visual-spatial intelligence)

இதன் தொடர்ச்சியாக மேலும் இரண்டு நுண்ணறிவுகள் இத்துடன் இணைக்கப்பட்டன.

அவையாவன:

8.. இயற்கைசார்ந்த நுண்ணறிவு (Naturalistic Intelligence)
9. இருத்தலியல் சார்ந்த நுண்ணறிவு (Existential Intelligence)

இதன் தொடர்ச்சியாக டேனியல் கோல்மான் என்ற ஒரு உணர்வியல் மற்றும் மனநல ஆராய்ச்சியாளர் பத்தாவது நுண்ணறிவினைப் பற்றிய விளக்கம் தந்தார்.

அது

10. சமூகம் சார்ந்த நுண்ணறிவு (Social Intelligence)

மேற்கூறப்பட்ட பத்து வகையான நுண்ணறிவுகளைப் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளும் அதற்கான வறைபாடுகளும் கற்றல் முறைபாடுகளும் விளக்கமாக அளிக்கப்பட்டு; கற்றல் முறைகளிலும் அறிதல் -புரிதல் செயல்களை வேகப்படுத்தவும் மேன்மைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

காலப்போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னிறுத்தி மேலும் சில நுண்ணறிவுத் திறன்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அவற்றில் சில :

1. கணினிசார் நுண்ணறிவு (Digital Intelligence)
2. பாலியல்சார் நுண்ணறிவு (Sexual Intelligence)

ஆயினும், இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாத சில மனநல மூளையியல் வல்லுனர்கள் நுண்ணறிவு கருத்தினை வலியுறுத்தி இந்தக் கோட்பாடுகளை புறக்கணித்தும் வருகின்றனர். இருப்பினும் உலகத்தின் நாடுகளில் இந்தக் கோட்பாடுகளைத் தழுவிய கல்வித் திட்டங்களும் பரிந்துரைகளும் (curricular framework) பரிசீலிக்கப்பட்டு நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த வெவ்வேறு விதமான நுண்ணறிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன, பள்ளிகளிலும் வீடுகளிலும் இந்தக் கருத்தை அறிந்து எவ்வாறு நம் குழந்தைச் செல்வங்களின் வாழ்க்கையையும் கற்றலையும் மேம்படுத்தலாம் என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *