கிரேசி மோகன்
————————————————–
துங்கா நதிக்கரைச் சங்காய் சிருங்கேரி
சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)

சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)

கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
கிரகங்கள் கூப்பும் கரம்….(25)

வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
முளைத்திடு முண்டக மா….(26)

உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
ஓசை சதங்கையொலி ஓம்….(27)

நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *