சுதந்திரதின நல்வாழ்த்துகள் !

unnamed

 எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

 
unnamed (4)ஆன்மீகக் கொள்கைதனை அரவணைக்கும் பாரதமே
அஹிம்சையினை உள்ளுணர்வாய் ஆக்கிநிற்கும் பாரதமே
அகிலத்தில் பலநிலையில் வளர்ந்துவரும் பாரதமே
ஆனந்த சுதந்திரத்தை அமுதமெனக் காத்திடுவாய் !

பலபேரின் கண்ணீரால் எழுச்சிபெற்ற பாரதமே
பலபிரிவு மக்களையும் இணைத்துநிற்கும் பாரதமே
நிலமீது பலசண்டை நிகழாமல் இருப்பதற்காய்
பலநீதி இலக்கியங்கள் படைத்தளித்தாய் உலகினுக்கே !

சர்வவுமே இறைவனென சாற்றிநிற்கும் பாரதமே
சமத்துவத்தை நிலைநிறுத்த தானுழைக்கும் பாரதமே
இவ்வுலகை இரட்சிக்க ஞானிகளை ஈந்தளித்தாய்
இவ்வுலக மாந்தரெலாம் இந்தியாவை நோக்குகிறார் !

வேதமொடு சாத்திரங்கள் வியந்துவிடும் இலக்கியங்கள்
பாரதத்தாய் உலகினுக்கு ஈந்தளித்தாள் பொக்கிஷமாய்
யார்வந்து போனாலும் நலம்விளைக்கும் எனும்நினைப்பை
நாநிலத்துக் கீந்தளிக்கும் பாரதத்தாய் வாழியவே !

புத்தர்காந்தி புனிதநபி புதுவெளிச்சம் யேசுபிரான்
அத்தனைபேர் கொள்கைகளும் அடக்கிநிற்கும் பாரதமே
உத்தமர்கள் பலபேர்கள் உன்மடியில் பிறந்தார்கள்
உயர்வான சுதந்திரத்தை உயிர்ப்புடனே வைத்திடுவாய் !

இமையும்முதல் குமரிவரை எல்லையினைக் கொண்டுள்ளாய்
இயலாமை எனும்நினைப்பை இன்மையாக்க முனைகின்றாய்
தவவலிமை மிக்கோரால் தான்வரங்கள் பெற்றுள்ளாய்
தகைமைநிறை சுதந்திரத்தை தக்கபடி காத்திடுவாய் !

சுதந்திரமாய் உலவுதற்குச் சுதந்திரத்தை விட்டிடுவோம்
சுதந்திரத்தை யாவருமே சுவாசிக்கச் செய்துநிற்போம்
சுதந்திரத்தை சுகமாக சுவையாக்க முனைந்நிதிடுவோம்
சுதந்திரத்தைக் குலைப்பார்க்குச் சுதந்திரத்தை உணர்திடுவோம் !

ஆனந்த சுதந்திரத்தை அகமகிழக் கொண்டாட
ஆனந்தப் பூங்காவை அமைத்திடுவோம் பாரதத்தில்
ஆனந்தம் எனுமுணர்வை அனைவருமே பெற்றுவிட
அன்புபாசம் நேசமொடு அஹிம்சைதனை அரவணைப்போம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *