செண்பக ஜெகதீசன்

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லைப்
பொச்சாப் புடையார்க்கு நன்கு. (திருக்குறள் -534: பொச்சாவாமை) 

புதுக் கவிதையில்…

கோட்டை கொத்தளத்தால்
பயனேதுமில்லை,
பயம்கொண்டிருந்தால் நெஞ்சிலே… 

அதுபோல
மறதியுடையோர் பெற்றிருக்கும்
பெருஞ்செல்லவத்தினாலும்
பயனேதுமில்லை…! 

குறும்பாவில்…

பயமுடையோர் கொண்ட கோட்டைகளாலும்,
மறதியுடையோர் பெற்ற பெருஞ்செல்வத்தாலும்
பயனேதுமில்லை…! 

மரபுக் கவிதையில்…

நெஞ்சில் பயமது கொண்டமன்னன்
     -நாட்டிற் கரண்பல அமைத்தாலும்,
கொஞ்சமும் அவற்றால் பயனில்லை
     -கோட்டை கொத்தளம் வீணாமே,
மிஞ்சிடும் செல்வம் கொண்டோரும்
      -மறதி தன்னைக் கொண்டிருந்தால்,
எஞ்சிடும் பயனதால் ஏதுமில்லை
      -எல்லாச் செல்வமும் வீண்தானே…! 

லிமரைக்கூ…

பயந்தவனுக்கு உதவிடாது கோட்டை,
மறதியுடையோன் செல்வமும் பயன்தராது
உறுதியாய்க் கொண்டுவரும் கேட்டை…! 

கிராமிய பாணியில்…

மறக்காத மறக்காத
எதயுமே எளிதா மறக்காத… 

காடுமல கோட்டயெல்லாம்
காப்பாத்தாது நாட்ட,
பயந்தே ஓடுற ராசாவுக்கு
இதால
பயனா ஏதும் கெடயாதே… 

அதுபோல
மறந்தேபோகிற மனுசங்கிட்ட
மலயாச் செல்வஞ் சேந்தாலும்,
அதுனால
பயனா எதுவும் சேராதே… 

அதால,
மறக்காத மறக்காத
எதயுமே எளிதா மறக்காத…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *