**********************************************

“ஈழத்து இலக்கியப் பரப்பு”
**********************************************
வைத்திய கலாநிதி
தியாகராஜ ஐயர் ஞானசேகரன்
(தி. ஞானசேகரன் – பகுதி-III)
*********************************

2015 ஞானம் 175 ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்

GNANAM - 200J

06.06.2000 அன்று தனது முதலாவது இதழை வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 175ஆவது இதழ் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழாக 976 பக்கங்களில் வெளிவந்துள்ளது.

தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் படைப்பாளிகளை எவ்வித வேறுபாடுகளுமின்றி அரவணைத்துப் பயணிக்கும் இச்சஞ்சிகையின் 175ஆவது இதழில், ஈழத்தமிழரின் புலம்பெயர் வாழ்வியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும்,
50 கட்டுரைகள்,
127 கவிதைகள்,
85 சிறுகதைகள்,
22 ஓவியங்கள்
என்பன இடம்பெற்றுள்ளன.

2005 இந்துமதம் என்ன சொல்கிறது (1ம் பாகம்)

சமயக் கருத்தரங்குகள் செயலமர்வுகள் பலவற்றில் ஆசிரியர் அவ்வப்போது முன்வைத்த கருத்துக்கள் இந்நூலாக்கத்துக்கு வழிகோலியுள்ளன.

இந்துமதம் ஓர் அறிமுகம்,
திருக்கோயில்,
திருக்கோயில் வழிபாடு,
திருவுருவ வழிபாடு,
பரிவாரத் தெய்வங்கள்,
திருக்கோயிற் பூசைகள்,
அபிஷேகம் பூசைக்குரிய சாதனங்கள்,
இறைவழிபாட்டிற்குரிய ஏனைய முறைகள்,
ஆன்மார்த்த கிரியைகள்,
அபரக்கிரியைகள்,
விரதம், பண்டிகைகள்,
புண்ணிய காலங்கள்,
சமய நடைமுறை விளக்கங்கள்,
தல விசேடங்கள்,
ஆகியவற்றை எளிதாக விளங்கவைக்கும் நூல்.

இந்து கலாசார அமைச்சின் பரிசினைப்பெற்றது.

2005 இந்துமதம்என்ன சொல்கிறது (2ம் பாகம்)

மங்கலப் பொருட்களின் மகத்துவம்.
இந்து சமயிகளின் வாழ்க்கையானது
கிரியைகள், சடங்குகள், அனுட்டானங்கள், சம்பிரதாயங்கள், ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

இவற்றைக் கடைப்பிடிக்குமிடத்து பயன்படுத்தப்படும் பொருட்கள் மங்கலப் பொருட்களாகும்.

இத்தகைய மங்கலப் பொருட்கள் யாவை?
அவற்றின் தாற்பரியம் எத்தகையது?
அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
அவற்றிற்குரிய சமய தத்துவப் பின்னணி யாது?
போன்ற விடயங்கள் இந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளன.

2014 ஸ்ரீ ராமகானசபா பவளவிழா மலர் நவம்பர் 2014.

சிற்றிதழ் உலகத்தின் சிகரம் இது!!
சிற்றிதழ் ஒன்றை ஆயிரம் பக்கங்களில்
அச்சில் இட்டு நிகழ்த்திக் காட்டிய சாதனை இது!!

இதுவரை யாரும் சாதித்ததுமில்லை!!
இனிமேலும் எவரும் சாதிக்கப் போவதுமில்லை!!!

ஈழத்து இலக்கியப் பரப்பினை ஆளுகின்ற
இந்த ஆளுமைகளின் சாதனைகளை எடுத்துச் சொல்வதன்
ஞானம் சிற்றிதழ் தன்னை ஏனைய சிற்றிதழ் தரத்திலிருந்து நிமிர்ந்து நிற்கிறது.

இதன் ஆழமும் அகலமும் கண்டு
நாமும் வியந்து நிற்கின்றோம்!

2000ஆம் ஆண்டு தொடக்கம் 2017 தைமாதம் வரை 200வது இதழ் என்ற மாபெரும் சாதனையை நிறுவிக்காட்டிய பின்னும்
சளைக்காது தொடர்ந்து வீறுநடைபோடுகிறது.

இந்த இதழின் அசுர வளர்ச்ச்சிக்கு அதன் ஆசிரியரின் கடின உழைப்பே பெரிய மூலதனம் ஆகின்றது.

இலங்கையில் டொமினிக்ஜீவாவின் மல்லிகை தொடர்ச்சியாக வெளியாகி 50 ஆண்டுகளை நெருங்குவதற்கு முன்பே ஆசிரியராலேயே    நிறுத்தப்பட்டுவிட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கலாமணி பரணீதரன் நடத்தும்
ஜீவநதி 100வது இதழை பெண்கள் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது.

கிழக்கிலிருந்து மகுடம்,
அநுராதபுரத்திலிருந்து படிகள்,
யாழ்ப்பாணத்திலிருந்து புதியசொல்
என்பன வெளியாகின்றன.
மேலும் சில இதழ்கள் அங்கு வெளிவரக்கூடும்.

ஞானம் இதழின் 200 ஆவது இதழைப்பார்த்தால்,
அதன் பரிணாம வளர்ச்சியை கட்டம் கட்டமாக
நாம் அவதானிக்க முடிகிறது.

” ஜூன் 2000 ஆம் ஆண்டில் ‘ஞானம்’ சஞ்சிகையைத்தொடங்கிய நாம், அன்றிலிருந்து நிதானமாகப்பயணித்து
50 ஆம் இதழை ‘பொன்மலரா’கத் தந்தோம்.

100 ஆவது இதழை ‘ஈழத்து நவீன இலக்கியச்சிறப்பிதழா’க வெளிக்கொணர்ந்ததன் வாயிலாக தமிழிலக்கியப்பரப்பில் எம்மை அடையாளப்படுத்திக்கொண்டோம்.

150 ஆவது இதழை ‘ ஈழத்து போர் இலக்கியச்சிறப்பிதழா’கவும்
175 ஆவது இதழை ‘ஈழத்து புலம்பெயர் இலக்கியச்சிறப்பிதழா’கவும் தொகுத்தளித்து உலகத்தமிழிலக்கியத்தில் எமக்கான வகிபாகத்தை வகுத்துக்கொண்டோம்.

பூமிப்பந்தெங்கும் பரந்து திணைகள் கடந்துநிற்கும் தமிழிலக்கிய வெளிக்குள், ‘ஈழத்துத்தமிழ் நவீன இலக்கிய வெளி – நேர்காணல்’ எனும் இப்பெருந்தொகுப்பை இணைத்து எம்மை மேலும் விரிவுபடுத்திக்கொள்கின்றோம்.

இவையனைத்தும் தமிழன்னையின் பாதங்களுக்கு சமர்ப்பணம்!”

என்று தமது  இலக்கியத் தொடர்பயணத்தில் தாம் வெளியிட்டுவரும் ஞானம் இதழின் அழுத்தமான அடையாளத்தை ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் இச்சிறப்பிதழின் தொடக்கத்தில் சொல்கிறார்.

அவர் இதன்மூலம் தம்மை மாத்திரம் விரிவுபடுத்திக்கொள்ளவில்லை. வாசகர்களையும் படைப்பிலக்கியவாதிகளையும் விரிவுபடுத்தியுள்ளார்
என்பதே எமது கருத்தாகும்.

ஈழத்தின் மூத்த – இளம் தலைமுறையினரின் கருத்துக்களின் சங்கமமாகவே இந்த நேர்காணல் தொகுப்பு அமைந்திருக்கிறது.

இதற்கு ஞானம் ஆசிரியர் இட்டிருக்கும் ” புரிதலும் பகிர்தலும்” என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானதே.

தனிப்பட்ட  விருப்பு வெறுப்புகளுடன் இயங்கும் எம்மவர்களிடத்தில் வாழும் படைப்பாளிகளும், இலக்கியப்பேராசிரியர்களும், ஊடகவியலாளர்களும் இந்த விருப்பு – வெறுப்புகளுக்கு ஆளானவர்கள்தான்.

அல்லது பலியானவர்கள்தான்.
அவர்கள்  அனைவரையும் கருத்தியலில் ஒன்றிணைப்பது
சாத்தியமல்ல.

கருத்தியல் முரண்பாடுகள்,
சித்தாந்த கோட்பாட்டுச்சிந்தனைகள்,
இலக்கியத்தில் இஸம் தேடும் போக்கு,
மரபுக்கும் நவீனத்துவத்திற்கும் இடையே நடக்கும்
மோதல்கள்,
முதலான இன்னபல காரணங்களினால் வரக்கூடிய
மன அழுத்தங்களையும்  தாங்கிக்கொண்டு இந்தப்பெரிய
அரிய தொகுப்பை  வெளிக்கொணர்வது  சாதனைதான்.

இந்த தொகுப்பிலுள்ள ஆளுமைகளை வரிசைப்படுத்துமிடத்து:

எஸ்.பொ, டொமினிக்ஜீவா, நுஃமான், செ. யோகநாதன்,
வ. அ. இராசரத்தினம், அருண். விஜயராணி, கே.எஸ். சிவகுமாரன், பொன். பூலோகசிங்கம், கவிஞர் அம்பி, கலாமணி, முருகபூபதி,
சி. தில்லைநாதன், வரதர், கே. கணேஷ், சிற்பி சரவணபவன், சிவத்தம்பி, நா. சோமகாந்தன்,  சித்திரலேகா  மௌனகுரு,  புதுவை இரத்தினதுரை, வீ. அரசு,  பஞ்சாட்சர சர்மா,  பாலசிங்கம் பிரபாகரன்,
செங்கை ஆழியான்,  அனந்தராசன்,  தெளிவத்தை  ஜோசப்,
துவாரகன்,  உமா ஶ்ரீதரன்,  சபா. ஜெயராசா,  வீ. தனபாலசிங்கம்,
மு.பொன்னம்பலம்,  தெ. மதுசூதனன்,  ஷோபா சக்தி,
குழந்தை  ம. சண்முகலிங்கம்,  கார்த்திகா கணேசர்,
முல்லை அமுதன்,  செ. கணேசலிங்கன்,  சோ. பத்மநாதன், செ.யோகராசா,  தெணியான்,  அ.முத்துலிங்கம்,
ஜின்னாஹ் ஷரிபுத்தீன்,  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்,
அகளங்கன்,  நூலகர் என். செல்வராஜா,  அன்னலட்சுமி  இராஜதுரை,
இளைய அப்துல்லா,  கே.ஆர். டேவிட்,  வீ. ஜீவகுமாரன்,
அ. சண்முகதாஸ்,  இரா. உதயணன், துரை மனோகரன்,
ஆசி. கந்தராஜா,  நா. சுப்பிரமணியம்,  சோ. சந்திரசேகரம்.

இவர்களில் சிலர் இலங்கையில், சிலர் வெளிநாடுகளில்,
சிலர் இன்று எம்மத்தியில் இல்லை.

சிலர் பேராசிரியர்கள். சிலர் ஊடகவியலாளர்கள்.
சிலர் கலைஞர்கள், சிலர் கவிஞர்கள்,
சிலர் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள்.

இவர்கள் அனைவரையும் நேரிலும் சந்தித்து,  தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்  தொடர்பிலும் பெற்றுக்கொண்டு பதிவுசெய்யப்பட்ட நேர்காணல்கள்.
சில சந்திப்புகளை ஞானம் ஆசிரியரே சந்தித்தும் தொடர்புகொண்டும் எழுதயிருக்கிறார்.

” குறிப்பிட்டவருடன்  தொடர்புகொண்டு நேர்காணலை  எடுத்து அனுப்புமாறு ”  சிலரைப்  பணித்ததன் அடிப்படையில் பெறப்பட்டவையும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.

சுருக்கமாகச்சொல்வதாயின் ஞானம் ஆசிரியர் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்களைக் கடந்தே  இந்த அரிய இலக்கியச்சேவையைச் செய்திருக்கிறார் எனக்கருதமுடிகிறது.
இந்தச்சேவை  இதர  இதழாசிரியர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும்  ஒரு  சிறந்த  முன்னுதாரணம்.

ஞானம் புரிதலும் பகிர்தலும், வாசகர்களை கலை,
இலக்கியத்தின் பலதரப்பட்ட  திசைநோக்கி  நகரச்செய்திருக்கிறது.

தீவிர இலக்கிய வாசகர்களுக்கு   மாத்திரமல்ல,
படைப்பிலக்கியவாதிகளுக்கும் தெரியாத   பல  தகவல்களின்
சுரங்கமாகவும்  இந்தத்  தொகுப்பு  மிளிர்கிறது.

நேர்காணல்களை பெற்றவர்கள் யார்,
ஞானத்தில் பதிவுசெய்யப்பட்ட   ஆண்டு ,
முதலான விபரங்களுடன் உடனுக்குடன் வந்த எதிர்வினைகளும்  தரப்பட்டுள்ளன.

” புலம்பெயர்ந்த  ஒரு  காலகட்ட  எழுத்தாளர்கள்  சாதனை புரிகிறார்கள்.

ஷோபா சக்தி,  கருணாகரமூர்த்தி,  அ.முத்துலிங்கம், கலாமோகன்  போன்றோர்  மிகவும்  ஆழமாகவும்  சிறப்பாகவும் இலக்கியம்  படைக்கிறார்கள்.

ஆசிரியர்  ஞானசேகரனின்  நீண்ட கால உழைப்பு வீண்போகாது.
அவர்  சொல்வதுபோல், நாமும் பூமிப்பந்தெங்கும் பரந்து
திணைகள் கடந்துநிற்கும் தமிழிலக்கிய வெளிக்குள்,
இணைத்து  எம்மை  மேலும் விரிவுபடுத்திக்கொள்கின்றோம்.”

இனிவரும் தொடர்களில் ஒவ்வொரு ஆளுமைகளின் நேர்காணல்கள், மற்றும் அவர்களின் இலக்கியக் கருத்துக்கள் பற்றியும் அறிந்துகொள்வோம்.

வேர்களும் விழுதுகளும் இன்னும் வளரும்….

****************************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
25/08/2017

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *