க. பாலசுப்பிரமணியன்

 தர்க்கரீதியான நுண்ணறிவு (LOGICAL INTELLIGENCE)

education

மொழிசார்ந்த நுண்ணறிவு வாழ்க்கையின் வெற்றிக்கு எவ்வளவு இன்றியமையாததாக இருக்கின்றதோ அதுபோல தர்க்கரீதியான நுண்ணறிவும் வாழ்க்கையின் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது. மொழிசார் நுண்ணறிவு எவ்வாறு வலது மூளையின் ஆக்கத்திறன்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளதோ அதுபோல் தர்க்கரீதியான நுண்ணறிவு இடது மூளையின் ஆக்கத்திறன்களின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றது. இந்த நுண்ணறிவு ஒரு பொருள், ஒரு கருத்து அல்லது ஒரு செயலின் காரண காரியங்களை அறிந்துகொள்வதற்கும் அவைகளின் இடையே உள்ள தொடர்புகள் விளைவுகள், நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை அறிந்துகொள்வதற்கும் அவற்றை நோக்கித் தேவையான செயற்பாடுகளுக்கான வழிமுறைகளை வகுப்பதற்கும் மிகவும் தேவையானது.

தர்க்கரீதியான நுண்ணறிவே நாம் ஒரு செயலை ஏன் செய்கின்றோம்  எவ்வாறு  செய்ய வேண்டும் என்பதற்கான கேள்வி- பதில்களையும் அதனால் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தான் வாழ்கின்ற சூழ்நிலைகளுக்கும் ஏற்படும் பலவித பாதிப்புக்களைத் தெரிந்து அறிந்து செயல்பட உதவுகின்றது. ஆனால் இந்த நுண்ணறிவு நமக்கு கிடைப்பதற்கு நமது மூளை என்னென செயல்களைச் செய்கின்றது, எவ்வாறு மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்து இடம் பொருள் காட்சி உறவு நிலைகள் போன்ற பல பரிமாணங்களை ஆராய்ந்து நமக்கு கண்ணிமைக்கும் நேரத்தைவிட குறைந்த நேரத்தில் அறிவிக்கின்றது என்று பார்ப்போமானால் நாம் வியப்பின் உச்ச நிலையை அடைந்து விடுவோம்.`

இந்த நுண்ணறிவின் வல்லமை பெற்றவர்கள் கணிதம் அறிவியல், தொழில்நுட்பம், கணினி, கைத்திறன்கள், ஆராய்ச்சி, சட்டம், வாதங்கள், பட்டையக் கணக், தொழில்துறை உற்பத்தி போன்ற பல துறைகளில் விருப்பமுள்ளவர்களாகவும் மேன்மைபெற்றவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு கருத்தையும் கோட்பாடுகளையும் செயல்முறைகளையும் மேல்நோக்காக எடுத்துக் கொள்ளாமலும், கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும், அதைத் தர்க்கரீதியாக அலசி ஆராய்ந்து அது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று அறிந்து செய்யப்படக்கூடியவர்கள். இவர்களை பொதுவாக Number Smart (எண் நுண்ணறிவு) உள்ளவர்கள் என்று கூறுவார்கள்.

இந்த நுண்ணறிவின் வல்லமை பெற்றவர்களின் சில திறன்களாவன:

  1. எண்களோடு விளையாடுதல்
  2. புதிர்களை விடுவித்தல்
  3. ஆராய்ச்சிப்பாதைகளுக்கு வழிவகுத்தல்
  4. எண்-கருத்துக்களுக்கான குறியீட்டு முறைகளை வகுத்தல்
  5. பாய்வு விளக்கப்படங்கள் தயாரித்தல்
  6. கணினி நிரல்கள் தயாரித்தல்
  7. வரவு-செலவு திட்டங்கள் வகுத்தல், கணித்தல், கண்காணித்தல்
  8. சட்ட விளக்கங்கள் அளித்தல்
  9. கேள்விக்கணைகளைத் தொடுத்தல்
  10. அளவீடு மற்றும் மதிப்பேடு செய்தல்

இதைப்போன்ற பல திறன்களில் வல்லமை பெற்றவர்கள் இந்த நுண்ணறிவுக்குச் சான்றாக விளங்குகின்றனர். இந்த வகையைச் சார்ந்த சில நபர்கள் :

  1. 1. கணித மேதை ராமானுஜம்
  2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
  3. சர் ஐசக் நியூட்டன்
  4. சார்லஸ் டாரவின்
  5. பொறியியல் வல்லுநர் எம். விஸ்வேஸ்வரய்யா

இந்த வல்லமையை நாம் குழந்தைகளுக்குச் சிறிய வயது முதற்கொண்டே வளர்க்க வேண்டும். இளம் வயதில் இந்த தர்க்கரீதியான சிந்தனையை நாம் வளர்க்கத் தவறி விட்டால் அவர்களுக்கு வாழ்க்கையில் பல சந்தர்பங்களில் சவால்களைச் சந்திக்க நேரிடும். கோர்வையான சிந்தனை, தொடர் சிந்துக்கும் திறன், காரண-காரிய சிந்தனைத் திறன்கள், குறிக்கோளுடனும் வழிநெறிகளுடனும் சிந்தித்தல் ஆகிய பல திறன்கள் அவர்களுக்குப் பிற காலத்தில் பயன்படுத்த வேண்டிய நேரங்களில் தடுமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

பள்ளிகளில் இந்தத் திறனை வளர்க்க சில சிறிய எளிதான செயல்களை பின்பற்றலாம் :

  1. எண்ணறிவுத் திறன்கள் (Skills of Nunmeracy)
  2. வரிசைமுறைத் திறன்கள் (Skills of Sequencing)
  3. தொடர்புச் சிந்தனைத் திறன்கள் (Skills of correlation
  4. ஒப்பீட்டுத் திறன்கள் (Skills of comparison_
  5. அமைப்புத் திறன்கள் ( Skills of Organization)
  6. ஆய்வுத் திறன்கள் (Skills of reseaching)
  7. பகுப்பீட்டுத் திறன்கள் (Skills of differentiation)
  8. இணைச்சிந்தனைத் திறன்கள் (Skills of Parallel thinking_
  9. பகுப்பாய்வுச் சிந்தைந் திறன்கள் (Skills of Rational Thinking)
  10. பக்கவாட்டுச் சிந்தனைத் திறன்கள் (Skills of Lateral Thinking)
  11. வகையீட்டுத் திறன்கள் (Skills of differentiation)
  12. வடிவியல் திறன்கள் (Skills of geometry)
  13. வரைவுத் திறன்கள் (Skills of graphics)

இதைப்போன்ற பலவகையான திறன்கள் தர்க்கரீதியான நுண்ணறிவை வளர்க்கவும் மேம்படுத்தவும் உதவும். இந்தத் திறன்களை பள்ளிகளில் மட்டுமல்ல வீடுகளிலும் பெற்றோர்கள் தங்கள் குழந்ந்தைகளோடு உறவாடும் நேரத்திலும் விளையாட்டாகக் கூட வளர்க்க முடியும். இந்த நுண்ணறிவு மற்ற எல்லாவிதமான நுண்ணறிவுகளை மேம்படுத்தவும் மற்றும் ஒரு தனி மனிதனின் செயலாற்றல் முறைகளை வளப்படுத்தவும் உதவும்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *