நிர்மலா ராகவன்

தந்தையும் மகளும்

நலம்

`உங்கள் தந்தையைப்பற்றி சில வாக்கியங்களை அமையுங்கள்!’ என்று பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் கேட்டிருந்தார்கள், மலேசிய ஆங்கில தினசரி ஒன்றில்.

எல்லாச் சிறுமிகளும் ஒரேமாதிரிதான் எழுதியிருந்தார்கள்: `என் அப்பா வெளியில் அழைத்துப்போவார். எனக்காக நிறையச் செலவழிப்பார்! நான் கேட்பதையெல்லாம் வாங்கிக்கொடுப்பார்!’

அப்பா என்றால் பணம் கொடுக்கும் இயந்திரம் என்றுதான் குழந்தைகளின் மனதில் படிந்திருக்கிறது. இதைவிட வெளிப்படையாகத் தனது அன்பைக் காட்டிக்கொள்ள தந்தையால் முடியாதா?

சில இல்லங்களில், “அப்பா ஆபீஸிலிருந்து வரட்டும்! ஒனக்கு இருக்கு!” என்று அம்மா குழந்தைகளை மிரட்டிவைப்பாள்.

அப்பா என்றால் மரியாதை அளிக்கப் பழக்க வேண்டும். பயமுறுத்த அவர் என்ன பூதமா?

`அன்புக்குத் தாய், அறிவுக்குத் தந்தை’ என்று சொல்வதுண்டு.

அப்படியானால், தாய்க்கு அறிவு புகட்டத் தெரியாதா, இல்லை, தந்தைக்குத்தான் அன்பே கிடையாதா?

பிள்ளைகளிடம் தங்கள் அன்பை விதவிதமாகக் காட்டுவார்கள் ஆண்கள். அன்பு என்று அவர்கள் நினைப்பதே சில சமயங்களில் அதீதமாகிவிடுகிறது.

கதை

மரீனா நான்கு அண்ணன்மார்களுக்குப்பின் பிறந்ததால் பெற்றோர் இருவருக்குமே அலாதி செல்லம். `நான் மிக உயர்த்தி, அதனால்தான் கொண்டாடுகிறார்கள்,’ என்ற எண்ணத்தில் திமிர் எழுந்தது. பதினைந்து வயதுப் பெண்ணை அப்பா கையைப் பிடித்து அழைத்துப் போவார், கும்பலே இல்லாத இடத்தில்கூட! பள்ளிக்கூடத்திலும் எல்லா பொறுப்புகளையும் தட்டிக்கழிப்பாள் என் மாணவியான அவள். அவளை ஒரு வேலையும் செய்ய விடாததால், சோம்பல் மிகுந்திருந்தது. அண்ணன்களை மரியாதை இல்லாது நடத்துவாள். ஆனால் யாருக்கும் அவளைக் கண்டிக்கத் தோன்றவில்லை. அப்பா செல்லமாயிற்றே! அதனால் பொறுத்துப்போனார்கள்.

இந்தமாதிரி வளர்க்கப்படும் பெண்கள் கல்யாணமானாலோ, அல்லது உத்தியோகத்தில் அமர்ந்தாலோ, `நீதான் ராணி!’ என்பதுபோல் தம் வீட்டில் அனுபவித்ததை எதிர்பார்க்கிறார்கள். கிடைக்காதபோது, சண்டை போடுகிறார்கள். இல்லையேல், ஒரேயடியாக ஒடுங்கிவிடுகிறார்கள்.

எல்லாப் பெண்களும் அழுமூஞ்சிகள்!

இன்னொருவருக்கு ஒரே ஆண்குழந்தைதான். ஒன்றரை வயதான என் மகள் அழுதபோது, “இந்தப் பெண்களே இப்படித்தான்! எல்லாவற்றிற்கும் அழுவார்கள்!” என்று முகத்தைச் சுளுக்கினார். அவரது மகன் அந்த வயதில் அழுதிருக்க மாட்டானா, என்ன!

வயதான தந்தை

எங்கள் குடும்ப நண்பரான சிங் ஐம்பது வயதில் கல்யாணம் செய்துகொண்டார்.

“மனைவியுடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டீர்களா?” என்று குசலம் விசாரித்தேன்.

“உங்களுக்குத் தெரியாதா, ஆன்ட்டி!” என்றார், அலுப்புடன்.

சுவாரசியத்துடன், “எதற்குச் சண்டை போடுவீர்கள்?” என்று மேலும் துளைத்தேன்.

“குழந்தை ஓயாமல் நை நையென்று அழுகிறாள். என்னால் சகிக்க முடிவதில்லை. நான் இரைந்தால், அவளுடைய அழுகை இன்னும் அதிகமாகி விடுகிறது. அப்போதெல்லாம் மனைவியைப் பார்த்துக் கத்துவேன். அவள் குழந்தையை உள்ளே தூக்கிப் போய்விடுவாள்!” என்றார்.

எனக்கு ஒரே சிரிப்பு. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அழுகைதான் மொழி. அது அவருக்குப் புரியவில்லை. `குழந்தையை ஏன் அழ விடுகிறாய்?’ என்று மனைவியுடன் சண்டை போட முடியுமா!

சுயநலமான அப்பா

குடும்பப்பொறுப்பே இல்லாமல் ஒருவர் பிற பெண்களுடன் உறவு வைத்திருந்தார். அவர் பெற்ற பெண்களுக்கு அவரது வழிகாட்டலோ, அன்போ கிடையாது.

இப்படிப்பட்ட பெண்கள் தம்மையும் அறியாது, அப்பாவைப்போன்றவரையே காதலித்து மணந்துகொள்கிறார்கள். நிச்சயிக்கப்பட்ட திருமணமானாலும், கணவர் நடத்தை எப்படி இருந்தாலும், `நம் அப்பா இல்லையா! எல்லா ஆண்களும் இப்படித்தான்!’ என்று ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள்.

`நீங்கள் என்னை மிஞ்ச முடியாது!’ என்று தந்தை தாம் பெற்ற குழந்தைகளுடனேயே போட்டி போடும்போது, அவர்கள் மனம் தளரலாம். இல்லையேல், தம் திறமைகளை ஒளித்து வாழலாம்.

இயற்கை நியதி

தாய்க்குத் தான் பெற்ற ஆண்குழந்தைகளைப் பிடிக்கும். தந்தைக்கு மகள்பால்தான் பேரன்பு.

இதனால் பெற்றோரிடையே போட்டி வந்துவிட்டால், குழந்தைகளின்பாடுதான் திண்டாட்டம்.

`அம்மா செல்லம் கொடுத்து உன்னைச் சீரழிக்கிறாள்!’ என்னும் தந்தை அதற்கு மாற்று மருந்துபோல் ஓயாத சிடுசிடுப்பைக் காட்டுகிறார். மகன் செய்வதெல்லாம் தவறு என்று பழிப்பு. சிறு தவற்றுக்கும் கடுமையான தண்டனை. மகளிடமோ, மிக அருமை. இந்த பாரபட்சத்தினால் சகோதர சகோதரிக்குள் கசப்பு எழும் என்பது ஒருபுறமிருக்க, தந்தையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் மகனது தன்னம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிடுகிறது.

ஆணோ, பெண்ணோ, `நீ தைரியசாலி! மகா புத்திசாலி!’ என்று சிறுவயதிலிருந்தே இரு ழந்தைகளிடமும் சொல்லிச் சொல்லி வளர்த்தால், பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எழ, அவர்களுக்கு அக்குணங்கள் படியும்.

ஒரு தந்தையின் அன்பும் ஊக்கமும் கிடைக்கப்பெற்ற பெண் ஆண்களைப் புரிந்துகொள்கிறாள். அவர்களைப்போன்றே ஒரு முடிவை எடுப்பதற்கு அறிவைப் பயன்படுத்துகிறாள். உணர்ச்சிகளை நம்புவதில்லை.

ஆனால், தந்தையின் அந்த அன்புடன் கண்டிப்பும் இருக்கவேண்டுவது அவசியம்.

அறியாப்பருவத்தினர் தவறு செய்வதைத் தண்டிப்பதால், நம் அன்பு குறைந்துவிட்டதென்ற அர்த்தமில்லை. அப்படிச் செய்யாவிட்டால்தான், நம்மையுமறியாது, அவர்களுக்குத் தீங்கிழைக்கிறோம்.

`ஒரே மகள்! திருமணமாகி நீண்ட காலம் கழித்துப் பிறந்ததால் எனக்கு ரொம்ப அருமை. என்ன செய்தாலும் திட்டக்கூட மனம் வரவில்லையே!’ என்பவர்களுக்கு: தற்காப்புக்கலை போன்ற உடற்பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளில் மகளை ஈடுபடுத்துங்கள். அவைகளைக் கற்பிக்கும் ஆசிரியர் கண்டிப்பாக இருப்பார். அதனால், தானே கட்டொழுங்கு வரும்.

அருமை மகள் திருத்தப்படும்போது மனம் பதைபதைத்துப்போகிறதா? எதிர்காலத்தில் அவள் பிரகாசிக்க வேறு வழியில்லை.

முக்கியமாக, போட்டியின்றி, குழுவோடு ஒரு காரியத்தைச் செய்யும்போது சிறுபிள்ளைத்தனத்துடன் சுயநலமும் மறையும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *