பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

21322844_1422347747819420_1386402902_n
ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (04.09.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (126)

  1. வாழுகின்ற தேசம் எண்ணி வருந்துகின்றேன்
    வாராதா வசந்தம் என்றெண்ணி ஏங்குகிறேன்
    ஆளுகின்ற வர்க்கம் கண்டு அஞ்சுகின்றேன்
    கால் பரப்பி நின்றிங்கு கதறுகின்றேன்

    கனவுகொண்ட கண்களிங்கே இருளக் கண்டேன்
    கல்விகூட எமனாக மாறக் கண்டேன்
    முகிழ்க்காத அரும்புகளும் உதிரக் கண்டேன்
    முகம்திருப்பி மனம் வெதும்பி அரற்றுகிறேன்

    ஊழலிங்கு நதியாக ஓடக் கண்டேன்
    ஊரூணியும் ஆறுகளும் வாடக் கண்டேன்
    பயிர்வளர்க்கும் விவாசயி மடியக் கண்டேன்
    உயிர் சுமந்த வலியாலேத் துடிக்கின்றேன்!

    காடான நாடிதனை மாற்றி அமைப்போம்
    கலாமின் வல்லரசைக் கட்டி முடிப்போம்
    உற்றத் துயர் அத்தனையும் முடித்து வைப்போம்
    உயரட்டும் நாடென்றே ஓங்கி ஒலிப்போம்!

  2. ஞான மரம் : உயர்ந்து நிற்கும் மரங்கள் பாரீர்!
    வானளாவ வளர்ந்த அற்புதம் பாரீர்!
    மரங்கள் வளர்ந்து, மண்ணுயிர்க்கு பயன் தரும்!
    மனிதன் வாழ அழகான வீடு தரும்!
    சுடு வெயில், தான் ஏற்று ! மற்றவர்க்கு நிழல் தரும்!
    உண்ணக் கனி தரும்!
    எழுதத் தாள் தரும்!
    தீயில் தான் எரிந்து!
    வெளிச்சம் தான் தரும்!
    நச்சுக் காற்றை தான் உண்டு!
    நல்ல காற்றை நமக்குத் தரும்!
    மரங்கள் பூமியில் இருந்ததற்கு
    நல்ல ஆதாரங்கள் எத்தனை! எத்தனை!
    காற்றாய், கனியாய், ஒளியாய்,
    நிழலாய், வீடாய், மழையாய்!!!
    மரம் சொன்னது, வியந்து நின்ற என்னைப் பார்த்து!
    “உயர்ந்து, வளர்ந்த மனிதா!
    மனதை வளர்ப்பாய் இனிதாய்!
    மற்றவர் உயர, என்றும் உழைப்பாய்”
    புத்தனுக்கு ஞானம் வந்தது
    போதி மரத்தடியில்!
    எனக்கும் தெளிவு வந்தது!
    இந்த மரம் சொன்ன வகையில்!!!!
    மனித மனங்களும், உயர வேண்டும்!
    இந்த மரங்களைப் போல!

  3. சிந்தனை வளம்..!
    ================

    மலைவளமுடன் வயல்வெளி காடும்வளம் பெருக..
    ……….மாதமும்மாரி மழைதவறாது பொழிந்திருத்தல் வேணும்.!
    நிலவளம் கொண்டிருப்பின் செடிமரங்கள் செழிப்புடன்..
    ……….நெடிதாக விண்ணைமுட்ட வானுயர்ந்து வளந்திருக்கும்.!
    இலைவளம் மிகுந்தாலது….மண்ணினுள் ஒளிந்திருக்கும்..
    ……….இயற்கைவளம் என்பதின் அடையாளம் போலாகும்..!
    கலைவளம் பெருகவே மாந்தரின் எண்ணமுயெழுத்தும்..
    ……….கடுமழைபோல் சிந்தனையூற்றாக மனதில் பெருகவேணும்.!

    மண்ணெனும் தாயும் வானமெனும் தந்தையுமிணைந்து..
    ……….மனமுடனீயும் ஈகைப் பெருந்தன்மைதான் இயற்கை.!
    மண்ணில்காணும் கண்ணைக் கவரும் காட்சிகளாவும்..
    ……….மாதவன்படைத்த கணக்கற்ற அற்புதங்களில் ஒன்றாகும்.!
    பெண்ணின் இடைபோன்று சிறுத்துயர் வளர்ந்தோங்கிய..
    ……….பெருமரங்களடந்த பெருவெளி இயற்கை நடுநின்று..
    எண்ணில்..? இவையனைத்தும் எழும் சிந்தனையில்..
    ……….ஏற்றிப் பற்றுமிகின்.?…பாவலர்க்கெளிதிலது பாவாகும்.!

  4. ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் , மரம்போல் வளர்ந்துவிட்டான்

    எதிலும் ஐயம்,எதிலும் அச்சம் எதற்கெடுத்தாலும் வாதாடுகின்றான்

    மரத்தின் அருமையினை அவன் எண்ணிப் பார்ப்பதில்லை

    இயற்கையில் மரம் அதிகமானால் மழைக்கு பஞ்சமில்லை

    மரங்கள் வளர்ந்து, மணல் அரிப்பை தடுக்கின்றதே

    மரங்கள் வளர்ந்து மனிதனுக்கு நிழலை தருகின்றதே

    மரங்கள் வளர்ந்து மனிதனுக்கு வீடுகட்ட உதவுகின்றதே

    மரங்களின் இலைகள் விலங்கிற்கும்,நிலத்திற்கும் பயன்படுகிறதே!

    இயற்கை அன்னை தந்தது எல்லாம் மனிதனுக்கு சொந்தமடா

    எனது, உனது என்பது இடையில் மாறும் பந்தமடா

    மரங்களை வெட்டி, சுற்று சூழலை பாழ்படுத்துகிறாய்

    என்னை வெட்டி, நாட்டையும், வீட்டையும் கெடுக்கின்றாய் !

    மனிதனே, நானே உனக்கு எழுத தாள் தருகின்றேன்

    உண்ண கனிகளையும், என்னை எரித்து வெளிச்சம் தருகின்றேன்

    நான் அசைந்து தென்றல் போல் இதமான காற்றை தருகின்றேன்

    என் இலைகள் மருந்தாகவும், எருவாகவும் பயன்படுகின்றதே!

    மனிதனே, நின்ற இடத்தில் என்னை அண்ணார்ந்து பார்கின்றாய்

    என்னை நினைத்தாலே உன் மனதில் தெளிவு காண்பாய்

    மனிதனே, வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க ஆர்வம் கொள்வாயா !

    சுற்று சூழலை காக்க நானே சிறந்தவன் என எண்ணமாட்டாயா !

    ரா,பார்த்தசாரதி

Leave a Reply to பெருவை பார்த்தசாரதி

Your email address will not be published. Required fields are marked *