வெற்று வார்த்தையில் பற்றி எரியுமா?

0

இரா.சந்தோஷ் குமார்

 

கோழையாக உணர்கிறேன்.
வெட்கப்பட்டு கொள்கிறேன்.

புரட்சி என்றெல்லாம்
எழுதுவது எதுவும் வீரம் தான்.
எழுதுவது மட்டுமே வீரமல்ல.

ஒவ்வொரு கொடுமைக்கும்
ஒவ்வொரு உரிமை மறுப்புக்களுக்கும்
உண்மையில் மனம் வெம்பி எழுதினாலும்
பொய்யாக கூட..
போலியாக கூட
செஃல்பி எடுத்து விளம்பரமாக கூட
அநீதி என சாலை மறியல் செய்ததில்லை.
அநியாயத்தின் கண்களில்
குரல் விரல் நீட்டி குத்தும்
ஒரு அறப்போராட்டத்தில் பங்கேற்றதில்லை.
மெரீனாக் கடற்கரைக்கு
காற்று வாங்க சென்றிருக்கிறேன்
காதலைப் பெற சென்றிருக்கிறேன்.
கவிதை எழுத சென்றிருக்கிறேன்
ஒரு முறை கூட
போராட்டமென சென்றதில்லை.

ஆனாலும் எழுதுகிறேன்
வீர தீர மானம் தன்மானம்
சுயமரியாதை சமூகநீதி என
ஏதோ புலம்புகிறேன்.

காக்கிச் சட்டைக்காரர்களின்
அதிகார தாக்குதலை
ஒரு முறை சுவைத்தால் போதும்..
தாக்குதலே ஒரு போதையென
ஒராயிரம் போராட்டத்திற்கு
முன் நிற்கும் தலைமை தைரியம் வருமாம்.

ஆனால் ஏனோ காகித புலி

களத்தில் நின்ற சரித்திரமில்லை.!

சே குவேராவை வாசித்தவனுக்கு
பாரதியை பாரதிதாசனை நேசித்தவனுக்கு
வீதியில் இறங்கி போராடும்
அஞ்சாமை இல்லை எனும் போது
நான் கோழையாகிறேன்
எழுதுவதால்
வெட்கப்படுகிறேன்.

புரட்சி என்றெழுதினால் மட்டுமே
பற்றி எரியாது காகிதம் தானே ?

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *