நலம் .. நலமறிய ஆவல் (72)

நிர்மலா ராகவன்

எதிர்த்துப் பேசும் சிறுவர்கள்

நலம்

“இந்தப் பசங்களே மோசம்,” என்று எல்லா பதின்ம வயதுப் பையன்களையும் ஒட்டுமொத்தமாக வைதாள் அம்மாது. “என்னமோ, `சுதந்திரம், சுதந்திரம்’ என்று அடித்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் செலவுக்கு நாம்தானே பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது!”

சிறுவர்கள் எல்லா வயதிலும் இப்படி – பெரியவர்களிடம் மரியாதை கொடுக்காது – பேசுவது இயல்பு. அதிலும் பதின்மூன்று வயதுக்குமேல், `நான் இன்னும் குழந்தை இல்லையே!’ என்று சற்று அதிகமாகவே திமிறுவர்.

அவர்களது எதிர்ப்பு பலவிதமாக வெளிப்படும். சிலர், `ஆரம்பித்துவிட்டீர்களா!’ என்பதுபோல் கண்களைச் சுழற்றுவர், இல்லையேல், பெருமூச்சு வெளிப்படும். வேறு சிலர், `உங்கள் காலமே வேறு! உங்களுக்கு எங்களைப் புரிந்துகொள்ள முடியாது!’ என்று பழியைத் திருப்புவர்.

கதை: ஆசிரியைகளுடன் மோதல்

ஒருமுறை, `படிப்பதற்கு இன்னும் கூடுதலான நேரம் செலவழிக்கக் கூடாதா!’ என்று நான் என் மாணவிகளிடம் கெஞ்சலாகக் கூறியபோது, “உங்கள் காலத்தில் டி.வி கிடையாது. இப்போது அப்படியா? பொழுதைக் கழிக்க எங்களுக்கு நிறைய வழிகள் இருக்கிறதே” என்றாள்.

நான் வாயடைத்துப்போனேன்.

எது முக்கியம், வாழ்க்கையை நல்வழியில் கொண்டு செல்லும் என்று இவர்களுக்குப் புரிவதில்லை. அடிக்கடி வற்புறுத்தினால், வேண்டுமென்றே எதிர்வழியில் நடப்பார்கள்.

`என் மகள் நான் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. எப்படியோ தொலையட்டும் என்று விட்டுவிட்டேன்!’

இம்மாதிரி கூறும் தாய் மகளைப் புகழவே செய்யாது, ஓயாமல் குற்றம் கண்டுபிடிக்கிறாள். தான் என்ன சொன்னாலும் கீழ்ப்படிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். முதலில் சுதந்திரமாக உணரும் மகளோ, போகப்போக, அஞ்ச ஆரம்பித்துவிடுவாள்.

நான் படித்த காலத்தில், விடுமுறை நாட்களில் பரீட்சைக்கு எந்தந்த பாடங்களை முதலில் படிக்க வேண்டும் என்று ஆசிரியைகள் சொல்லிக்கொடுத்தார்கள். காலையில் மனம் தெளிவாக இருக்கும்போது கணக்கில் ஆரம்பித்து விஞ்ஞானம் (இந்த இரண்டு பாடங்களையும் எழுதிப் பார்க்க வேண்டும்), பிறகு பூகோளம், சரித்திரம் என்று தொடர்ந்து, இறுதியில் மொழிகளில் முடிக்க வேண்டும். அவ்வப்போது இடைவெளி, சிறிது உணவுக்காக. படித்துக்கொண்டிருக்கும்போதே இசையைச் செவிமடுத்தால் நன்றாக மனதில் பதியும். நீண்ட காலம் மறக்காது. ஒரு நாளைக்கு இத்தனை பக்கங்கள் படிக்க வேண்டும் என்று ஓரிரு வாரங்களுக்கான அட்டவணையை முதலில் தயாரித்துக்கொள்வது மன இறுக்கத்தைத் தவிர்க்கும் வழி.

ஆசிரியைகள் வற்புறுத்திக் கூற, `செய்துதான் பார்க்கலாமே!’ என்று நான் இம்முறையைக் கடைப்பிடித்தேன். பரீட்சைக்கு முதல்நாள் பக்கங்களை புரட்டிப் பார்த்ததுடன் சரி. இரவெல்லாம் கண்விழித்துப் படித்தது கிடையாது.

பதினேழு வயது மாணவர்களிடம் இதை விளக்கிச்சொல்லி, விடுமுறைக்காலம் முடிந்து அவர்கள் திரும்பியதும், “நான் கூறியபடி படித்தீர்களா?” என்று ஆவலுடன் வினவினேன்.

“டீச்சர் ரொம்ப கண்டிப்பு!” என்று பதில் வந்தது! இது மறைமுகமான எதிர்ப்பு.

சிறுவர்கள் எதிர்க்கும்போது, நாம் மேலும் எகிறாமல், அமைதியாக இருத்தல் அவசியம்.

ஒரு பையன், `நான் எப்படிப் போனால் உங்களுக்கென்ன, டீச்சர்? உங்களுக்குத்தான் சம்பளம் கிடைத்துவிடுமே!’ என்றுகூட என்னிடம் கூறியிருக்கிறான்.

அவனைப்போல், விதண்டாவாதம் செய்வதுதான் வளர்ந்த பிள்ளைகளுக்கு அழகு என்று நினைத்திருப்பவர்களிடம் பேசுவது வீண். `உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். கேட்டால் கேளுங்கள்! எனக்கொன்றும் நஷ்டமில்லை!’ என்று விடவேண்டியதுதான்.

எதில் காதல்?

பதின்ம வயதுப் பையன்களுக்கு தங்கள் தலைமுடியின்மேல் அபார பிரேமை, பெருமை. பதினேழு நிமிடம், இருபது நிமிடம் என்று ஏதோ கணக்கு வைத்துக்கொண்டு, ஒவ்வொரு முறையும் தலைசீவிக் கொள்வார்கள். எவ்வளவு அலங்கோலமாக ஆனாலும், அதை வெட்டிக்கொள்ள மனம் வராது. அவ்வளவு அருமை!

“வாய் ஓயாமல் இருமறியே! சலூனுக்குப் போகக்கூடாது?” என்று தினமும் வீட்டில் நச்சரிப்பார்கள். பையனின் காது தாற்காலிகமாக செவிடாகிவிடும்..

அதைவிட்டு, “என்னிக்கு தலைமயிரை வெட்டிக்கிறதா உத்தேசம்?” என்பதுபோல் முடிவை அவர்களிடமே விட்டால், ஏதாவது ஒரு தினத்தைக் குறிப்பிடுவார்கள். ஆனால், அன்று மறந்ததுபோலிருப்பார்கள்!

“இன்னிக்கு என்னமோ பண்ணப்போறதா சொன்னியே!” என்று மறைமுகமாக நினைவுபடுத்தினால் போதும். தம் வாக்கைக் காப்பாற்றுவார்கள்.

இந்த மனோதத்துவம் புரியாது, எங்கள் பள்ளியிலிருந்த கட்டொழுங்கு ஆசிரியர், கையில் கத்தரிக்கோலுடன், ஏதாவது வகுப்பிற்குள் நுழைவார். மாணவர்ளை தரதரவென்று வகுப்பிற்கு வெளியே இழுத்துச் சென்று, வேண்டுமென்றே தாறுமாறாக வெட்டுவார், `பள்ளி விதிமுறை தெரியாது? சட்டைக்காலரை இடிக்கிறது உன் முடி!’ என்ற வசவுடன்.

அன்று பூராவும் அந்த மாணவன் ஆத்திரமாக அமர்ந்திருப்பான். எந்தப் பாடத்திலும் கவனம் போகாது.

கதை: வீட்டில் குழப்பம்

புத்திசாலியாக, நல்லொழுக்கத்துடன் இருந்தவன் ரசாலி. பதினான்கு வயதில் பெற்றோர்கள் `தரையில் கட்டிப் புரண்டு’ சண்டை போட (அவனே சொன்னது), அவன் நிம்மதி கெட்டது. படிப்பிலும், உடையிலும் அக்கறை போயிற்று. மரியாதையின்றி ஆசிரியர்களையும் எதிர்க்க ஆரம்பித்திருந்தான்.

ஒரு நாள், நான் அவனை அழைத்து, “உன் தலைமயிரை வெட்டிக்கொள்ள வேண்டும்போல இருக்கிறதே! ரொம்ப நீளமாக இருக்கிறது. ஆசிரியர் பார்த்தால், கன்னாபின்னா என்று வெட்டிவிடுவாரே!” என்றேன் ரகசியக்குரலில்.

“எப்போ வெட்டிக்கணும்?”

“இன்னிக்கு?” சும்மா சொல்லிப்பார்த்தேன்.

“நாளை சனிக்கிழமை. பள்ளி விடுமுறை. அப்போது வெட்டிக்கொள்ளட்டுமா?” என்று கேட்டுவிட்டு, நான் ஒப்பியதும், அதன்படி செய்தான். (`வெட்டிக்கொள்!’ என்று நான் மிரட்டியிருந்தால், கேட்டிருக்க மாட்டான்).

எந்த விஷயத்திலும் அவர்களே முடிவு செய்வதுபோல் இருக்கச் செய்வது நாம் சொல்வதற்கேற்ப சிறுவர்களை நடக்க வைக்கும் உபாயம்.

சொல்லி வைத்தாற்போல், திங்கள் காலை அந்த ஆசிரியர் மேலும் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். சில மாணவர்களை இழுத்துப்போனார். ரசாலி பெருமையுடன் தலையை நிமிர்த்தியபடி உட்கார்ந்திருந்தான்.

நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து நமட்டுச்சிரிப்புச் சிரித்தோம். “தப்பித்தாய்!” என்று ரகசியக்குரலில் கூறினேன், மலாய் மொழியில்.

அவனும் புன்சிரிப்புடன், `தப்பித்தேன்!’ என்றான். பக்கத்திலிருந்த நண்பனிடம், “டீச்சர்தான் என்னைக் காப்பாற்றினார்கள்!” என்றது எனக்குக் கேட்டது.

சில வருடங்களுக்குப்பின், நான் அப்பகுதியில் காரை ஓட்டிப்போகையில், ரசாலியைப் பார்த்தேன். ஹார்னை விடாமல் அடித்தேன்.

சற்றுப் பொறுத்து, “அந்தப் பையனுக்கு ஒன்னைப் பாத்து என்னம்மா அவ்வளவு சந்தோஷம்? ரோடிலே எதுக்கு அப்படிக் குதிச்சான்?” என்று கேட்டாள் என் மகள்.

வீட்டில் நிம்மதி இல்லாதவன்மேல் சிறிது அக்கறை காட்டினேன். அவ்வளவுதான். ஆனால், அவனைப் பொறுத்தவரை, அது பெரிய விஷயம். நான் அவன் மானத்தைக் காப்பாற்றி இருக்கிறேன்.

வயதில் இளையவர்களுடன் பழகும்போது, அவர்கள் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால், அவர்களைப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் நம்மை எதிர்க்கும் சந்தர்ப்பங்களும் குறையும்.

தொடருவோம்

Share

About the Author

நிர்மலா ராகவன்

has written 216 stories on this site.

எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/

Write a Comment [மறுமொழி இடவும்]


8 − = six


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.