படக்கவிதைப் போட்டி 126-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

manintheforest

நெடிதோங்கிய மரங்களிடை நின்று நிமிர்ந்துபார்க்கும் உயர்ந்த மனிதன்!!

ஆகா…! மிக அருமையான கோணத்தில் இரசனையோடு இந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணனுக்கும், சிந்தைகவர் இப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குக் கச்சிதமாய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் உளங்கனிந்த நன்றியும் பாராட்டும் உரித்தாகுக!

வானளவு உயர்ந்துநிற்கும் இம்மரங்கள் இயற்கையன்னை தானளித்த வரங்களல்லவா? வீடு கட்டுவதற்காக அவற்றை அருளின்றி அழித்து அவற்றுக்கு வீடுபேறளிப்பது நமக்கு நாமே அளித்துக்கொள்ளும் சாபம் அல்லவா?

நிவந்தோங்கிய மரங்களையும் அவற்றை உவந்துநோக்கும் மனிதனையும் குறித்துச் சந்தக்கவி சிந்தவருகின்றார்கள் நம் கவிஞர்கள். அவர்களை அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றேன்!

*****

”உயர்ந்து வளர்ந்த மனிதா! மனத்தை வளர்ப்பாய் இனிதாய்! மற்றவர் உயர நீ உழைப்பாய் நன்றாய்” என்று வெயிற்கேற்ற நிழலும் வீசுந் தென்றல் காற்றும் நல்கும் நன்மரத்தை ஞானோபதேசம் செய்ய வைத்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.  

ஞான மரம்:

உயர்ந்து நிற்கும் மரங்கள் பாரீர்!
வானளாவ வளர்ந்த அற்புதம் பாரீர்!
மரங்கள் வளர்ந்து, மண்ணுயிர்க்கு பயன் தரும்!
மனிதன் வாழ அழகான வீடு தரும்!
சுடு வெயில், தான் ஏற்று  மற்றவர்க்கு நிழல் தரும்!
உண்ணக் கனி தரும்!
எழுதத் தாள் தரும்!
தீயில் தான் எரிந்து
வெளிச்சம் தான் தரும்!
நச்சுக் காற்றைத் தான் உண்டு
நல்ல காற்றை நமக்குத் தரும்!
மரங்கள் பூமியில் இருந்ததற்கு
நல்ல ஆதாரங்கள் எத்தனை! எத்தனை!
காற்றாய், கனியாய், ஒளியாய்,
நிழலாய், வீடாய், மழையாய்!!!
மரம் சொன்னது, வியந்து நின்ற என்னைப் பார்த்து!
“உயர்ந்து, வளர்ந்த மனிதா!
மனதை வளர்ப்பாய் இனிதாய்!
மற்றவர் உயர, என்றும் உழைப்பாய்”
புத்தனுக்கு ஞானம் வந்தது
போதி மரத்தடியில்!
எனக்கும் தெளிவு வந்தது!
இந்த மரம் சொன்ன வகையில்!!!!
மனித மனங்களும், உயர வேண்டும்!
இந்த மரங்களைப் போல!

*****

இலைவளம் மிகுதல் இயற்கைவளத்தின் அடையாளம்; கலைவளம் மிகுதல் மனிதனின் சிந்தனைச் செம்மையின் அடையாளம். மண்ணில்காணும் கண்ணைக்கவரும் காட்சிகளனைத்தும் அந்த மாதவனின் அற்புதத்தின் அடையாளம் என்று அதிசயிக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

சிந்தனை வளம்..!

மலைவளமுடன் வயல்வெளி காடும்வளம் பெருக..
……….மாதமும்மாரி மழைதவறாது பொழிந்திருத்தல் வேணும்.!
நிலவளம் கொண்டிருப்பின் செடிமரங்கள் செழிப்புடன்..
……….நெடிதாக விண்ணைமுட்ட வானுயர்ந்து வளந்திருக்கும்.!
இலைவளம் மிகுந்தாலது….மண்ணினுள் ஒளிந்திருக்கும்..
……….இயற்கைவளம் என்பதின் அடையாளம் போலாகும்..!
கலைவளம் பெருகவே மாந்தரின் எண்ணமுயெழுத்தும்..
……….கடுமழைபோல் சிந்தனையூற்றாக மனதில் பெருகவேணும்.!
மண்ணெனும் தாயும் வானமெனும் தந்தையுமிணைந்து..
……….மனமுடனீயும் ஈகைப் பெருந்தன்மைதான் இயற்கை.!
மண்ணில்காணும் கண்ணைக் கவரும் காட்சிகளாவும்..
……….மாதவன்படைத்த கணக்கற்ற அற்புதங்களில் ஒன்றாகும்.!
பெண்ணின் இடைபோன்று சிறுத்துயர் வளர்ந்தோங்கிய..
……….பெருமரங்களடந்த பெருவெளி இயற்கை நடுநின்று..
எண்ணில்..? இவையனைத்தும் எழும் சிந்தனையில்..
……….ஏற்றிப் பற்றுமிகின்.?…பாவலர்க்கெளிதிலது பாவாகும்.!

*****

ஏதோ மனிதன் பிறந்துவிட்டான்; அவன் ஏனோ மரம்போல் வளர்ந்துவிட்டான் என்ற ’பனித்திரை’ திரைப்பாடலை அடியொற்றித் தன் பாடலை எழுதியுள்ள திரு. ரா. பார்த்தசாரதி, இப்பாடலில் மரம் தன் பயன்களைத் தானே பட்டியலிட்டு மனிதனுக்கு நல்லறிவு கொளுத்துவதை நயம்பட உரைத்துள்ளார்.

ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் , மரம்போல் வளர்ந்துவிட்டான்
எதிலும் ஐயம்,எதிலும் அச்சம் எதற்கெடுத்தாலும் வாதாடுகின்றான்
மரத்தின் அருமையினை அவன் எண்ணிப் பார்ப்பதில்லை
இயற்கையில் மரம் அதிகமானால் மழைக்குப் பஞ்சமில்லை
மரங்கள் வளர்ந்து, மணல் அரிப்பைத் தடுக்கின்றதே
மரங்கள் வளர்ந்து மனிதனுக்கு நிழலை தருகின்றதே
மரங்கள் வளர்ந்து மனிதனுக்கு வீடுகட்ட உதவுகின்றதே
மரங்களின் இலைகள் விலங்கிற்கும்,நிலத்திற்கும் பயன்படுகிறதே!
இயற்கை அன்னை தந்தது எல்லாம் மனிதனுக்குச் சொந்தமடா
எனது, உனது என்பது இடையில் மாறும் பந்தமடா
மரங்களை வெட்டி, சுற்றுச் சூழலை பாழ்படுத்துகிறாய்
என்னை வெட்டி, நாட்டையும், வீட்டையும் கெடுக்கின்றாய்!
மனிதனே, நானே உனக்கு எழுதத் தாள் தருகின்றேன்
உண்ணக் கனிகளையும், என்னை எரித்து வெளிச்சம் தருகின்றேன்
நான் அசைந்து தென்றல் போல் இதமான காற்றைத் தருகின்றேன்
என் இலைகள் மருந்தாகவும், எருவாகவும் பயன்படுகின்றதே!
மனிதனே, நின்ற இடத்தில் என்னை அண்ணார்ந்து பார்க்கின்றாய்
என்னை நினைத்தாலே உன் மனதில் தெளிவு காண்பாய்
மனிதனே, வீட்டுக்கு வீடு மரம் வளர்க்க ஆர்வம் கொள்வாயா?
சுற்றுச் சூழலைக் காக்க நானே சிறந்தவன் என எண்ணமாட்டாயா?

*****

மரங்களை அழிப்பதால் மனிதர்கள் தமக்குத்தாமே பேரழிவைத் தேடிக்கொள்வதைக் கவிஞர்கள் பலரும் படிப்போர் மனங்கொளத்தக்க வகையில் இடித்துரைத்துள்ளனர் தம் கவிதைகளில். பாராட்டுக்கள்!

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுபெற்றிருப்பது நம் பார்வைக்கு…

வாழுகின்ற தேசம் எண்ணி வருந்துகின்றேன்
வாராதா வசந்தம் என்றெண்ணி ஏங்குகிறேன்
ஆளுகின்ற வர்க்கம் கண்டு அஞ்சுகின்றேன்
கால்பரப்பி நின்றிங்கு கதறுகின்றேன்

கனவுகொண்ட கண்களிங்கே இருளக் கண்டேன்
கல்விகூட எமனாக மாறக் கண்டேன்
முகிழ்க்காத அரும்புகளும் உதிரக் கண்டேன்
முகம்திருப்பி மனம் வெதும்பி அரற்றுகிறேன்

ஊழலிங்கு நதியாக ஓடக் கண்டேன்
ஊருணியும் ஆறுகளும் வாடக் கண்டேன்
பயிர்வளர்க்கும் விவசாயி மடியக் கண்டேன்
உயிர் சுமந்த வலியாலே துடிக்கின்றேன்!

காடான நாடிதனை மாற்றி அமைப்போம்
கலாமின் வல்லரசைக் கட்டி முடிப்போம்
உற்ற துயர் அத்தனையும் முடித்து வைப்போம்
உயரட்டும் நாடென்றே ஓங்கி ஒலிப்போம்!

”செந்தமிழ் நாடுதனில் கற்றகல்விகூட எளியோர்க்கு அவர் விரும்பும் படிப்பைப் பெற்றுத்தர உதவவில்லை; சாகுபடி செய்தவனைத் தயவின்றிச் சாகும்படிச் செய்கின்றோம். ஊழலே ஊரெங்கும் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுவதால் சூழலிலே இனிமையில்லை” என்று தனிமையில் கானிடைநின்று கதறும் ஆடவனைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியுள்ள திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி

Share

About the Author

மேகலா இராமமூர்த்தி

has written 303 stories on this site.

2 Comments on “படக்கவிதைப் போட்டி 126-இன் முடிவுகள்”

 • கொ.வை.அரங்கநாதன் wrote on 14 September, 2017, 6:45

  சிறந்த கவிதையாக எனது கவிதையை தேர்வு செய்தமைக்கு நன்றி!

 • எஸ். கருணானந்தராஜா wrote on 30 September, 2017, 0:14

  காலம்பிந்திய என் கவிதையையும் போடுகிறேன்

  மனிதா உன்னோடு மரங்கள் நாம் பேசுகிறோம்
  விண்ணிலிருந்து வீழும் கதிர்ச் சிதறல்
  மண்ணுட் கலந்த மறை நீரனைத்தையுமே
  ஒன்றாக நின்று உறவுக்கும் கைகொடுத்து
  நன்றாகப் பங்கிட்டு நாமின்று வாழ்கின்றோம்

  ஏ மனிதா நீயும் எங்களைப் போல
  ஒன்றுக்கு நில் உரிமைக்கு நில்
  நன்றுக்காய்ப் போராடு நன்மைக்காய் போராடு
  வென்றிந்த மானிலத்தில் வீரத்தை நிலைநாட்டு
  என்றும் உனக்கு எம்மினந்தான் பேருதவி
  என்றும் எமை வளர்த்து இயற்கையைக் காப்பாற்ற
  ஒன்றுக்கு நில் உன் உயர்வுக்குழை.

Write a Comment [மறுமொழி இடவும்]


6 + = twelve


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.