-செண்பக ஜெகதீசன்

நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.
(திருக்குறள் -276: கூடாவொழுக்கம்) 

புதுக் கவிதையில்…

துறவி என்பவன்
தூயவனாயிருத்தல் வேண்டும்…
நெஞ்சினில் பற்றுவைத்து
நேரில் பற்றற்றவனாய்
நடிக்கும் துறவியைவிடக்
கொடியவர் வேறில்லை…! 

குறும்பாவில்…

பற்றினை நெஞ்சில்வைத்து பற்றற்றவனாய்ப்
பாசாங்கு செய்யும் துறவியைவிடக்
கொடியோர் வேறெவருமிலர்…! 

மரபுக் கவிதையில்…

முற்றுந் துறந்த முனிவரென்றே
     -முழுதும் பொய்யாய் நடித்துவிட்டு,
பற்று மிகுந்த நெஞ்சினராய்
   -பெரிதும் ஆசை கொண்டவராய்
புற்றில் வாழும் அரவெனவே
-புரட்டில் திரியும் துறவியைப்போல்
குற்றம் நிறைந்த கொடியோர்கள்
-குவலய மீதில் வேறிலையே…! 

லிமரைக்கூ…

துறவிக்கு இருக்கக்கூடாது ஆசை,
பற்றற்றவனாய் நடிப்பது கொண்டுவரும் துறவிக்கு
கொடியோர்க்கெலாம் கொடியோனெனும் மாசை…! 

கிராமிய பாணியில்…

ஒழுக்கம் வேணும் ஒழுக்கம் வேணும்
மனுசனுக்கு நல்ல ஒழுக்கம் வேணும்,
எல்லாந்தொறந்த முனிவருண்ணாலும்
பொல்லாப்பில்லாத ஒழுக்கம் வேணும்…
மனசுல ஆசய மறச்சிவச்சி
ஆசயில்லாதவன்போல நடிக்குமந்த
சாமியாரப் போல
கேடுகெட்ட கொடியவந்தான்
யாருமில்ல ஒலகத்தில…
அதால,

ஒழுக்கம் வேணும் ஒழுக்கம் வேணும்
மனுசனுக்கு நல்ல ஒழுக்கம் வேணும்,
எல்லாந்தொறந்த முனிவருண்ணாலும்
பொல்லாப்பில்லாத ஒழுக்கம் வேணும்…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *