பொருளாதார மாற்றங்களால் இன்றைய நிலை

0

பவள சங்கரி

தலையங்கம்

உயர்மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு புதிய வரிவிதிப்பு கொள்கை, ஜி.எஸ்.டி. அறிமுகம் தினசரி பெட்ரோலியப்பொருட்களின் விலைவிதிப்பு, வங்கிகளுக்கு வானளாவிய அதிகாரங்கள் என பொருளாதார மாற்றங்களை நடுவண் அரசு பெருமளவில் கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றங்களால் அரசிற்கோ அல்லது பொது மக்களுக்கோ, அல்லது அதைச்சார்ந்த நிறுவனங்களுக்கோ எந்த அளவில் பயன் ஏற்பட்டுள்ளது? இந்த மாற்றங்களால் அரசின் வரி வருமானம் அதிகரித்துள்ளது என்பதில் ஐயமில்லை. கடந்த சூலை மாதத்தில் 70 சதவிகித கணக்குகள் மூலமாகவே உரூ 90,000 கோடி அரசிற்கு வருமானமாகக் கிடைத்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதே 100 சதவிகிதமாக இருந்தால் ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் கோடி உரூபாய் மாத வரி வருமானமாகும். ஆண்டு ஒன்றிற்கு 15 இலட்சத்து 60,000 கோடி உரூபாயாகும்.

பெட்ரோலியப் பொருட்கள் தினசரி விலை மாற்றத்தால் 65 உரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்று 73 உரூபாயாக உள்ளது. எந்தவிதமான கட்டுப்பாடுகளற்று இந்த இரண்டு மாதங்களில் சுமாராக லிட்டருக்கு 8 உரூபாய் விலை ஏற்றப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான உரூபாயின் மதிப்பானது மூன்று மாதங்களில் இல்லாத வகையில் உச்சபட்ச நிலையை எட்டியுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் சந்தை நிலவரப்படி விலையில் பெரும் மாற்றங்கள் இல்லை. ஆக, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 65 உரூபாய்க்கு கீழ் இருக்கவேண்டும். ஆனால் அந்த பெட்ரொல் விலைக்குரிய கணக்கீடுகள் சரிவரச் செய்யப்படவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது. மத்திய நிதி அமைச்சர் அந்தந்த மாநிலங்கள் பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கக்கூடிய வரிவிதிப்பை விலக்கக்கோரியும் இதுவரை எந்த மாநில அரசும் இதைச் செயல்படுத்தவில்லை. ஒரு புறம் எண்ணெய் நிறுவனங்களின் கேள்வி கேட்பாரற்ற விலை நிர்ணயங்களும், மாநில அரசுகளின் வரிவிதிப்புகளும் மக்களை கொள்ளையடிப்பதாகவே உள்ளது வேதனைக்குரியதாகும்.

உயர் மதிப்பு நோட்டு செல்லாததாக அறிவித்தபோதும், புதிய உயர் மதிப்பு நோட்டுகள் அறிவித்தபோதும் மக்கள் பல்வேறு சிரமங்களை அடைந்துள்ள நிலையிலும் அரசிற்கு உறுதுணையாகவே இருந்துள்ளனர். ஆனால் இதனுடைய பலாபலன் என்று பார்க்கும்போது மிகப்பெரிய சுழியமாகவே தெரிகிறது. வங்கித் துறையினரின் செயல்பாடுகள் மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை விடுத்து தங்களின் வருமானத்தைப் பெருக்குவதைச் சார்ந்ததாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்டண விதிப்புகளும் காரணமற்ற பண வசூல்களும் வங்கித் துறையின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. வங்கிக் காசோலைகள் பரிமாறும் இடங்கள், முன்பெப்போதும் இல்லாத வகையில் காலை ஆறு மணிக்கே செயல்படத்தொடங்கி வங்கிக்கணக்கில் பணம் இல்லையென்று காசோலைகள் திருப்பி அனுப்புதலும் அல்லது அந்தக் கணக்கில் பணம் இருந்தால் 12 மணிக்கு மேல் செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கின்றனர். வங்கி திறந்தவுடன் வங்கிக்கணக்கில் அந்த காசோலைக்கான பணம் செலுத்தப்பட்டு இருந்தாலும் காசோலைகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதற்குக் கட்டணமாக 500, 600 உரூபாய்கள் வசூலிக்கப்படுகின்றன. இதே பழைய முறையில், காசோலை திருப்பி அனுப்புவதற்கு முன்பு ஒருமுறை வங்கிக் கணக்குகள் சரி பார்க்கப்பட்டு அதன் பின்பே திருப்பி அனுப்பப்படும். ஆனால் வங்கிகள் இன்று தங்கள் வருமானத்தை மட்டும் கணக்கில் கொண்டு செயல்படுவது வருத்தத்திற்குரியதாகும்.

வங்கிகளிலிருந்து புழக்கத்திற்கு பணம் வெளியிடப்படுகிறது. ரொக்க வியாபாரம் செய்யக்கூடியவர்களிடமும் பெருமளவில் பணப்புழக்கம் இருக்கிறது. ஆனால் வங்கிகளில் இந்தப் பணத்தைச் செலுத்தினால் பணப்பரிவர்த்தனைக் கட்டணமாக பெருந்தொகை வசூல் செய்யப்படுவதால் வங்கிகளில் பணம் செலுத்த தயக்கம் காட்டும் நிலை ஏற்படுகிறது. இதனால் பணப்புழக்கத்திற்குரிய உரூபாய் நோட்டுகள் மிகவும் குறைவாகின்றன என்றாலும் இதுவே கருப்புப் பணத்திற்கான ஆரம்பமாகவும் ஆகலாம் என்பதும் கவனிக்கத்தக்கது. நிதியமைச்சகமும் அரசும் வங்கிகளில் பணத்தைச் செலுத்துவதற்கு உற்சாகப்படுத்தியும், வங்கிகளிலிருந்து பணம் வெளியேறுவதற்கு பழைய கட்டுப்பாடுகளை தொடர்ந்தாலுமே நம் பொருளாதாரம் பெருமளவில் சீர்படும்.

பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் எடுத்த பிறகும் டாலருக்கு நிகரான நம் உரூபாயின் மதிப்பு பெருமளவில் ஏற்றம் பெறவில்லை என்பதும் வருத்தத்திற்குரிய விசயமாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *