படக்கவிதைப் போட்டி 127-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

kids and animals

படம்பார்த்துக் கதைசொல்லும் வகையில் அமைந்த அரியதொரு காட்சியைக் கறுப்புவெள்ளையில் ஒளிஓவியமாய்த் தீட்டியிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர் திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் என் இனிய நன்றி!

சிறுமியை இடையில் இடுக்கி இதழ்க்கடையில் புன்னகையை இருத்தி நிற்கும் ஒரு சிறுவன், உடைந்த கிளையின்மீது(ம்) உடையாத நம்பிக்கையோடு ஒயிலாக நிற்கின்ற மற்றொரு சிறுவன், இவர்களுக்குச் சற்றுதொலைவிலே நின்ற திருக்கோலத்திலும் கிடந்த திருக்கோலத்திலும் அருங்காட்சி நல்கும் கால்நடைச் செல்வங்கள் என்று இப்புகைப்படமே நல்லதோர் வாழ்க்கைச் சித்திரமாய் நம் கண்முன் விரிகின்றது!

கவி வடிப்பதில் வித்தகர்களான நம் கவிஞர்கள் ஒரு காவியமே வரையலாம் இப்படத்திற்கு!

இனி கவிஞர்களின் முறை…

*****

உற்றதுணையாய் உடன்பிறந்தோர், சுற்றமாய்க் கால்நடைகள்…இவை சுற்றியிருக்க, வேறு தெய்வங்கள் எதற்கு? ஈடாமோ இதற்கு? என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

உயர்வாய்

பெற்றோ ரில்லா நிலையினிலும்
பேணி வளர்க்கும் அண்ணன்மார்,
உற்ற துணையாய் உடன்பிறந்தோர்
உலகி லுயர்ந்த பாதுகாப்பு,
சுற்ற மாகக் கால்நடைகள்
சுழலும் வாழ்வும் சிறப்பாக,
மற்ற தெய்வ மெல்லாமே
மண்ணில் செய்த பதுமைகளே…!

*****

மரமேறிக் குதித்தது, மாங்காய்ப் பறித்து, பச்சைக் குதிரையை இச்சையொடு தாண்டியது, பாம்பைக் கண்டு பயந்து பதுங்கியது என்று இனிமையான தன் இளமைக்காலக் கிராம வாழ்க்கையை நகரத்து நரக வாழ்க்கையின் மத்தியிலும் அசைபோட்டு ஆனந்தம் கொள்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

உடலும் உயிரும்

துள்ளித் திரிந்த பிள்ளைப் பருவம்
நினைக்க, நினைக்க உள்ளம் இனிக்கும்!
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம்!
கவலை இல்லா அருமைக் காலம்!
தட்டான் பிடிக்க ஓடியதும்
நுங்கு வண்டி ஓட்டியதும்
குட்டையில் மீன் பிடித்ததும்
பச்சைக் குதிரை தாண்டியதும்
மரம் ஏறிக் குதித்ததும்
மாங்காய் பறித்துத் தின்றதும்
தென்னந் தோப்பு நிழலினிலே
தோழருடன் கூடிக் களித்ததும்
ஏற்றம் இறைப்பதை ரசித்ததும்
நெற்பயிர் வாசம் ருசித்ததும்
ஆட்டுக்குட்டியை தழுவி மகிழ்ந்ததும்
கன்றுக்குட்டியுடன் துள்ளிக் குதித்ததும்
பாம்பைக் கண்டு பயந்ததும்
வாய்பாடு பாட்டாய்ச் சொன்னதும்
கணக்குப் பாடம் கண்டு மிரண்டதும்
தமிழில் பாடம் படித்ததும்
இன்பச் சுற்றுலா சென்றதும்
மஞ்சு விரட்டு பார்த்து மனம் மயங்கி நின்றதும்
ஒழுக்கம், இரக்கம், உண்மை சொல்லித் தந்த
ஆசிரியரைத் தெய்வமாய் நினைத்ததும்
கிராமத்து வாழ்க்கை இன்பமடா!
நகரத்து வாழ்க்கை நரகமடா!
நான் அனுபவித்தததைச் சொல்லுகிறேன்!
உங்களை அனுபவிக்கச் சொல்லுகிறேன்!
உயிரெனும் கிராமத்தைக் கொன்று விட்டு
உடலெனும் நகரத்தில் வாழுகின்றோம்!
உயிரற்ற உடலால் என்ன பயன்?
உயிரும் உடலும் சேரட்டும்!
இன்பம் என்றும் நிலைக்கட்டும்!

*****

உயிர்ப்பான இப்படத்திற்குக் கவிதைகள் அதிக அளவில் வாராதது வருத்தமே! எனினும், பங்குபெற்ற கவிஞர்கள் நல்ல சிந்தனைகளைத் தம் கவிதைகளில் நட்டுவைத்திருப்பதில் மகிழ்ச்சியே!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

ஏழைச் சிறுவனின் ஏக்கம்!

உருளுகின்ற இவ்வுலகில் உழைக்கும் வர்க்கமாய்..
   உழல்பவர்கள் ஏராளம்! அதிலும் உழைக்காமலே..
பொருளீட்டும் மாந்தரும் உண்டாம் இவர்களின்..
   இருட்டு மனத்திலேயாம் வெளிச்சம் தேடுகிறோம்!
மருண்டே வாழ்ந்து மண்ணில் மடிவதுதானெம்..
   மக்களின் தலையில் எழுதியதலை விதிபோலாம்!
அருளுகின்ற இறைவனும் ஏழை எமக்கென்றே..
  ஆரோக்கியமும் பிள்ளைச் செல்வமும் அருளினான்!

ஆனால்…

பள்ளிசெல்லும் எண்ணமே சத்துணவுக் காகத்தான்..
   படிப்பிலே கவனமிலாப் பலசோலி எங்களுக்குண்டு!
வெள்ளி முளைக்குமுன் வேகமாய்ச் செயல்புரிந்தே..
   வதைக்கும் உழைப்பால் படிப்பினில் நாட்டமில்லை!
பிள்ளையாய் இருக்கும்போதே இடுப்பில் இன்னொரு..
   பிள்ளையைச் சுமக்க வேண்டுமா ஏழ்மையென்பதால்!?
கள்ளமிலா மனதோடு கல்விகற்க ஆசைதான் ஆனால்…
   சல்லாபமாய் வாழநினையின் சங்கடமே வருகிறது!
அப்பனும் ஆத்தாளுமில்லை அரவணைத்து வளர்க்க..
   ஆதரவாய் உற்றோர் உறவினருமென எவருமிலை!
தப்பேதும் செய்யாமலே தண்டனை மிகப்பெரிதோ…
   தகும்நூலைப் படித்துயர ஒருபோதும் வழியில்லை!
எப்படி வாழ்வதென எண்ணியே கலங்குகின்றோம்..
   எங்கள் கடமைகளை அனுதினமும் செய்கின்றோம்!
இப்பாரினில் ஏழ்மைக் குழந்தைபடும் துயரம்போல்..
   எவருக்குமே வராதென…..அருள்வாயா இறைவா?

ஏழைகளின் வாழ்க்கை இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ? வறுமை அவர்கள் வாழ்வைச் சூறையாட, பொறுப்புகள் அவர்கள் இளமைக்கால இனிமையைச் சூறையாட, மிஞ்சியிருப்பது அவநம்பிக்கையும் விரக்தியுமே!

உருண்டோடிடும் பணங்காசெனும் செல்வம் அவர்களிடம் குறைந்திருந்தாலும், தளர்நடையால் மனம்மயக்கும் வளர்பிறைபோலும் மழலைச்செல்வம் அவர்கள் மனையிலே நிறைந்திருக்கும். எனினும், கல்வி எனும் கண்பெற்றுக் கற்றோர் அவைக்கண் ஏறுபோல் பீடுநடைபோட அவர்களின் இன்மை பெருந்தடையாய் இருப்பது புன்மையே!

அவ்வகையில் ஏழைபடும் பாட்டை ஓர் ஏழைச்சிறுவனின் வாய்மொழியாய் உளங்கசியும் வண்ணம் உருக்கமாய்த் தன் பாட்டில் பதிவுசெய்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி

Share

About the Author

மேகலா இராமமூர்த்தி

has written 336 stories on this site.

3 Comments on “படக்கவிதைப் போட்டி 127-இன் முடிவுகள்”

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 18 September, 2017, 10:41

  படம்பார்த்துக் கவிதை எழுதும் வகையில் அமைந்ததொரு காட்சியைக் கறுப்புவெள்ளையில் ஒளிஓவியமாய்த் தீட்டியிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர் திரு. கோகுல்நாத், இதனைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் முதலில் என் இனிய நன்றி!

  அடுத்ததாக, இந்த வாரம் எனது கவிதையின் மூலம் “சிறந்த கவிஞர்” எனும் பட்டத்தை நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தியிடமிருந்து பெருவதை பெருமையுடன் ஏற்கிறேன்.

  நல்ல கவிதைக்குப் பாராட்டுக் கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கவிதைப் போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து ஒரு கவிதைப் புத்தகமாக வல்லமை மூலமாக வெளியிட, நிறுவனர், ஆசிரியர் குழு தவிர வல்லமை அன்பர்கள் அனைவரும் முன் வரவேண்டும்.

  அதிலும் குறிப்பாக பதிப்பகம் சம்பந்தமுடையவர்கள் இதை ஊக்குவிக்க வேண்டும்.

  இந்த விஷயங்களுக்கெல்லாம் மிகவும் பொருத்தமானவர் கவிஞர் காவிரிமைந்தனும் மற்றும் கவிஞர் வையவனும் என்றே நான் நினைக்கிறேன். ஆவன செய்யுமாறு விண்ணப்பிக்கிறேன்.

  அன்புடன்
  பெருவை பார்த்தசாரதி

 • தமிழ்த்தேனீ
  தமிழ்த்தேனீ wrote on 18 September, 2017, 12:35

  வாழ்த்துகள் திரு பெருவையாரே எப்போதுமே கற்பனை கொடிகட்டிப் பறக்கிறது உமக்கு

  அன்புடன்
  தமிழ்த்தேனீ

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 21 September, 2017, 9:04

  மனமுவந்து, அகமகிழ்ந்து அருமையாக வாழ்த்தியமைக்கு, மிக்க நன்றி திரு தமிழ்த்தேனீ அய்யா…

  ஊக்கம் தரும் பாராட்டு…

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.