க. பாலசுப்பிரமணியன்

 

வைஷ்ணவி

vaishno-devi-wallpaper

சிங்கத்தின் மேலமர்ந்தாலும் சிங்காரச் சித்திரமே

அங்கமெல்லாம் ஒளிர்ந்திடுமே ஆனந்தத் திருவுருவே

மறையேதும் தேவையில்லை மனமுவந்து அழைத்ததுமே

மனமிரங்கி வந்திடுவாய் மலையாளும் மாதரசி !

 

பனிமழையிலே அமர்ந்தே பெய்கின்ற அருள்மழையே

விதிவலியை நீக்கிடவே வான்தந்த அருமருந்தே

மகிடனைக் கொன்றிடவே பிளிறிட்ட மதக்களிரே

மனதினில் வைத்தவுடன் தாய்மையின் திருவுருவே !

 

கண்ணிரண்டும் காந்தமெனக் கவர்ந்திழுக்கும் கற்பகமே

கையிரண்டில் ஆயுதங்கள் கலியெல்லாம் அழித்திடுமே

மலையேறி வந்தோரின் மனையெல்லாம் வருபவளே

மனதினில் நீயிருக்க மாதமெல்லாம் மங்கலமே!

 

சொல்லுக்குள்ளே உன்புகழைச் சுமைதாங்க வளமில்லை

சூசகமாய்ச் சொல்லுகின்றேன் சொல்லுவதே நீதானே?

கல்லாத மனிதருக்கும் கவிபாடும்  திறன்வருமே

கருவாக நீயிருக்கக் கற்பனைகள் வேறெதற்கு ?

 

பூவாகப் பொழிலாக புவியெல்லாம் ஆள்பவளே

புன்னகைக்குப் பொருள்சொல்ல பூமகளே வருவாயோ ?

பொன்னெதற்கு மண்ணெதற்கு உன்நினைவு இருக்கையிலே

போதுமென்ற மனம்வேண்டும் புகலிடமே உன்பாதம் !

 

விண்மீன்கள் அண்டங்கள் விழியினிலே வலம்வரவே

மின்மினியாய் விண்வெளியில் இன்றிரவே வந்திடுவாய்

கண்விழியில் நல்வரவை நானெழுதிக் காத்திருப்பேன்

இன்னிசையில் உன்புகழை நான்பாடக் கேட்டிருப்பாய் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *