-மேகலா இராமமூர்த்தி

crane

நீரில் ஓடுமீனைக் கவ்வி உண்பதற்குச் செவ்வி பார்த்திருக்கும் கொக்கைத் தன் ஒளிப்படப்பெட்டியில் களிப்போடு பதிவுசெய்து வந்திருப்பவர் திரு. வெங்கட்ராமன். நீரில் ஒயிலாக நின்றிருக்கும் பறவையைப் படக்கவிதைப் போட்டிக்கானப் பாடுபொருளாய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து
(490) என்று காலம் பார்த்திருக்கும் கொக்கின் பொறுமையையும், எண்ணிய காலம் வாய்த்ததும் திண்மையாய்க் காரியமாற்றும் அதன் வீரியத்தையும் விதந்தோதுகின்றது வள்ளுவம்.

படத்தில் காட்சிதரும் கொக்கைவைத்துப் பக்குவமாய்ப் பாடல் சமைக்க அடுத்து வருகின்றார்கள் நம் கவிஞர்கள்!

வருக கவிவலவர்களே! தருக உம் கவியமுதை…யாம் பருக! என்று அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

***

முன்பு குளக்கரையில் தண்ணீருக்காகக் காத்திருந்த கொக்கு, தண்ணீர் வந்ததும் கொத்தித் தின்ன மீன்வருமா என்று மீண்டும் காத்திருக்கின்றது! அதன் ஆசை நிறைவேறுமா…இல்லை கானல் நீராய் மாறுமா? என்று கவலையோடு கேட்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

வருமா…?

காத்திருக்கிறது கொக்கு,
கானல்நீராம் வாழ்வை எண்ணி..

முன்பு
குளம் வறண்டபோது,
குடிக்கக்கூட நீரின்றி
காத்திருந்தது
குளத்தில் தண்ணீருக்காக..

தண்ணீர் வந்தது,
குடித்துவிட்டு
நீரில்
நிலையாய் நின்று
காத்திருக்கிறது இப்போது
மீனுக்காக..

வருமா,
வாழ்க்கையது கானல்நீரா…!

***

”’பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பதைத் தன் செய்கையால் மெய்ப்பிக்கும் அற்புதப் பறவையல்லவா இது!” என்று பூரிக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம். 

பறவை சொன்ன பாடம்:

நீர் நிலையில் நின்று தவம் செய்யும் பறவை இது!
பொறுத்திருந்தால் நன்மை உண்டென்று உணர்த்தும்பறவை இது!
பதறிய காரியம் சிதறி விடும் என்று நமக்கு
காட்டும் பறவை இது!
பாலின் நிறம் கொண்ட அழகுப் பறவை இது !
உள்ளது போகாது! இல்லது வாராது!
எனும் பாடம் சொல்லும் பறவை இது!
ஆண்டவன் படைத்த அற்புத படைப்பு இது!
பொறுத்தார் பூமி ஆள்வார்!
கொக்கிடம் இது நான் கற்ற பாடம்!
என் வாழ்க்கையில் கூட வரும்!
அனைத்தும் இனி எனக்கு கை கூட வரும்!

***

”தனக்கு இரைதேடி நீரில் தவமிருக்கும் இந்தக் கொக்கும் ஒருநாள் இன்னொருவனின் தோட்டாவுக்கு இரையாகும். ஒன்றையொன்று அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கையே” என்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி. 

உயிர் உணவு...!

அக்கால முனிவர் அந்தரத்தில் தொங்கியே..
……….
அருந்தவம் புரிவார் வாழ்வின் காரணமறிய..
கொக்கொன்று இரை தேடித் தண்ணீரின்மேல்..
……….
கொள்வது தன்வயிறை நிரப்பும் தனித்தவமாகும்.!
பக்குவமாய்த் நீரில் தவமிருந்து இரைபிடிக்க..
……….
பாம்புபோல் இருக்கும் தன்கழுத்தை நீட்டும்.!
சிக்குமென சிலமணி நேரம் காத்திருக்கும்..
……….
சீராகக் கண்ணை இரைமேல் பதித்திருக்கும்.!

பாவப்பட்ட ஜென்மமது பறந்து திரிந்தாலும்..
……….
பசியாற ஓரிடத்தில் உட்காரும்.!….அப்போது
ஏவப்பட்ட தோட்டாவுக் கது இரையாகும்.!

……….இதுவுமோர் இயற்கை வகுத்த விதியாகும்.!
தூவப்பட்ட இரை எளிதே கிடைக்குதென்று..
……….
தீதுநினையாப் பறவைகள் வலையில் சிக்கும்.!
தேவைப் பட்டால் எவ்வுயிரும் உணவாகும்..
……….
தங்கும் மண்ணில் வாழுகின்ற மனிதனுக்கே.!

இரைகவரும் கொக்கின் திறமையை, பொறுமையைத் தம் பாடல்களில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

***

இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

காலமறிந்த கொக்கே
வெண்மையின் உருவே!
வெண்பட்டு வனப்பே!
நீரைத் தாண்டிய நீளமான காலழகே!
காலத்தின் மதிப்பே
கூர்ந்த நோக்கே
சித்திரத்தில் முத்திரை பதிக்கும்
தூரிகையின் துடிப்புடன் துழாவும் அலகே!
அலகுயெனும் தடம்பிடித்து வெற்றித் தடம் பதித்த அழகியே!
குறிக்கோள் கொண்டு குறிவைக்கும் குறிகாரி!
இலக்கினை அடையத் தனித்திருந்து விழித்திருக்கும் வித்தகி!
இடமறிந்து திடமுடன்
இலகுவாய் இரைகவரும் இலட்சியவாதி!
ஒற்றைக் கால் தவத்தில்
ஓடுமீன் பற்றும் பண்பான பறவையே
ஆதலால் காதல் கொண்டே
உன்னைப் பாடியது வான்புகழ் வள்ளுவம்
உலகமறிந்த உன்னுழைப்பை
உறங்கும் உள்ளங்களில் தூவ வேண்டும்!
பறவையின் பவிசு பாரெனப்
பாரெங்கும் பாடவேண்டும்!
மானுட மதிப்பறியா
மயங்கிய மனங்களில்
சிறகசைத்துப் பறவையின் புகழை ஓதவேண்டும்!
ஒய்யாரக் கழுத்தசைத்து
அலகு தூரிகையில்
காலத்தின் மதிப்பெழுது கொக்கே!
கடமை மறந்து களித்திருப்போரைக்
கைவிடட்டும்
சோம்பல் சொக்கே!

காலமறிந்து காரியமாற்றினால் ஞாலமும் கைகூடும்; வையகமும் நம் கையகம் வரும் என்பது ஆன்றோரின் அனுபவமொழி.   அதனைத் தக்கபடி உணர்ந்து, ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருந்து, தன் திறத்தால், மதியின் தந்திரத்தால் இலகுவாய் இரை கவரும் கொக்கென்னும் இந்த இலட்சியவாதியைப் பாரே வியந்து பாடவேண்டும்; இப்பறவையின் புகழை ஓதவேண்டும் என்று கொக்கின் செயலைச் சொக்கும் வார்த்தைகளில் செப்பியிருக்கும் திருமிகு. மா. பத்ம பிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 128-இன் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *