இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 250 )

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலிலே உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். ஏதேதோ எண்ணங்களுடன் நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்வினுள் புகுந்து கொள்கிறோம். எதை எமது இலக்காகக் கொண்டு வாழ்வைத் தொடங்குகிறோமோ அந்த இலக்கை அடைந்து விட்டோம் எனும் பெருமையோடு வாழ்வை முடித்துக் கொள்பவர்கள் சிலரே! அதற்காக வாழ்வின் முடிவில் நாமடைந்த நிலையைப் பற்றி மற்றையோர்கள் பெருமைப்படக்கூடாது என்பதல்ல பொருள். நாமடைந்தவற்றைப் பெருமையாக எடுத்துக் கொள்ளும் பண்பு வாழ்வின் எமது வளர்ச்சியோடு வளர்ந்துள்ளதா என்பதுவே கேள்வி. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எமது ஆரம்பப் புள்ளியிலிருந்து நாமடையப் போகும் புள்ளிக்கு இரண்டு மூன்று வழிகள் இருக்கும் அதை முன்கூட்டியே அறிந்து வைத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிப்பதுவே எம்மில் அனுபவமிக்கவர்கள் செய்யும் செயல். ஏனெனில் ஒரு வழியில் தடையேற்பட்டால் மற்றொரு வழி மூலம் எமது இலக்கை அடையலாம் என்பதினாலேயே.

ஆனால் வாழ்க்கைப் பயணம் அத்தகைய இலகுவானது அல்ல. எமது இலக்குக்கான பாதைகள் பல ஆரம்பிக்கும்போதே எமது கண்களுக்குத் தெரிவதில்லை. போகும் வழியில் எங்கோ ஓரிடத்தில் ஒரு தடையேற்படுகிறது. எமது இலக்குக்கான மாற்றுவழி தென்படாவிட்டால் நாம் இலக்கையே மாற்ற வேண்டிய தேவையேற்படுகிறது. இது நாம் வாழ்வில் தோல்வியடைந்து விட்டோம் என்று அர்த்தமாகுமா ? இங்கிலாந்துக்கு முதன் முதலில் வரும்போது ஐந்து வருடத் திட்டத்துடன் நுழைந்தவன் நான். ஐந்தே ஐந்து வருடங்களின் பின்னால் என் தாய்நாட்டிற்குத் தேர்ச்சி பெற்ற பொறியியலாளனாகத் திரும்பி எனது தாய்நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்பது அன்றைய இலட்சியமாக இருந்தது. ஆனால் காலம் போட்ட கணக்கே வேறு.  இன்று ஏறத்தாழ 43 வருடங்களின் பின் அதே இங்கிலாந்தில் இருந்து மடல் வரைந்து கொண்டிருக்கிறேன். எனது பொறியியல் அனுபவங்கள் இங்கிலாந்து நாட்டின் நிறுவனத்துக்கு ஏறத்தாழ முப்பது வருடங்கள் சேவையாற்றியுள்ளது. என் வாழ்வினை நான் தோல்வி எனவும் எடுக்கலாம் அன்றி வெற்றி என்றும் எடுக்கலாம். ஒரு தோல்வியின் பின்னால் மறைந்துள்ள வெற்றி என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்புவது ஒன்றே மனத்துக்கு அமைதியைக் கொடுக்கும்.  ஓர் ஓட்டப்போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக முன்னதாக இலக்கை அடைந்த முதல் மூன்று பேருக்கு மட்டுமே பரிசு கிடைக்கிறது. அவ்வோட்டப் போட்டியில் பங்குபற்றி இலக்கைத் தொட்ட அனைவருமே வெற்றி பெற்றவர்கள் எனும் உண்மையை இலகுவாக மறந்து போய்விடுகிறோம். வாழ்க்கையை ஓர் ஓட்டப்போட்டி என்று எடுத்துக் கொள்வோம். அதன் இறுதி இலக்கு அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் அதை யார் முதலில் தொடுவார்கள் என்பதை எம்மால் அறுதியிட்டுக் கூறி விட முடியுமா? ஒரு எண்பது வயதுப் பெரியவர் இன்னமும் ஓடிக் கொண்டேயிருப்பார் ஒரு முப்பது வயது இளைஞன் அவருக்கு முன்னாலேயே இலக்கைத் தொட்டு விட்டிருப்பான். இங்கு வெற்றி பெற்றவர் யார் ? எனது நல்ல நண்பர் ஒருவர். இங்கிலாந்தில் வாழும் வேளையில் தனக்கும், ஈழத்தில் வசிக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை கனடாவில் அமைத்துக் கொள்ள விரும்பினார் அதற்காக ஏறத்தாழ நான்கு முறைகள் முயற்சித்து நாலாம் தடவையே தன் முயற்சியில் வெற்றி கண்டார். இன்றோ கனடாவில் ஒரு நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதலாவது தோல்வியிலேயே மனம் தளர்ந்து போயிருப்பாரேயாகில் இன்றைய நல்ல வாழ்க்கையை அவர் அனுபவித்திருப்பாரா என்பது கேள்விக்குறியே!

பூரணமான கணத்தைத் தேடுவதை விடுத்து எமக்குக் கிடைக்கும் கணங்கள் ஒவ்வொன்றையும் எவ்வாறு பூரணப்படுத்துவது என்று எண்ணுவதே சாலச்சிறந்ததாகும். எனது நாற்பதாவது வயதுவரை நான் ஒரு எழுத்தாளானாவேன் என்று கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் இன்று எழுத்து இல்லையேல் நானில்லை எனும் அளவுக்கு எழுவதை நேசிக்கும் ஒரு மனிதனாக வாழ்கிறேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் ஒவ்வொருவருடைய பாதையும் அவர்களின் ஆரம்ப இலக்கை அடையவில்லை எனினும் நாம் பயணிக்கும் பாதையை ரசிக்கவும், விரும்பவும் கற்றுக்கொள்ளும்போது அது ஒரு வெற்றிகரமான இலக்கையே எமக்குப் பரிசளிக்கிறது என்பதனை என் வாழ்வின் அடிப்படையில் இருந்து சுட்டிக்காட்டுவதற்காகவே! கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகள், “மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று” இவ்வுண்மையை எமக்கு அழகுறவே எடுத்துக்காட்டுகிறது.

உங்களுடனான எனது மடல் உறவாடலில் 250 வாரங்களை எட்டிப்பிடித்து விட்டேன் என்று எண்ணும்போது கால ஓட்டத்தின் வேகத்தை உணர முடிகிறது. ஒரு நீண்ட பயணத்தை நடத்தும் ஒருவன் இடையிடையே சில மைல் கற்களில் அமர்ந்து தான்வந்த பாதையின் அனுபவங்களையும் இனித்தான் எட்ட வேண்டிய தூரத்தின் நீளத்தையும் அலசுவது போல இத்தகைய மைல் கற்களில் நானும் எனது இந்த எழுத்துப் பயணத்தின் நீளத்தையும், நோக்கத்தையும் அலசும் முகமாகவே இந்த மடல் வரைவு.

இந்தப் பிரபஞ்சத்தின் காலத்தோடு ஒப்பிடுகையில் ஒரு நீர்க்குமிழி போன்ற எனது வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்களின் நீளம் இத்தனை பெரிதா? என்று எண்ணும் போது “எறும்பும் தன் கையால் எண்சாண்” எனும் முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது. எழுத்து என்பது புனைவு எனும் காலத்தை மாற்றியவர்களில் கவியரசர் வகித்த பாத்திரமும் முக்கியமானது. அவர் எழுத்துக்குக் கொடுத்த வடிவம் ஒரு புதுவகை அர்த்தத்தைத் தந்தது. சுய அலசல் எத்தனை தூரம் ஒரு மனிதனின் மனத்தின் அழுக்குகளைக் களைய உதவுகிறது எனும் உண்மை புலர ஆரம்பித்தது.

எங்கோ பிறந்தேன் இன்று எங்கோ வாழ்கிறேன். ஆனால் நான் வாழும் இந்தப் புலம்பெயர் மண்ணில் நான் காணும் அன்றிக் கேட்கும் விடயங்களின் தாக்கங்களை ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையிலும் அந்நிய நாட்டிலிருந்து இங்கு வந்து இந்நாட்டின் குடியுரிமை பெற்றவன் எனும் வகையிலும் என் உடன்பிறவா உறவுகள், தமிழன்னை ஈந்த சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்வது அதுவும் தெரிந்தவற்றை எதுவித மாற்றமுமில்லாமல் அப்படியே பகிர்ந்து கொள்வது எனும் எனது நோக்கில் எத்தனை தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதைத் தீர்மானிப்பவர்கள் என் அன்பு உள்ளங்களாகிய நீங்களே!

ஒன்று மட்டும் எனது உள்ளத்துக்கு உறுதியாகத் தெரிகிறது. என் கையில் வலுவிருக்கும்வரை, எனது மனத்தின் உணர்வுகளை நான் காணும், கேட்கும், அனுபவிக்கும் விடயங்களை மடலாக பகிர்ந்து கொள்வேன் என்பதே அது.

உங்கள் அன்பிற்கும் , ஆதரவுக்கும் அனைத்துக்கும் மேலாக பொறுமைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்!

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *