நிர்மலா ராகவன்

ஞாபகம் வருதே!

நலம்-2-1

` ஆனாலும் எனக்கு ரொம்ப மறதி!’ என்று அலுத்துக்கொள்கிறார் ஒருவர்.

இன்னொருவரோ, `நினைக்கத் தெரிந்த மனமே! உனக்கு மறக்கத் தெரியாதா!’ என்று கெஞ்சுகிறார். (அனேகமாக, காதலராகத்தான் இருக்கும்).

வாழ்வில் மிக இனிமையானவை கடந்துபோன தருணங்கள். அக்காலத்தில் பொறுக்க முடியாத சில சந்தர்ப்பங்களும் இருந்திருக்கும். அவைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், ஆடையின்கீழ் இருக்கும் பால்போல், மறக்கமுடியாதவை, மறக்கக்கூடாதவை, தெளிவாகத் தெரியும். அதற்காகத்தான் திருமணம், பிறந்தநாள் போன்ற மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை புகைப்படங்களில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம்.

ஒரு பள்ளிக்கூடத்திலோ, அல்லது கல்லூரியிலோ ஒன்றாகப் படித்தவர்கள் இருபத்தைந்து வருடங்களுக்குப்பின் ஏன் கூடுகிறார்கள்? அக்காலத்தில் தாம் அனுபவித்தவை, தண்டித்த ஆசிரியை, செய்த விஷமங்கள் என்று எல்லாவற்றையும் அசைபோடும்போதே ஒரு மகிழ்ச்சி.

நாம் எங்கு சென்றாலும் நம்முடன் தொடர்ந்து வருவது கல்வி மட்டுமல்ல, நினைவுகளும்தான்.

கதை

அப்போது நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். அடுத்த பாடத்தை எடுக்க வரும் ஆசிரியை வகுப்பிற்குள் நுழைவதற்குள் எங்களில் சிலர் பலரது வேண்டுகோளுக்கு இணங்க திரைப்படப் பாடல்களைப் பாட ஆரம்பித்தோம்.

எப்போதும் இடைவேளையின்போதுதான் பின்னணி இசையை எல்லாம் வாயாலேயே அளித்து நான் பாடுவேன். அன்று என்னவோ, புத்தி கெட்டுப்போயிற்று. (ஒரு வேளை, மறக்கமுடியாத தருணம் ஒன்று அமைய வேண்டியிருந்தோ?)

குழுவாகப் பாடப் பாட உற்சாகம் பீறிட்டது. இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். `இன்னிக்கு மிஸ் வரலே!’ என்று மகிழ்ச்சியுடன், எங்கள் கச்சேரியைத் தொடர்ந்தோம். வகுப்பில் ஒரே ஆரவாரம். கைதட்டி எங்களை ஊக்குவிக்க தோழிகள் இருந்தபோது, ஆசிரியை உள்ளே நுழைந்தது கண்ணில் படுமா?

மணி அடிக்கும் சமயம் ஆசிரியை மீண்டும் வந்தார். அவர் முகத்தில் தெரிந்த கோபம் எங்களை அச்சுறுத்தியது.

முதலிலேயே வகுப்புக்கு வந்தாரா!

அது எப்படி கவனிக்காமல் போனோம்?

“கிளாஸ் மானிட்டரே இப்படி இருந்தால் என்ன சொல்வது?” என்று என்னை ஒரு பார்வை பார்த்தார். குறித்த நேரத்தில் ஆசிரியை ஒருவர் வராவிட்டால், போய் விசாரிக்க வேண்டியது என் கடமையாக இருந்தது. பொங்கிய சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையைக் குனிந்தேன்.

என்னுடன் சேர்ந்து பாடிய (அமர்க்களம் செய்த என்று புரிந்துகொள்ளவும்) பெண்ணின் பெயர் டி.ஸ்.வசந்தகுமாரி.

அவளைப் பார்த்து, “உன் பெயர் M.L. வசந்தகுமாரி இல்லை. நினைவு வைத்துக்கொள்!” என்று சீறினார்.

எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்தது. நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம் என்று அடக்கிக்கொண்டோம்.

“உன் பெயர் M.L. வசந்தகுமாரி இல்லை. நினைவு வைத்துக்கொள்!” என்று சொல்லிச் சொல்லி, அந்த ஆண்டு பூராவும் அவளைக் கேலி செய்தோம்.

இதைப்போன்று எவ்வளவோ! அதெல்லாம் பசுமையாக மனதில் படிந்துவிட்டதால், `இந்த வயதில் இதெல்லாம் சகஜம்!’ என்று `பெரிய மனதுடன்’ பிற்காலத்தில் மாணவர்கள் செய்யும் சிறு குறும்புகளை என்னால் ரசிக்க முடிந்தது.

ஒலி தூண்டும் நினைவுகள்

ஏதாவது பழைய பாட்டைக் கேட்டால், அதை நாம் ரசித்த காலம், அப்போது நம்முடன் இருந்தவர்கள் என்ற ஏதேதோ நினைவில் இனிமையாக எழும்.

கதை

என் பேத்திக்கு ஒரு வயதாக இருந்தபோது, நான் மருத்துவ மனையில் இருந்தேன். “பொண் குழந்தைக்கு பொட்டு இடவேண்டாம்?” என்று மகளைக் கடிந்துகொண்டு, கன்னத்தைத் தொட்டபோது குழந்தை பயந்தாள். ஒரே நாள்தான். இருந்தாலும், என்னை அடையாளம் தெரியவில்லை.

உடனே நான் என்னுடன் கொண்டு வந்திருந்த சாந்தை எடுத்து, நாக்கு நுனியால் கீழுதட்டின் உள்பாகத்தில் ஓசை எழுப்பினேன். சிறு குழந்தைகள் அசங்காமலிருக்க, பொட்டோ, கண் மையோ இடும்போது இந்த யுக்தியைக் கையாள்வது வழக்கம்.

`பாட்டிதானே இப்படிப் பண்ணி பொட்டு இடுவாள்!’ என்ற நினைவு எழ, சிரித்தபடி என்னிடம் தாவினாள்.

இதை அவளிடம் இப்போது கூற, சிரிக்கிறாள். குழந்தைகளிடம் அவர்கள் பால்யப்பருவத்தைப்பற்றிக் கூறி வளர்த்தால், அவர்களுடைய ஞாபகசக்தி பெருகுமாம்.

வாசனையும் நினைவுகளும்

சமையல் செய்யும்போதோ அல்லது ஏதாவது உணவுவகையை நெடுநாளைக்குமுன் உண்ண நேரிட்டாலோ, நம் நினைவு எங்கோ பறக்கும்.

கதை

நான் முதன்முதலில் தோசை வார்க்கும்போது non-stick (ஒட்டாமல் இருப்பது) தோசைக்கல் கிடையாது.

என்னை நம்பி என் குடும்பத்தினரை விட்டுவிட்டு என் தாய் வெளியூர் போய்விடுவாள், தன் தாயைப் பார்க்க.

நான் தோசை வார்த்தால், சரியான பதம் புரியாமல் அதை நூறு கிழிசல்களாக எடுத்துவிடுவேன்.

சிலாகிப்பதுபோல் “கிழிச்சு திங்கற வேலை வைக்காம, எவ்வளவு ஜோரா பண்ணறா!” என்று கேலி செய்வார்கள்.

“இப்படியெல்லாம் கேலி பண்ணினா, இனிமே நான் சமைக்கவே மாட்டேன்!” என்று சண்டை பிடிப்பேன்.

இப்போது பத்து வயதுக் குழந்தைகள்கூட கிழியாமல் தோசையைத் திருப்பும்போது, அவர்களிடம் அந்த தருணங்களை நினைவுகூர்வேன். பெரியவர்களைப் பார்த்துச் சிரிப்பது மரியாதையாக இருக்குமா என்று யோசித்துச் சிரிப்பார்கள்!

நல்லதை நினைவில் வை

`அம்மா என்னை எப்பவும் திட்டுவாள்!’ என்று ஒரு பெண்மணி சிறு வயதில் தன்னைக் கண்டித்த தாய்மீது வன்மம் கொள்கிறாள். (தந்தையும் திட்டியிருப்பார். அது மனதில் நிலைப்பதில்லை சிலருக்கு).

`அம்மா என்னை கண்டிப்பாக வளர்த்ததால்தான் நான் இன்று நல்ல நிலைக்கு வந்திருக்கிறேன்!’ என்று கூறுவார் இன்னொருவர்.

ஒரேவித வளர்ப்புதான். ஆனால் ஞாபகசக்தி நல்லவைகளை மறந்துவிட்டது. எப்போதோ நடந்த சோகக்கதைகளைச் சொல்லி, தன்மேல் பிறரைப் பரிதாபம் கொள்ளச்செய்வதுதான் பாசம் என்று தவறாக எண்ணுகிறார்கள் சிலர்.

பழைய நினைவுகளிலேயே காலத்தைக் கழிக்க நினைப்பது நிகழ்காலத்திற்கு நல்லதல்ல. நாம் களைத்துப்போய், அல்லது வருத்தமாக இருக்கும்போது தம் மனதிற்கு மகிழ்ச்சியூட்டிய தருணங்களை நினைவுகூர்ந்தால் உற்சாகமாக உணரமுடியும்.

உணர்வுகளும் நினைவுகளும்

நாம் என்றோ செய்த தவறுகளை நினைக்கவே அஞ்சுகிறோம். அவைகளை அசைபோட்டால், மீண்டும் அதே தவற்றைச் செய்யாதிருக்கலாம். ஏன், பிறர் செய்த தவறுகளிலிருந்தும் பாடம் கற்கலாமே!

விவாகரத்து செய்துகொண்ட பல பெண்களைச் சந்தித்திருக்கிறேன். முதலில், அவர்களுடைய கசப்பு கணவர்மேல் எழும். காலப்போக்கில், தன்மீதே பரிதாபமும், வெறுப்பும் எழும்.

ஒரே ஒரு பெண் மட்டும் தான் எந்த சூழ்நிலையில் கணவனை விவாகரத்து செய்ய நேர்ந்தது என்று கூறிவிட்டு, `நாங்கள் ஒன்றாக இருந்தபோது, சில இனிமையான தருணங்களும் இருந்தன,’ என்று ஒத்துக்கொண்டாள்.

வேண்டாத நினைவுகளையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்காததால் அவளால் எதிர்காலத்தைத் தைரியமாக நோக்க முடிந்தது. கடந்த காலத்திலேயே வாழ்க்கை தேங்கிவிடவில்லை.

ஞாபகசக்தி வளர

ஒரு கையின் விரல்களின் நுனியை இன்னொரு கையிலுள்ள அதே விரல்களுடன் (கட்டை விரல்- கட்டை விரல், ஆள்காட்டி- ஆள்காட்டி, இப்படி) சேர்த்து, கோபுரம்போல் பிடித்துக்கொண்டால், மறந்தது சிறிது நேரத்தில் நினைவு வந்துவிடுகிறது.

வகுப்பறையில் ஆசிரியர்கள் போதிக்கையில் மாணவர்கள் இப்படிச் செய்தால், பாடம் மனதில் நன்கு படியும். `நீங்கள் சொன்னபடி செய்து பார்த்தேன். வீட்டுப்பாடங்களை சிறிது நேரத்திலேயே செய்து முடித்துவிட்டேன்!’ என்று பெருமகிழ்வுடன் தெரிவித்தாள் என் மாணவி ஒருத்தி.

நான் சமீபத்தில், `ஒரு நடிகையின் தாய் சிறு, சிறு வேடங்களில் நடிப்பாளே, அவள் பெயர் என்ன?` என்று நினைவுகூர இம்முறையைக் கையாண்டேன். அது தெரிந்து எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. எனினும், எனக்குப் பதில் கிடைத்தது!

`வேண்டாத விஷயம்!’ என்று மூளை சிலவற்றை மறந்துவிடுவது இயற்கை. அவை மறந்ததுபோலவே இருக்கட்டுமே! எதற்கு அநாவசியமான பரீட்சை?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *