பெருவை பார்த்தசாரதி

 

puthiya ottam

புதியபழைய ஓட்டமெலாம் மனிதருக்கே உண்டு
புவிக்கது உண்டென்றால் பூலோகம் நிலைக்காது!
போதிய ஊதியம் கிட்டாமல் பூவுலகிலுழல்பவர்
புதிய ஓட்டமெடுக்க நினைப்பது இயற்கைவிதியே.!
விதிவழியே செல்கின்ற வாழ்க்கையில் எதுவுமே
விளங்காமல் ஓடுமானுடக் கூட்டம்தான் அதிகம்!
நாதியற்ற ஏழைக்கிது நன்றாகவே பொருந்தும்..
நாட்டில் பாதியிதுவென கணக்கிலிது விளங்கும்!

சின்னஞ்சிறிய எறும்பும் கரையானும் தரையினில்
சீராகப்பரவி ஓடிக்கொண்டே இருப்பது எதற்காக?
பின்னங் கழுத்தில் முகத்தடிசுமந்து நாளுமிங்கே
பளுயிழுக்கும் மாட்டையும் ஒட்டகத்தையும் பார்!
தன்னந்தனியே மண்ணிலுள ஐந்தறிவு ஜீவியெலாம்..
தானாக ஓடுதிங்கே ஆர்தூண்டுதலும் இல்லாமல்!
பொன்னான எதிர்காலம் புலரநீ தொடங்குமொரு
புதிய ஓட்டம்தான் உருப்படியாய் உயரவழிசெயும்.!

பொற்காலம் வருமென்று பொன்னான நேரத்தை
பூராவும் வீணடிக்கும் வெட்டியிளைஞராய் இராமல்!
கற்காமல் பலர்வாழும் சீர்கெட்ட சமுதாயமெனும்
கட்சிகளின் சிந்தனைமழுங்கும் செயலில் புகாமல்!
கற்காலத்தின் நிலைமை பேசிப்பேசி நேரத்தையும்
காலத்தையும் வீணடிக்கும் மேடையில் ஏறாமல்!
தற்கால உலகத்தில் தலைதூக்க வேண்டுமெனில்
தகுங்கல்விபயில தகுந்த ஓட்டத்தைநீ தேர்ந்தெடு!

============================================

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::01-10-2017

நன்றி படம்:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *