“அவன், அது , ஆத்மா” (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

0

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 50

கவிமாமணி கு. தேவநாராயணன் அவர்களை சைதாப்பேட்டையில் கவிமாமணி ஐயாரப்பன் இல்லத்தில் ஒரு ஞாயிறு அன்று நடைபெற்ற பாரதி கலைக்கழகக் கவியரங்கத்தில் சந்தித்தான். அன்று அவர் பாரதி இரா. சுராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மஹாகவி பாரதியாரின் “மங்கியதோர் நிலவினிலே” கவிதையை உள்ளம் உருகும்படிப் பாடி அவையோர் அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தார். அப்படித்தான் அவனது உள்ளத்திலும் அன்று அவர் புகுந்தார். அவரது வெண்மையான கதர் சட்டையும், வேஷ்டியும், வெண்கலக்குரலில் அவர் பாடிய இனிமையும், மெல்லிய புன்னகை தவழும் முகமும் அவனை அவரின் பக்கம் செல்லத் தூண்டியது. கவியரங்கம் முடிந்து அவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். “அடடே..உனக்கும் கல்லிடைக்குறிச்சியா?..எனக்கும் அதுதான் பூர்வீகம். தொந்திவிளாகம் தெருவில்தான் இருந்தேன்.” என்று சொல்லி அவனைக் கட்டிக் கொண்டு, “நீ வாசித்த கவிதை நன்னா இருந்தது. தொடர்ந்து கவியரங்கத்துக்கு வா. நான் மந்தவெளிலதான் இருக்கேன். ஆத்துக்கு வா” என்று அழைத்தார். அதிலிருந்து அவருடன் அவனுக்கு நெருக்கம் அதிகமானது. அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. திரைப்படத்திற்கும், தொலைக்காட்சித் தொடருக்கும் வசனமும், பாடல்களும் எழுதிக் கொண்டிருந்தார்.

அவனுக்கு அப்பாவின் சதாபிஷேகம் 20.04.2008 அன்று அவனது சென்னை இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அதற்கு அவரை அவன் அழைத்திருந்தான். அன்று அவருக்கு வேலை இருந்ததால் அவர் அவனிடம், ” விஸ்வநாதா….நான் சதாபிஷேகத்திற்கு முன்தினம் வந்து கலந்து கொள்கிறேன்” என்றார். ” ரொம்ப சந்தோஷம் மாமா. அன்று மாலை நீங்கள் உங்களுக்குப் பிடித்த தலைப்பில் உரையாற்ற வேண்டும். உங்களின் உரைக்கு முன்னால் கொல்கத்தா சகோதரிகள் “கலா-சித்ரா” (அவனுக்கு மனைவி சீதாலட்சுமியின் சகோதரிகள்) பாரதியாரின் பாடல்களை ஒரு மணிநேரம் பாடுவார்கள்” என்று அவன் சொன்னதுமே, ஒரு தனி குஷியுடன், “பலே..பலே” என்று சொன்னார்.

முந்தியதினம் மாலை நான்கு மணிக்கே அவனுடைய இல்லத்திற்கு வந்து, அவனுக்கு அப்பா மற்றும் உறவினர்களுடன் தனது இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ” விஸ்வநாதா…இதுக்குத்தான் இன்னிக்கு நான் சீக்கிரமே வந்தேன். நம்ம மனுஷாளப் பார்த்துப் பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது” என்று சொல்லி மகிழ்ந்தார். அன்று அவர் இரவு எட்டு மணிமுதல் ஒன்பதரை மணிவரை உரையாற்றினார். தன் வாழ்வில் ஏற்பட்ட இறக்கம், மாற்றம், ஏற்றம் என்று மிகவும் அருமையாகப் பேசியும் பாடியும் அனைவரின் கவனத்தையும் தன்பக்கமே வைத்திருந்தார். தான் எம்.ஆர்.ராதாவைச் சந்தித்தது பற்றியும், தன்னிடம் இராமாயணக் கதையைச் சொல்ல அரைமணி நேரமே அவர் முதலில் ஒதுக்கியதாகவும், தான் கதை சொல்லிய விதத்தில் சுமார் மூன்று மணிநேரம் கேட்டு விட்டு,” தேவநாராயணன்…இப்படி ஒருத்தர் எனக்கு முன்பே கதை சொல்லி இருந்தால் நான் ஏன் நாத்திகனாகப் போகிறேன்” என்று பாராட்டியதாகவும் சொன்னார். காந்தியின் மீதும், நம் தேசத்தின் மீதும், மகாகவி பாரதியார் மீதும் தான் கொண்டிருந்த பக்தியினை மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். உரையின் முடிவில் அவர் மகாகவி பாரதியார் பற்றி எழுதிய,

“பாரதியே ஒரு பாரதம் – அவன்
பாட்டெல்லாம் தமிழ் மாருதம்
பாரத மண்ணின் காவிய வளம்தான்
பாரதி தோன்றக் காரணம்”

என்ற கவிதையைத் தன் தேன்கலந்த குரலில் பாடி அனைவரையும் சொக்கவைத்தார். அந்தப் பாடலில் வரும் “ஏட்டில் எழுத்தில் இனிவரப்போகும், எழுச்சிகள் எல்லாம் பாரதி” என்ற வரிகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். எத்துணை பக்தி அவருக்கு பாரதியாரின் மீது என்று அவன் அவரைப் பற்றிப் பெருமிதங் கொள்வான்.

பாரதி கலைகழகம் சார்பாக பாரதியாரின் “பாஞ்சாலி சபதம்” கவிதை நாடகத்தைப் பேராசிரியர் தி.வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் எழுதி இயக்கினார்கள். அதில் சகுனியின் வேடத்தில் தேவநாராயணன்தான் நடித்தார். அந்த நாடகத்தில் பங்குபெற்ற அத்தனை பேர்களுமே கவிஞர்கள். ஓரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு நடிப்புப் பயிற்சியை பேராசிரியர் சொல்லித்தரும் பொழுது,” தேவநாராயணன் சார் இந்த ஒத்திகைக்கு வல்லைன்னு கவலைப்பட வேண்டாம். அவர் நடிகர் சகஸ்ரநாமத்தின் நாடகக்குழு நடத்திய பாஞ்சாலி சபதத்தில் சகுனியாக நடித்துப் பழக்கப் பட்டவர். வசனமெல்லாம் அவருக்கு மனப்பாடம். மேடைல அவர் கைதட்டு வாங்கிண்டு போயிடுவார்” என்று பெருமையாகச் சொல்லுவார். அதேபோல நாடக அரங்கேற்றத்திற்கு முன்பு நடந்த இரண்டு மூன்று ஒத்திகைகளுக்குத்தான் அவருக்குக் கலந்துகொள்ள நேரம் இருந்தது. அனால் ஒத்திகைகளிலும் சிறப்பாக நடித்து, மேடையிலும் அமர்க்களம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தேவநாராயணன் அவர்களின் குரலினிமையைப் பற்றி பேராசிரியர் நாகநந்தி அவர்கள்,” தினமணியின் தலையங்கத்தைக் கொடுத்து இதை இசையமைத்துப் பாடுங்களேன் என்றால் கூட அற்புதமாகப் பாடக் கூடிய திறமை பெற்றவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், தேவநாராயணனும்” என்று சொல்லுவார்.

ஒருமுறை அவர் அவனை அவரது மயிலாப்பூர் இல்லத்திற்கு அழைத்தார். தான் எழுதிக் கொண்டிருக்கும் சுயசரிதையை அவனுக்கு வாசித்துக் காட்டினார். “இத ஏன் ஓங்கிட்டப் படிச்சுக் காட்டறேன் தெரியுமா? ஒனக்கு என்னோடு குடும்பச் சூழல் தெரியும். அதனால் ஓங்கிட்டப் படிச்சுக் காட்டுறதுல எனக்கு ஒரு சந்தோஷம்” என்றார். அப்பொழுது அவர் ஒரு மூன்று அத்தியாயங்கள் எழுதி இருந்தார். அதற்குள் அவர் உடல்நலம் குன்றி நோயின் வாயில் விழுந்து விட்டார். அப்பொழுது அவரைப் பார்க்க அவரது இல்லம் சென்றிருந்தான். அவரது இளைய மகன் “ரவி” உடன் இருந்தார். அவரால் அதிகம் பேச முடியவில்லை. எண்பது வயதிற்கு மேலாக வாழ்ந்த அந்த அன்புக் கவிமாமணி கு. தேவநாராயணன் 07.09.2009 அன்று இறைவனுடன் கலந்துவிட்டார். செய்தி அறிந்து அவன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வந்தான்.

அவரது படைப்புகளான, “அகல்யை”, “கைகேயின் கண்மணி ஸ்ரீராமன்”, “அமுதன் விரும்பிய ஸ்ரீராம பாதுகை” போன்ற கட்டுரைகளையும், கவிதைத் தொகுப்பையும் L.K.M. பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

பாரதி கலைக்கழகத் தலைவர் திரு.பாரதி இரா.சுராஜ் அவர்கள் கவிமாமணி தேவநாராயணன் அவர்களைக் கவியரங்கங்களில் கவிதைகளைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார். அப்படி அவர் பாடும் பல கவிதைகள் அவனுக்குப் பிடிக்கும் என்றாலும் “இந்தியா எனது நாடு, இந்தியா எனது வீடு” என்ற கவிதையும்,

“உழைக்கத் தெரிந்த என்னை ஒருநாள்
உலகம் உணருமடா
ஒவ்வொரு கல்லாய் அடுக்கி வைப்பேன்
என்மாளிகை உயருமடா”

என்ற அமர வரிகளைக் கொண்ட கவிதையும் என்றும் அவன் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அவர் நிறைய மெல்லிசைப் பாடல்களும் எழுதி இருக்கிறார். இந்தப் பாடலும் அதன் வரிகளும், இசையும் அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

“ஸ்ரீராமன் கதையே ராமாயணம்
சீதையின் பெருமை ராமாயணம்
ராமாயணம் தினம் பாராயணம்
ராமனின் நாமமே ஷேமம்தரும்”

கவிமாமணி கு.தேவநாராயணன் நல்ல கவிஞர் மாத்திரம் அல்ல, அன்பு நிறைந்த சிறந்த மனிதரும் கூட.

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *