-மேகலா இராமமூர்த்தி

 

bull fight

காளையும் காளையரும் ஒருவரையொருவர் எதிர்த்துநிற்கும் வேளையில் எடுத்த படம் இதுவென நினைக்கிறேன். புகைப்படம் எடுத்த திரு. யெஸ்ஸெம்கேவுக்கும், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

பகட்டோடு (காளை) தமிழர்க்குள்ள உறவு தலைமுறைகள் பலகடந்தும் தெவிட்டாது தொடர்ந்துவருவது. உழவுக்குடிகளாய் நம் மக்கள் வாழ்ந்திருந்த காலத்தில் வீட்டுக்கொரு பசுவும் காளையுமேனும் இருந்துவந்தன. அவர்களின் மாடாய் (செல்வம்) இருந்தவை இந்த மாடுகளே!

இன்றோ உழவுத்தொழில் விரைந்து அழிந்துவரும் நிலையில் கால்நடைகளைப் பேணுவோரும் அருகிவிட்டனர். தமிழகத்தின் ஒரோவிடங்களில் ஏறுதழுவும் விளையாட்டில் பயன்படுத்துதற்கென்று சில நாட்டுக் காளையினங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. இக்காளைகளை நாம் காலத்தே பாதுகாக்கத் தவறினால் நாட்டு மாட்டினமே தமிழ்நாட்டில் இராது. அப்புறம் நாட்டுக் காளைகளை நாம் ஏட்டில்மட்டுமே காணும் அவலநிலை வாய்த்துவிடும்.

இனி, படக்கவிதைப் போட்டிக்கு வருவோம்.

காளையும் காளையரும் இணைந்திருக்கும் இப் புகைப்படத்தைக் காணும் நம் கவிஞர்கள் மண்மணம் கமழும் கவிதைகளை ஏந்திவருவர் என்ற எதிர்பார்ப்போடு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

*****

”வீரவிளையாட்டாம் ஏறுதழுவுதலை விவேகத்தோடு விளையாடுங்கள்; உயிர் விரயத்தைத் தவிருங்கள்!” என்று காளையர்க்கு அறிவுரைகூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

காளைகளே…

துள்ளிவரும் காளையைத்
துடுக்கடக்கக்
காத்திருக்கும் காளையர்-
எள்ளளவும் பயமின்றி..

காளையரே,
வீர விளையாட்டு இதில்
விவேகமும் சேர்ந்திருக்கட்டும்..

விளையாடுங்கள் விளையாடுங்கள்
வீரம்காண விளையாடுங்கள்-
விரயம் வராமலே…!

*****

”புகைப்படத்தில் ஒயிலாய் ‘போஸ்’ கொடுக்கும் இந்தக் காளை, சிராவயல் மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்தது; அரளிப்பாறை இளைஞரை அலறவைத்தது; அலங்காநல்லூர் காளையரைக் கலங்கவைத்தது” என்று காளையின் பெருமையைக் கடைவிரிக்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

எங்க ஊர் காளை:

அஞ்சாது அனைவரையும் எதிர்த்து நிற்கும் காளை!
ஆயிரம் பேர் வந்தாலும் அஞ்சாத காளை!
சிராவயல் மஞ்சு விரட்டில் சீறிப் பாய்ந்த காளை!
அரளிப் பாறை மஞ்சு விரட்டில் அஞ்ச வைத்த காளை!
அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் செயித்து வந்த காளை!
மேல் பாய்ச்சல், கீழ்ப் பாய்ச்சல் பழகி வந்த காளை!
வெற்றி மேல்வெற்றிகளைக் குவித்து வந்த காளை!
காளையரைக் கதிகலங்க வைத்த எங்க ஊர் காளை!
துணிச்சலிலே தமிழருக்கு இணை இந்தக் காளை!
அன்புக்கு மட்டும் அடி பணியும் காளை!
அடக்க நினைப்பவர்க்குக் காலனாகும் காளை!

*****

புழுதிப் பொடியாடி நிற்கும் இந்தக் காளை, அருகிருக்கும் காளையர்க்கு நன்றி நவில்கிறதோ என்று ஐயுறும் திரு. கா. முருகேசன், ”காளையே நீ எமக்கு நன்றி சொல்ல வேண்டா! எம் வீட்டையும் நாட்டையும் வளப்படுத்தும் உனக்கும் பசுவுக்கும் நாங்களல்லவோ எம் நன்றியறியதலைப் புலப்படுத்தவேண்டும்” என்று நெகிழ்கின்றார்.

காளையும் – மனிதனும்

காளை – காளையர்
எங்கிருந்து வந்தது இந்தப் பெயர் பொருத்தம்!

காளையை அடக்குபவனும்,
கல்லைத் தூக்குபவனும்,
கன்னியின் கழுத்தில் மாலையிடலாம்
எங்கிருந்து வந்தது இந்த எழுத்து ஒற்றுமை!

இது என்ன மரபா? இல்லை வழக்கமா?

உலகிற்கே சொன்னோம் உணவு முறையை
ஏர் பிடித்து!
இன்று ஆள் இல்லை ஏர் பிடித்து உழ,
ஆனால்,
காளைகள் உண்டு!
காகிதத்தில், அழியும் இனம் என்று!

நாட்டுப் பூக்கள் உண்டு!
நாட்டுப் புலிகள் உண்டு ….!
என ஏராளம் உண்டு!
எல்லா இடத்திலும், ஆனால்,
நாட்டுப் காளை இனம் இங்கு மட்டுமே உண்டு,
என்பதனை மறந்தனரோ!

எத்தனைக் கூட்டம் இருந்தாலும்,
வாலிபன் இரத்தம் சொட்டினாலும்,
எந்தப் பக்கம் திரும்புமோ!
என் வீரத்தைச் சோதிக்க, என்றெண்ணினாலும்!
நிற்க இடம் தேடிக் காணுவோம்
உன் நிமிர்ந்த முகத்தையும்,
உன் அழகிய திமிலையும்!

இப்பொழுது தோன்றுகிறது நீ
எங்களுக்கு நன்றி சொல்வது போல்!

என்னையும்,
என் பளுவையும்,விட்டுக் கொடுக்காது,
ஒற்றைக் கோட்டில் நின்ற உங்களுக்கு,
நன்றி சொல்லி நிற்கின்றேன்,
அதே நிமிர்ந்த நடையில்!

இத்தனையும் போட்டிக்காகவா?
இல்லை, நம் கலாசாரத்திற்காக,
நமக்கும், காளைக்கும், கோ-விற்கும்
இடைப்பட்ட பந்தத்திற்காக.

அன்பினால் அஞ்சுகிறோம்
உன் முன்பு
நன்றி வேண்டாம்
வேண்டிக்கொள்கிறோம் உங்களிடம் நாங்கள்!
வீடு செழிக்கும், கோ -வின் கால் பட்டால்!
பூமி செழிக்கும் காளையின் கால் பட்டால்!

மறந்து விடாதீர்கள்!
யாரையும் மறக்கவும் விடாதீர்கள்!
நீங்கள் இந்த பூமியின்…………..!

*****

”கொல்லேற்றைத் தழுவி வெல்லும் காளையையே புல்லுவாள் ஆயமகள்” என்று சொல்லுகிறது இலக்கியம். சிந்துவெளி நாகரிகம் தொடங்கித் தொடர்ந்துவரும் அவ்வீர மரபை அழியாது காப்பதே தமிழர் கடன்” என்று பொருத்தமாய்ப் பொருளுரை பகர்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

ஏறுதழுவ வாருங்கள் இளைஞர்களே!

கால்நடையின் வளத்தை கட்டிக்காத்த தமிழினம்
கண்ணியமாக நிகழ்த்தியது காளைப்போர்
எங்கே சென்றது நம் மானமரபு
பேணமறந்தீரோ?
முல்லைநிலத்தில் ஆயர்களின் வீரத்தை
காளையின் நேரெதிரில் கண்டோமே!
கொல்லேறு தழுவா ஆண்மையை
கனவிலும் தழுவா பெண்மை
திமில் பற்றி திடம் காட்டிய வீரம்
குடரோடு குருதியோடிய நேரம்
குரவைக்கூத்தாடி குதூகலித்த மானம்
கட்டுக்குலைந்து கலைந்து போன மாயம்

மஞ்சுவிரட்டு சல்லிக்கட்டென
மங்கையின் முன் சாகசம் காட்டும் பேரம்
போலியான பாவனையில் பண்பாட்டுச் சோரம்
நாகரிக மாற்றத்தில் மரபணுமாற்றமாக
நாட்டுப்பசு நாட்டுக்காளை நலமொழிந்து….
சிதிலமடைந்த சின்னமதை சிறப்பாக்க
சிந்தனை செய் மனமே!
சிந்துவெளி நாகரிகத்தில் புதையுண்ட மரபு
செப்பம் செய்வதே பண்பாட்டின் நல்வரவு

*****

சிந்தனைவளம் செறிந்த பாக்களை அள்ளித்தந்திருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் நன்றி!

அடுத்து இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

காளையின் பெருமை..!

காளையரைக் கண்டால் ஜல்லிக் கட்டுக்
……….காளையும் தன்காலை யுதைத்துத் திமிரும்!
பாளைமடல் போன்றதன் கொம்பால் மணற்
……….பாங்கான இடத்தில் முட்டி முறுக்கேற்றும்!
தோளான அதன்திமில் கர்வ மிகுதியாலது
……….தொய்ந்துயரச் சற்றேபக்க வாட்டில் சாயும்!
வேளை வரும்போது வீரத்தை நிரூபிக்க
……….வாடிவாசல் திறக்கும் வரைக் காத்திருக்கும்!

முட்டிச் சாய்ப்பதற்கென்றே வாழப் பழகிடும்
……….மூர்க்கத்தனமாய் வாய்பிளந்து குரலெழுப்பும்!
கட்டான இளைஞர்களைக் கண்டு விட்டால்
……….கட்டுக் கடங்காமல் கூட்டத்துள் சீறிப்பாயும்!
கிட்ட யாரையும் நெருங்கவிடாமல் துரத்தும்
……….கிட்டாத பெருமையெலாமதற்கு வந்து சேரும்!
போட்டியென வந்துவிட்டால் போதும் அது
……….மாட்டு வண்டியாயினும் மகிழ்ந்தே இழுக்கும்!

வாசுதேவனுனை மேய்த்த அருஞ் செயலால்
……….வண்டி யிழுக்கும் உனக்குப் பெருமையுண்டு!
ஈசனும் விரும்பியுனை வாகன மாக்கியதால்
……….பூசைக்குமுன் உனக்குத்தான் முதல் மரியாதை!
பாசமுடனுனை அரவணைத்துப் பழகி விட்டால்
……….பகுத்தறி வென்பதுனக்குத் தானாக வந்துவிடும்!
நேசிக்கும் உழவனுக்கே உயர் நண்பனானதோடு
……….நெஞ்சுரத்துக்கு நீயேயோர் சிறந்த உதாரணம்!

”உழவனின் உயர்நண்பனாய்த் திகழும் காளை, போட்டியென்று வந்துவிட்டால் சிங்கமாய் சீறிப் பாய்ந்து மானுடக் காளைகளை மிரளவைக்கும்; அரளவைக்கும். திமிர்கொண்ட காளையரைத் திமில்கொண்ட காளை தன் கொம்பிலே குத்தித் தூக்கும்; கடுமையாய்ப் பாய்ந்து தாக்கும்” என்று சல்லிக்கட்டுப் போரில் காளை நிகழ்த்தும் வீரசாகசங்களை நம் கண்முன் அழகாய் வி(வ)ரிக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 129-இன் முடிவுகள்

  1. காளையும் காளையரும் ஒருவரையொருவர் எதிர்த்துநிற்கும் வேளையில் படம் எடுத்த திரு. யெஸ்ஸெம்கேவுக்கும், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் நன்றி.

    படம்பார்த்துக் கவிதை எழுதும் வகையில், தொடர்ந்து கவிதை எழுதுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லதொரு வாய்ப்பளித்து வரும் வல்லமை ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் எனது நன்றி.

    அடுத்ததாக ஒவ்வொரு கவிதைக்கும் உரிய சிறப்புகளை சீராக ஆய்ந்து, தொடர்ந்து தனது கருத்துக்களை, ஆழமாக எடுத்துச்சொல்லி, சிறப்பான கவிதைக்குப் பாராட்டு நல்கிவரும் திருமதி மேகலா ராமமூர்த்திக்கு,மீண்டும் நன்றி.

    வல்லமையில் வெற்றிகரமாக தொடர்ந்து 129 கவிதை அரங்கேறியிருக்கிறது, இது ஒன்றே, இந்தப் போட்டியின் வெற்றி நடைக்குச் சான்றாகும்.

    நேரத்தைக் கணக்கிடாமல், பாராட்டைக் கருதாமல், தொடர்ந்து ஒவ்வொரு முறையும், கவிதைப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்றுவரும் அனைத்து கவிஞர்களுக்கும் எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு முறையும் இடம்பெறுகின்ற அனைத்துக் கவிஞர்களின் சிந்தனையை ஒப்பிடும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

    அன்புடன் பெருவை பார்த்தசாரதி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *