பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

22386294_1449648895089305_585560320_n
ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி (130)

  1. வண்ண வண்ண வளையல்களை
    வகைவகையாய் அடுக்கி வைத்து
    பெண்ணவளின் கைப்பிடித்து யாவாரி
    அண்ண அண்ண நோகுதென்று
    அவள் இழுத்தும் போகுதென்று
    இன்னுமின்னும் போடுகிறான் யாவாரி

    அறியாப் பெண் அவள் கேட்க அதையே சாக்காய் வைத்து
    அடுக்கடுக்காய் போடுகையில் யாவாரி –அட
    புரியாமல் போடுறியே போதுமினி யென்று தந்தை
    பொக்கட்டைப் பார்த்துரைப்பான் தடுமாறி-

    ‘காப்புக் காப்புக்காப்பாய் எடுத்து அவள்
    கையினிலே மாட்டுகிறாய்
    சேப்புக் காலியாகுதடா தம்பி – ஊர்போய்
    சேர்ந்திடவும் காசுவேணும் தம்பி
    ஆப்பிழுத்த குரங்கானேன்
    அவளையிங்கு கூட்டிவந்து
    கூப்புகிறேன் கையுனக்குத் தம்பி – சேரும்
    கோடிபுண்ணியம் நிறுத்து தம்பி.‘

  2. எளிமை அழகு…

    அடுக்கு மாடிக் கட்டிடத்தில்
    அழகு விளக்குகள் ஒளியினிலே
    எடுத்துக் கொடுக்கும் காப்புகளின்
    எண்ணிலா வகையிலே இன்பமில்லை,
    தடுத்து வைத்தே கீத்துகட்டிய
    திருவிழா வளையல் கடையினிலே
    எடுத்துப் போட்டே அழகுபார்க்கும்
    எளிய வளையலுக் கீடிலையே…!

    -செண்பக ஜெகதீசன்…

  3. நன்மனத்துடன் வளையல்களை அணிவிக்க கையை நீட்டச்சொன்னார்

    கைகளின் அளவிற்குக்கேற்ப வளையலை பெண்ணிற்கு அணிவித்தார்

    என்றுமே வண்ண கண்ணாடி வளையல் அணிய விருப்பமுண்டு

    இதில் ஏழை, பணக்காரன் என்ற மாறுபாடு இல்லாமல் இருப்பதுண்டு!

    வண்ண வளையல்களை கன்னிப்பெண்களுக்கு அதிக விருப்பமுண்டு

    அணிந்தவுடன் அவள் முகத்தில் புன்னகை மலர்வதுண்டு

    அந்த வலையோசையுடன் பிறர்க்கு காண்பிப்பதில் பெருமையுண்டு

    வலையோசையும், மெட்டிஒசையுமே ஆடவன் மனதை அசைப்பதுண்டு!

    ஆபரணங்களிலே வளையலே பெண்களை அதிகம் மகிழ்விக்கும்

    வலையோசையும், மெட்டி ஓசையுமே, ஈர்க்கும் தன்மை அதிகம்

    பெண் வளையல்களை அணிவதன் காரணம்தான் ஏனோ ?

    கணவன் தன்னை வளைய,வளைய வருவதற்குத்தானோ ?

    தாய்மையின் சிறப்பை, வளைகாப்பின் மூலம் சிறப்படையச்செய்யுதே

    வண்ண வளையல்கள் அணிந்த கருவுற்ற தாயும் மகிழிச்சி அடைந்ததே

    தானும் அணிந்து, பிறர்க்கும் அதனை வெகுமதியாய் கொடுக்கப்படுதே

    வளையலின் ஓசை அவள் குழந்தைக்கும், கணவனுக்கும் சொந்தமானதே !

    ரா.பார்த்தசாரதி

  4. வளையலோ வளையல்..!
    =======================

    நலமுடன் வாழமஞ்சள் குங்கும் வரிசையில்..
    நற்பொருளாய் நடுவே வளையலும் உண்டாம்.!

    மணிக்கட்டின் மேலே அழகு சேர்க்கும்..பெண்
    மணிகள் மட்டுமே அணியும் அணிகலனாம்.!

    வட்டமாய் அமைந்ததால் அது வளையலாகும்
    எட்டவிரட்டும் சக்தியால் எதிர்வினை யகலும்.!

    காதல் வலையில் மயங்கும் காளையர்கள்தன்
    காதலிக்குப் பரிசாக இதைக் கொடுப்பதுண்டு.!

    கலைநயம் கொண்ட தங்கம்வெள்ளி முத்தென
    வளையலும் வரலாறு பல சொல்லுமணிகலன்.!

    வளைந்து வருகின்ற வயிற்றின் ரகசியத்தை
    வளையல்கள் சேர்ந்து வருமுன் அறிவிக்கும்.!

    வகை வகையாய்ச் செய்தபல வண்ணங்களில்
    வளைகாப்பு எனும்பெயரில் ஓரிடத்தில் கூடும்.!

    வளையலின் உரசலில் எழும் மெல்லிசையை
    வயிற்றுளே இருக்கும் குழந்தை கேட்டுமகிழும்.!

    வாழ்ந்தால் ஜோடியாகத்தான் வாழ முடியுமென
    வாழ்வியல் பாடம் சொல்லும் அற்புதணிகலன்.!

    பத்திரமாக அணியும் வளையலுக்குக் புகழான
    உத்திரப்பிரதேச மாநிலத்தை உலகம் அறியும்.!

    அன்னமிடும் கையில் வளையலிருக்க வேணும்
    சொன்னது சாஸ்த்திரம்தான் யார் கேட்கிறார்கள்.?

    மெட்டியும் கொலுசும் காணோம்..வளையலும்
    எட்டியே தூரமாகக் கைநழுவிப் போய்விடுமோ.!

  5. வண்ண வண்ண வளையல்கள் : வளையல் வியாபாரி வந்து விட்டார் வாருங்கள்! வண்ண வண்ண வளையல்கள் இங்கே பாருங்கள்!
    சின்னக் கை பிடித்து வளையல் மாட்டுகின்ற அழகைப்
    பாருங்கள்!
    நிலவைப் பழிக்கின்ற வெள்ளை வளையல்கள்!
    கடலின் நிறம் கொண்ட ஊதா வளையல்கள்!
    கார் மேக நிறம் கொண்ட கறுப்பு வளையல்கள்!
    மாலைச் சூரியன் போல் மஞ்சள் வளையல்கள்!
    வானவில் நிறமுள்ள வண்ண வண்ண வளையல்கள்!
    பிள்ளை பிறந்தவுடன் கறுப்பு வளையல்கள்!
    பிள்ளளை கருவில் வளர்கையில் சீமந்த வளையல்கள்!
    ஆடிப் பூரத்தில் அம்மனுக்கும் வளையல்கள்!
    ஆதி முதல் அந்தம் வரை கூட வரும் வளையல்கள்!
    ஒரு முறை வளையலை அணிந்து பாருங்கள்!
    வளையல்கள் பேசுகின்ற அழகு மொழி கேளுங்கள்!
    வளை நிறை கை தரும் வளத்தோடு வாழுங்கள்!

  6. கிராமத்து மின்னல் இவள்
    கிராமத்து திருவிழாவாம்
    கூடி வழும் ஒருவிழாவாம்
    பெரியவர் மகிழ்வுடனே
    சிறியவர் மகிழ்வு தான் சிந்தை மயக்குதடி
    பல்லாங்குழியாடி பாண்டி விளையாடி
    அல்லியிதழ் பறித்தாடி
    ஆழவிழுதுகளில் குதித்தாடி
    கூட்டாஞ்சோறு கதைபேசி
    குதூகலிக்கும் பிள்ளை மனம்
    பெண்ணவளின் கிள்ளைமொழி
    பேதமையைச் சுட்டுதடி

    கோயில் திருவிழாவில்
    கோதையவள் ஒய்யாரம்
    கோயில் சிலை ஊர்வலமாய்
    வீதியெல்லாம் சுற்றிவர
    கடை கடையாய் வலம் வரும்
    கன்னியவள் விழிகளிலே ஆனந்தம் பரவுமடி
    வண்ண வண்ண வளையல்களை
    வளைகரத்தில் அணிந்து கொண்டு
    விருந்தினர் கைப்பிடித்து
    விருந்திடுவாள் விந்தை மகள்
    பறிமாறும் அழகினிலே
    பந்தபாசம் மனம் நாடுமடி
    பூலோகம் சுற்றினாலும்
    பேரின்பம் கிட்டாது
    கண்டுகொண்டேன் கிராமத்தில்
    இயற்கையெனும் தாய்மடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *