விருந்து – அன்றும் இன்றும்

0

-பேராசிரியர் முனைவர் க.துரையரசன்

“விருந்தோம்பலில்
தன்னினத்தைக்
கூவியழைக்கும்
காகம் போலிரு

எள்ளென்றாலும்
எட்டாகப் பகிர்ந்து உண்
சந்ததி தழைக்கும்” என்பது இக்காலக் கவிஞரின் உள்ள வெளிப்பாடு. ‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’ என்பது முன்னோர் மொழி.

தொல்காப்பியம்:

‘விருந்தேதானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே’ என்பது தொல்காப்பியம் (செய்யுளியல் 231). புதிய யாப்பில் பாப் புனைதல் விருந்து என்பது இதன் பொருளாகும். எனவே, விருந்து என்பது புதுமை என்ற பொருளில் தொல்காப்பியத்தில் பதிவாகியுள்ளது என்பது அறிஞர்களின் கருத்தாகும். அவ்வடிப்படையில் நம் வீட்டுக்கு வரும் முன்பின் தெரியாத ஒருவர் – இதுவரை வராத ஒருவர் விருந்தினர் எனப் பொருள்கொள்ள வேண்டும். நம் வீட்டுக்கு ஏற்கனவே வந்தவர்கள் அல்லது உறவினர்கள் விருந்தினராகக் கருதப்பட மாட்டார்கள்.

இதனடிப்படையில் தொல்காப்பியர் காலத்தில் விருந்தினர் என்பது நம் வீட்டுக்கு முதன்முதலில் வருவோர்; இன்று உறவினர்கள், நண்பர்கள் விருந்தினராகக் கருதப்படுகிறார்கள்.

திருக்குறள்:

இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.  (81)

என்பது திருக்குறள். இல்வாழ்க்கை என்பது தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்று விருந்துண்பித்து வாழ்வதே ஆகும் என்று வள்ளுவர் ஆணித்தரமாக உரைக்கிறார்.

விருந்தினர் வந்திருக்கும் பொழுது கிடைத்தற்கரிய அரிய பொருளாயினும் – பண்டமாயினும் – இந்திர உலகத்து அமிழ்தமாயினும் – சாவா மருந்தாயினும் அதனைத் தனித்து உண்ணார் தமிழர். இதனை,

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   (82) என்று திருக்குறளும்,

‘உண்டாலம்ம இவ்வுலகம்
இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்
இனிதெனத் தமியர் உண்டலும் இலரே’ (புறம். 182) என்று சங்கப் பாடலும் பகர்கின்றன.

மேலும் வருகின்ற விருந்தினரை நன்கு உபசரித்து வேண்டுவன அருகிருந்து செய்து, அவர் செல்ல விரும்பும்பொழுது அவரை மகிழ்வுடன் அனுப்பி வைக்கும் இல்வாழ்வான் ஒருவன் ஆர்வத்துடன் அடுத்த  விருந்தினரை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும் என்பதனை,

செல்விருந்தி ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.     (86)

என்ற திருக்குறள் அழகுற எடுத்துரைக்கிறது. ஒருவேளை விருந்தினரை அகமும் முகமும் மலர வரவேற்று உபசரிக்கவில்லையாயின் விருந்தினர் மிகவும் மனம் வருந்துவர் என்பதை,

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.      (90)

என்ற குறள் எச்சரிக்கை செய்கிறது. மேற்கண்ட எடுத்துக்காட்டுகளால் வள்ளுவர் காலத்து விருந்து நிலை தெற்றெனப் புலப்படுகிறது.

சிலம்பும் ராமாயணமும்:

சிலப்பதிகரத் தலைவி கண்ணகி,

”அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை…”  (கொலைக்களம்: 71-73)

என்று வருத்தமுற்று நிற்பதைக் காணமுடிகிறது. அதுபோலச் சீதையும்கூட அசோகவனத்தில் இருந்தபொழுது வீட்டுக்கு விருந்தினர் வந்தால் தனியோர் ஆடவனாக இருந்து இராமன் என்ன செய்வானோ என்று வருந்தினாள்.

இங்ஙனம் இருபெரும் காப்பியத்தலைவிகள் கணவனைப் பிரிந்து வருத்தமுற்றதைக் காட்டிலும் விருந்தோம்பல் மேற்கொள்ள முடியாமல் போயிற்றே என்று வருந்தியமையைக் காணமுடிகிறது. கணவனும் மனைவியும் கூடிநின்றுதான் விருந்து படைக்க இயலும் என்பது தமிழர் நியதி. இந்நியதியைப் பெரியபுராணம் தெற்றென காட்டுகிறது.

பெரியபுராணம்:

சிறுத்தொண்டர் புராணம், இளையான்குடி மாறநாயனார் புராணம், அப்பூதியடிகள் புராணம் என இன்னும் பல அடியவர்களின் புராணங்களும் கூட கணவனும் மனைவியுமாய் சேர்ந்து திருவமுது படைத்த பாங்கைப் பகர்கின்றன. குறிப்பாகச் சிறுத்தொண்டர் இல்லம் சென்ற பைரவ வேடந்தாங்கிய சிவபெருமான் இல்லின்கண் சிறுத்தொண்டர் இல்லை என்பதை அறிந்து வீட்டைவிட்டுப் புறப்பட முயலும் வேளையில், சிறுத்தொண்டரின் மனைவி அடியாரை இல்லிலிருக்குமாறு வேண்ட ஆடவர் இல்லாத இல்லில் தானிருத்தல் முறையாகாது என்றுகூறிச் சென்று விடுகிறார். அதன்பின் வீடு வந்தடைந்த சிறுத்தொண்டர் நடந்ததைக் கேட்டறிந்து அடியவரை இல்லிற்கு அழைத்து வந்து விருந்து படைத்தார் என்பது புராணம்.

விருந்தோம்பும் முறைகள்:

வீட்டிற்கு வந்த விருந்தினரைத் தக்க முறையில் ஓம்பும் ஒன்பது முறைகளை ஒரு தனிப்பாடல் வற்புறுத்திக் கூறியுள்ளது. அப்பாடல்:

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்த, நன்மொழி இனிது உரைத்தல்,
திருந்துற நோக்கல், வருக என உரைத்தல்,
எழுதல், முன் மகிழ்வன செப்பல்,
பொருந்துமற்று அவன்தன் அருகுற இருத்தல்,
போம் எனில் பின் செல்வதாதல்,
பரிந்து நன்முகன் வழங்கல், இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

(1) வீட்டிற்கு வரும் விருந்தினரை எதிர்கொண்டு அழைத்தல், (2) இனிய சொற்கள் கூறுதல், (3) அன்புடன் நோக்கல், (4) வருக என்று வரவேற்றல், (5) எழுந்து நிற்றல், (6) மகிழுமாறு சில செய்திகள் கூறுதல், (7) பொருந்தும் வகையில் அவர் அருகில் அமர்தல், (8) அவரைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி வைத்தல், (9) பல்வகை உணவு, பழம், வெற்றிலை, பாக்கு முதலியன அளித்தல் ஆகிய ஒன்பது முறைகளை மேற்காட்டிய பாடல் வற்புறுத்துகிறது.

இன்றைய நிலை:

இதுகாறும் கூறிய செய்திகளின் வழி விருந்தோம்பல் என்பது பழந்தமிழரின் பண்பாட்டு முறை என்பதும் அது தொன்றுதொட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்ததையும் அண்மைக்காலம் வரைகூடக் கண்ணாரக் காணமுடிந்தது. ஆனால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையிலிருந்து தனிக்குடித்தன வாழ்க்கை முறைக்கு இத்தலைமுறையினர் என்று மாறத்தொடங்கினார்களோ அன்றே விருந்தோம்பும் தமிழ்ப்பண்பும் அருகிப் போய்விட்டதை வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது.

விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்:

ஒருவர் வீட்டிற்கு விருந்தினர் வந்தார். அவர் வரும்பொழுது பகல் 2.30 மணி. அப்பொழுது கணவன், மனைவி, விருந்தினர் ஆகிய மூவரும் பின்வருமாறு பேசிக்கொண்டனர்.

கணவன்: வாங்க, மதியம் சாப்பாட்டு வேளை முடிஞ்சு வந்திருக்கீங்க. அநேகமாக கடையில் சாப்பிட்டு வந்திருப்பீங்க. இருந்தாலும் எங்க வீட்டில கொஞ்சம் சாப்பிடுங்க.

மனைவி: ஏங்க, உங்களுக்கு எப்ப என்ன பேசுறதுன்னு தெரியாதுங்க. மணி என்ன ஆவுது. அவுங்களே சக்கரை வியாதிக்காரங்க. இவ்வளவு நேரம் சாப்பிடாமலா வந்திருப்பாங்க. இருந்தாலும் நம்ம வீட்டில கொஞ்சமா சாப்பிடுங்க.

விருந்தினர்: நான் சாப்பிட்டுவிட்டு வந்தாலும், சாப்பிடாம நீங்க விடமாட்டிங்கன்னு எனக்குத் தெரியாதா? அதனால நான் சாப்பிடாமத்தான் வந்திருக்கேன்.

இன்னொரு சம்பவம். ஒரு வீட்டிற்கு விருந்தினர் வருகிறார். அவரைக் கணவனும் மனைவியும் ஒப்புக்காக (முக தாட்சண்யத்திற்காக) வரவேற்கின்றனர். சற்று நேரத்தில் விருந்தினர் முன்பாக கணவனும் மனைவியும் கடும் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இதனைப் பார்த்த விருந்தினர் வீட்டைவிட்டுச் சென்று விட்டார். அப்பொழுது கணவன் மனைவியிடம், ஏண்டி, நான் எப்படிப் பண்ணுனேன் பார்த்தியா? என்று கேட்க, மனைவியும் அதற்குப் பதிலாக நான் எப்படி உங்களுக்கேற்றாற்போல நடிச்சேன் பார்த்தீர்களா என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டை விட்டுச்சென்ற விருந்தினர் உள்ளே புகுந்து நானும் போனதுபோல போக்குக் காட்டிவிட்டு வந்து விட்டேன் பார்த்தீர்களா?  உங்களுக்கேற்றாற்போல் நானும் நடித்தேன் பார்த்தீர்களா? என்றாராம்.

இந்நிகழ்வுகளை விளையாட்டாகக் கூறுவர். இது விளையாட்டல்ல, விபரீதம். பல வீடுகளுக்குச் செல்லும் விருந்தினர்களின் பரிதாப நிலை இப்படித்தான் இருக்கிறது.

ஔவையார்:

விருந்தோம்பல் பற்றிய ஔவையாரின் பாடல் ஒன்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதாக உள்ளது. விருந்தினர் வருகை பற்றிக் கணவன் மனைவியிடம் தெரிவிக்கக் கருதுகிறான். அதனால் அவன் மனைவியிடம் அன்பாகப் பேசுகிறான்; முகத்தைத் தடவிக் கொடுக்கிறான்; அவள் தலையில் பேன் பார்த்துக்கொண்டே விருந்தினர் வந்திருக்கிறார் என்ற செய்தியை மனைவியிடம் தெரிவிக்கிறான். மனைவி கேட்டதுதான் தாமதம். அவள் ஆடிய ஆட்டம், பாடிய பாட்டு, கணவனுக்குக் கொடுத்த வசைகள், இவை போதாதென்று கணவனைப் பிய்ந்துபோன பழைய முறத்தால் ஓடி ஓடி அடித்து விரட்டினாள். புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரமங்கை வாழ்ந்த தமிழ்நாட்டில் விருந்தினர் வந்திருக்கிறார் என்று சொன்னதற்காகக் கணவனை முறத்தால் அடித்து விரட்டினாள் மனைவி. இதனை வெளிப்படுத்தும் பாடல்:

இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்தது என்று விளம்ப – வருந்தி
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடித்தான்.         (தனிப்பாடல்)

விருந்து உண்ணலாமா:

இத்தகைய இல்லாள் இட்ட உணவை உண்ணலாமா? இத்தகைய இடர்ப்பாடு ஒரு விருந்தினனுக்கு ஏற்பட்டுள்ளது. அவனது பரிதாப நிலையைப் பாருங்கள்:

காணக் கண் கூசுதே
கை எடுக்க நாணுதே – மாண் ஒக்க
வாய் திறக்க மாட்டாதே – வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்றது – ஐயையோ
அன்பிலாள் இட்ட அமுது.              (தனிப்பாடல்)

அன்பில்லாத இல்லாள் (மனைவியாக இருந்தாலுங்கூட) படைத்த உணவைக் காணக் கண்ணோ கூசுகின்றது; உணவை எடுக்கக் கையோ வெட்கப்படுகிறது; வாயோ திறக்க மறுக்கிறது; எலும்பெல்லாம் பற்றி எரிகிறது என்று பரிதவிக்கிறான் ஒரு விருந்தினன் என்பதை ஔவையார் மேற்கண்ட பாடலில் படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

எனவே தமிழரின் தலையாயப் பண்பாடான விருந்தோம்பல் என்பது அக்காலத்தில் சிறப்புடன் பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய அவசர காலத்தில் – தனிக்குடித்தன வாழ்க்கையில் – பணம் சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்ட வாழ்க்கையில் விருந்து மருந்தாகி விட்டது; அதுவும் கசப்பு மருந்தாகி விட்டது. இளைய தலைமுறையினருக்கு இத்தலையாயப் பண்பாடு தெரியாமலே போய்விடும் அவலநிலையை நோக்கித் தமிழகம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *