அமெரிக்காவில் நீதித்துறையிலும் இனதுவேஷம்!

0

-நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்கா என்ற நாடு உருவானதிலிருந்தே இனத்துவேஷம் அங்கு இருக்கிறது.  அமெரிக்கர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கொண்டுவந்த ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்திருந்தனர். பின்னால் உள்நாட்டுப் போருக்குப் பிறகு அவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டுக் குடிமையுரிமைகளும் பெற்றனர்.  ஆயினும் இன்றுவரை அமெரிக்காவில் கருப்பர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்போல்தான் நடத்தப்படுகின்றனர்.  கருப்பர்கள் பலர் காவல்துறை அதிகாரிகளால் எவ்வித முகாந்திரமும் இன்றிச் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள்.  ஒரு வெள்ளை இனப் பெண்மணியைக் காரில் சென்றுகொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரி ஒருவர் நிறுத்தியிருக்கிறார்.  அந்தப் பெண்மணி பயந்துகொண்டே காரிலிருந்து இறங்கியிருக்கிறார்.  அதைப் பார்த்து அந்த அதிகாரி, ‘நீ கருப்பினத்தைச் சேர்ந்தவள் இல்லையே.  பின் ஏன் இப்படிப் பயந்து நடுங்குகிறாய்?’ என்று கேட்டாராம்! கருப்பர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்கு இது ஒன்றே போதும்.

நீதித்துறையும் கருப்பர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதற்கு இன்னொரு சோகக் கதை.  ஜான் தாம்ஸன் 1984இல் செய்யாத ஒரு கொலைக்குற்றத்திற்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பதினான்கு ஆண்டுகளைச் சிறையில் கழித்தார்.  அது மட்டுமல்ல, அந்தப் பதினான்கு ஆண்டுகளில் ஆறு முறை இவர் தூக்கிலிடப்படுவதற்காக நாள் குறிக்கப்பட்டது. ஏழாவது முறை நாள் குறிப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னால் இவருடைய வழக்கறிஞரால் நியமிக்கப்பட்ட ஒரு துப்பறியும் நிபுணர் அதுவரை அரசு வழக்கறிஞர்களால் மறைக்கப்பட்ட, புலனாய்வுக் கூடம் செய்த ஆய்வின் முடிவைக் கண்டுபிடித்தார். குற்றம் நடந்த இடத்தில் சிந்தியிருந்த ரத்தம் தாம்ஸனுடையது அல்ல என்பதே இந்த முடிவு.  இது அரசு வழக்கறிஞர்களுக்குத் தெரிந்திருந்தாலும் நீதிமன்றத்திற்குத் தெரியாமல் மறைத்துவிட்டார்கள்.  வழக்கில் ஒரு திருப்பத்தை இது ஏற்படுத்தி மறுவிசாரணையில் தாம்ஸன் விடுவிக்கப்பட்டார்.  இந்த முறை முப்பத்தைந்தே நிமிடங்களில் தாம்ஸன் குற்றமற்றவர் என்று ஜூரிகள் முடிவுசெய்தனர். 

குற்றம் புரியாத தன்னை இத்தனை நாட்கள் சிறையில் வைத்திருந்ததால் மிகவும் கோபமுற்ற தாம்ஸன் லூஸியானா மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் மீது அந்த அலுவலகத்திற்குக் கீழ் இயங்கும்  அரசு வழக்கறிஞர்களுக்கு  அந்த அலுவலகம் சரியான பயிற்சி கொடுக்கவில்லை என்று வழக்குப் போட்டார்.  குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்குரிய சான்றுகளையும்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்னும் அரசியல் சாசனச் சட்டத்தின் பகுதியை அவர்களுக்குக் கற்பிக்கவில்லை என்றும் தன் வழக்கில் கூறியிருந்தார்.  இந்த வழக்கில் லூஸியானா மாநில உச்சநீதிமன்றம் தாம்ஸனுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து அவருக்கு ஒன்றரைக் கோடி டாலர் பணம் பெற்றுத் தந்தது.

ஆனால் அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றம்வரை கொண்டுசென்றனர்.  அங்கு ஐந்து நீதிபதிகள் இந்த வழக்கில் தாம்ஸன் அரசு வழக்கறிஞர்களுக்குச் சரியான பயிற்சி கொடுக்கப்படவில்லை என்பதைச் சரியாக நிரூபிக்கவில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.  தாம்ஸனுக்கு நஷ்ட ஈடு கிடைக்காமலே போயிற்று.  இந்த வழக்கில் தாம்ஸனுடைய வாதத்தை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தவறாகத் தண்டிக்கப்பட்டு சிறையில் பதினான்கு வருடங்கள் இருந்ததற்காகவாவது நஷ்ட ஈடு வழங்கியிருக்கலாம்.  தாம்ஸனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய நான்கு நீதிபதிகளில் ஒருவர் (அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் இருக்கிறார்கள்) ‘இந்த வழக்கு நடைபெற்ற சமயம் இதில் பணிபுரிந்த ஐந்து அரசு வழக்கறிஞர்களும் நீதியை நிலைநாட்டத் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார்கள்’ என்று  தன் தீர்ப்பில் கூறியிருந்தார்.

லூஸியானா மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞருக்கு ஜனாதிபதி ட்ரம்ப் சென்ற மாதம் மத்திய நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி பதவி கொடுத்திருக்கிறார்.  இவர் அமெரிக்கப் பாராளுமன்ற செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட்டால்  (ஜனாதிபதியால் மத்திய முறையீடு நீதிமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகள் செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்)  அந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டு நெஞ்சில் வேதனையைச் சுமக்க தாம்ஸன் இன்று உயிரோடு இல்லை.  2017 அக்டோபர் மாதம்  ஐந்தாம் தேதி அவர் தன்னுடைய 55வது வயதில் மாரடைப்பால் இறந்துபோனார்.         

2011இல் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தாம்ஸன் எழுதிய கட்டுரையில் தனக்கு நஷ்ட ஈடு கிடைக்காதது பற்றித் தான் கவலைப்படவில்லை என்றும் தன்னையும் மற்றும் சிலரையும் தவறாகச் சிறைக்கு அனுப்பிவைத்த அரசு வழக்கறிஞரைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய எண்ணம் என்றும் எழுதியிருந்தார்.  சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தாம்ஸன் நீதித்துறையின் மீதிருந்த தன் கோபத்தையெல்லாம் இவரை மாதிரிப் பொய்யாகக்  குற்றம் சுமத்தப்பட்டுப் பின்னால் விடுவிக்கப்பட்டவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதன் மூலம் தீர்த்துக்கொண்டார்.  கொடையாகக் கிடைத்த கொஞ்சம் பணத்தைக்கொண்டு ஒரு எளிமையான வீட்டை வாங்கி வஞ்சிக்கப்பட்ட பலரை அதில் தங்கவைத்து அவர்களுக்கு நியாயம் கிடைக்கப் பாடுபட்டார். இதில் கொஞ்சம் அமைதி கிடைத்தது.

இருப்பினும் பல முறை தூக்குமேடைக்குப் போக நேர்ந்த அனுபவத்தில் உடலும்  உள்ளமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே இறந்துபோனார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *