பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

22385220_1449644231756438_127407991_n (1)

முத்துகுமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி (131)

  1. தம்பி கவனமடா சறுக்கி விழப் போகின்றாய்
    ஆனை அடிசறுக்கி அதலபாதாளத்தில்
    போனது போல் நீயும் பொறி கலங்க வீழ்ந்திட்டால்

    முட்டுக்கால் பேந்த மொடமாய்ப் பொழப்பின்றி
    கட்டிலில் வீழ்ந்து கவலைமிக வுற்று
    துட்டுக்கலையும் துயர்சேர எப்போதும்
    தட்டுப்பாட்டோடு தவிக்கு நிலை வரலாம்

    மெல்ல இறங்கு வேண்டாமிவ் வீண்வேலை
    கல்லெல்லாம் ஈரம் கவனம்.

  2. எழுச்சி கொள் தம்பி: வனம் பூமித்தாய் தந்த சீதனம் தம்பி !
    அருவி ஆண்டவனின் அருட் கொடை தம்பி!
    மரங்கள் பூமித்தாய் பெற்றெடுத்த அழகுப் பெண்கள் தம்பி!
    இத்தனையும் ரசிப்பதற்கு இப்பிறவி போதாது தம்பி!
    இளங்கன்று பயமறியாது, நான் அறிவேன் தம்பி!
    காட்டாறு கினற்றுக்கள் அடங்காது,
    நான் அறிவேன் தம்பி!
    ஏகாந்தம் இனிமை தரும்,
    நான் அறிவேன் தம்பி!
    மரத்தின் மேல் ஏன் படுத்தாய் தம்பி!
    கரணம் தப்பினால் மரணம், எச்சரிக்கை தம்பி!
    அச்சமின்மை ஆண்மைக்கு அழகு,
    நான் அறிவேன் தம்பி!
    விவேகம் இல்லா வீரம் விபரீதம் தம்பி!
    நான் உரைக்கும் வார்த்தைகளை
    செவிமடுப்பாய் தம்பி!
    பாரதியின் கனவுகளை மறந்தாயோ தம்பி!
    அய்யா கலாம் சொன்னதை!
    நீ மறந்தாயோ தம்பி!
    உன் லட்சியத்தை கனவாக்கு தம்பி!
    சாதனைகள் படைத்திட
    உடனே எழுந்திடுவாய் தம்பி!
    நாளைய உலகம் இருக்குது, இளைஞர்களை நம்பி!
    பாரதம், பார் புகழ வளரட்டும் தம்பி!

  3. மலை மேலே…

    மலையினில் பெய்த மழையதுதான்
    மகிழ்ந்தே ஆறாய் ஓடியபின்,
    மலையி லிருந்தே குதித்தாலும்
    மகிழ்ந்தே நாமும் அருவியென்போம்,
    நிலையில் கொஞ்சம் மாறிடினும்
    நீரில் மாற்றம் ஏதுமில்லை,
    நிலையிலா மனிதனே நெஞ்சில்கொள்
    நீவிழ எதுவும் மிஞ்சிடாதே…!

    -செண்பக ஜெகதீசன்…

  4. எந்திர வாழ்க்கை..!
    ===============

    காலை எழும்போதே கணிணியைக் கையில்
    ……….கட்டிக் கொண்டே கண்விழிக்கும் அவலநிலை.!
    மாலைநேரம் வேலை முடிந்து திரும்பினாலும்
    ……….மலைபோலக் குவியும்நம் அலுவலக வேலை.!
    வேளைக்கு அவசரமாக உண்டபின் அலுவலக
    ……….வேலையைக் கடுகிமுடிக்க எழும் மனக்கவலை.!
    களைப்பாற நேரமில்லை..! தகுந்த இடமில்லை..
    ……….கண்டதெலாம் நாகரீக நகரமாகிப் போனதாலே.!

    சற்றுநேரம் எந்திரவாழ்வில் கிடைத்து விட்டால்
    ……….சங்கடத்தில் மனமது ஓய்வுகொள்ள நினைக்கும்.!
    பற்றுடனே மனமெதிலும் ஈடுபாடு கொள்ளாது
    ……….படபடப்புடனே எப்போதும் நிலைத் திருக்கும்.!
    கற்றறிந்த மானிடர்க்கு மனத்தில் தோன்றுமிடர்
    ……….கடக்கும் வழியறிய வாழ்வில்பல வழியுண்டாம்.!
    எற்றைக்கும் இந்நிலை வாழ்வில் நீடிக்காதென
    ……….எண்ணும் போதிலெ மனமும் அமைதியாகும்.!

    உதிக்கின்ற கதிரவனுக்கு முன்னெழ வேண்டும்
    ……….உலகம் சுழல்வதுபோல் நாமும் சுற்றவேண்டும்.!
    அதிகாலை எழுந்து நடைபயில முடியவில்லை
    ……….ஆவலுடன் அலுவல் நோக்கி ஓடவேண்டும்.!
    மதியமைதி பெறுதற்கு இயற்கையெழில் சூழ்நிலை
    ……….மனிதருக்கே வேண்டுமப்பா இக்கலி யுகத்தில்.!
    இயற்கையின் இன்பத்திலென் மனம் மூழ்குதப்பா
    ……….இறைவன் படைப்பில் எத்தனை அற்புதமப்பா.!

  5. எனக்குள்ளும் இருக்கின்றான்

    மனம் பறக்கிறது
    மரக்கிளையில் சாய்ந்த
    மறுகணம்
    மனம் பறக்கிறது….
    கவலைகள்
    ரணங்கள்
    இயலாமைகள்
    தவிப்புகள்
    அனைத்தையும் மறந்து
    ஆனந்த லயத்தில்
    மனம் பறக்கிறது

    காட்டாற்று
    வெள்ளம் கண்ட
    வேளையில் தான்
    ஆரவாரமிக்க மனம்
    அமைதியை
    அரவணைத்தது

    பெரும் பாறைகளைவிட
    பாறையாய் இருந்த மனம்
    காட்டாறு வெள்ளத்தைப்போல
    கருணையை உள்ளத்தில் கொண்டு
    காலங்கள் பின்னோக்கி ஒடுகின்றது
    கண்ணீரை
    கண்கள் விரும்பி சூடுகின்றது

    இசைக்கின்ற ஆறு
    இனிய மரங்கள்
    ஈரக்காற்று
    ரசித்த பிறகுதான்
    தெரிகிறது…
    எனக்குள்ளும் இருக்கின்றான்
    இறைவன்

    வெள்ளத்தின் ஓட்டம்
    தீர்ந்தது
    உள்ளத்தின் வாட்டம்

    இயற்கையை
    தரிசிக்க வந்தவனை
    தன்னை
    தன்னிலையை தானே
    தரிசிக்க செய்தது இயற்கை

  6. காலையில் எழும்போதே கைபேசியும் கையுமாய் நிற்போம்

    அன்றைய வேலைகளை செய்ய முயற்சி செய்வோம்

    மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பினாலும் வேலை

    ஆணாக பிறந்தவனுக்கு வீட்டிலும்,அலுவலகத்திலும் வேலை

    எந்திரமாய், ஆறு நாட்களிலும் மனிதனுக்கு பல கடின வேலை

    ஓய்வும் தனிமை தேடவும், களைப்பாறவும் ஓர் இடம் தேவை

    இல்லற வாழ்க்கை நரகமாகி மனித வாழ்வும் நரகமானதே

    காலையில், நடைப்பயிற்சியும், உடற்பயிற்சிக்கும் நேரமில்லை

    மன அமைதி பெற இயற்கையை நாடுவது என்றும் சிறந்ததே

    என்றும் அமைதி கிடைக்குமா என எண்ணம் ஏங்குதே

    கதிரவன் உதிக்கும்போது எழுந்து பம்பரம்போல் சுழலவேண்டும்

    பல சங்கடங்களை சந்தித்தே வேலைகளை செய்திடவேண்டும்

    விடுமுறையில் சென்று மனஇறுக்கத்தை ஒழிக்க இடம் தேடுதே

    மனமும் உள்ளமும் நிம்மதிக்கு, தனிமைக்கும் ஏங்குதே

    மனிதனே, மரத்தில் ஏறி நின்று இயற்கையை ரசிக்கின்றாய்

    ஆம்! இயற்கை அன்னை தந்ததெல்லாம் உனக்குச் சொந்தமே!

    ரா.பார்த்தசாரதி

    .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *