க. பாலசுப்பிரமணியன்

பாசத்திலிருந்து விடுபடுவது எப்படி?

திருமூலர்-1-3

“நான்” “எனது” என்ற எண்ணத்தை விட்டுவிடத்தான் நாம் துடித்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால் முடிவில்லையே !  இந்தப் புவியில் ஈடுபாடு உள்ளவரை, உறவுகளைப் பாராட்டும் வரை, ஐம்பொறிகளை நாம் பயன்படுத்தும் வரை இந்தத் துன்பக்கேணியில் நாம் மீண்டும் மீண்டும் மூழ்கிக் கொண்டுதான் இருப்போம். இந்த அவலத்திலிருந்து நீங்குவதற்கும் அந்தப் பேரருளாளன் துணை தான் வேண்டும். அவன் துணையில்லாமல் இந்தத் துயரிலிருந்து விடுபட முடியாது. அதனால்தான் தமிழ்மறை தந்த திருவள்ளுவரும் இவ்வாறு கூறுகின்றார்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு.”

இந்தப் பற்று என்பது நமது மனதின் மாயையால்தானே வந்தது? இந்த மாயையை எவ்வாறு அறுப்பது?

ஒரு முறை ஒரு முனிவர் காட்டில் பல காலம் தவம் செய்துவிட்டு அதன் பயனை சாதாரண மனிதருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று பல நகரங்களுக்குச் சென்று தம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு வந்தார். தன்னுடைய உரைகளில் எவ்வாறு நாம் மாயையால் கட்டுப்பட்டுள்ளோம், அதிலிருந்து எப்படி மீள்வது என்று நல்லுரை அளித்து வந்தார். ஒரு காலத்தில் ஒரு நாட்டின் அரசனுக்கு இந்த முனிவரின் கருத்துக்கள் எடுத்துச் சொல்லப்பட்டு, அவன் இவரிடம் அருள்நாடி வந்தான்.

“முனிவரே, எனக்கு மாயை என்றால் என்ன என்பதைக் கண்களில் காட்டவேண்டும். கண்ணால் பார்க்காத எதையும் நான் நம்பத் தயாராக இல்லை. நீங்கள் காட்ட மறுத்தால் நீங்கள் சொல்வது அனைத்தும் பொய் என்று கருதி உங்களை தண்டிக்க நேரிடும்” என்றான். அந்த முனிவரும்  புன்முறுவலுடன் “அதற்கென்ன? என்னுடன் வந்து சில நாட்கள் தங்கு. உனக்கு மாயையைக் காட்டுகின்றேன்” என்றார்.

அரசனும் தன் அரண்மனையை விட்டு விலகி முனிவரிடம் வந்து தங்க ஆரம்பித்தான், ஒரு வார காலம் போனபின் “முனிவரே, ஏழு நாட்கள் கழிந்து விட்டன. இன்னும் தாங்கள் காட்ட வில்லையே.” எனக் கேட்டான். முனிவரும் சிரித்தார். ” நேரம் வரும். காட்டுகின்றேன் ” எனக்கூறி நகர்ந்து சென்றார். மீண்டும் சில நாட்கள் கழிந்த பின் பொறுமையிழந்த அரசன் “முனிவரே. காலம் கடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் ஐந்து நாட்களுக்குள் தாங்கள் மாயையைக் கண்கூடாகக் காட்டவில்லையென்றால் தங்கள் உயிரை விட வேண்டி வரும் ” என எச்சரித்தான். ஐந்தாவது நாள் முனிவர் தன் கமண்டலுத்துடன் செல்வதைக் கண்டு அவரை நிறுத்தி “இன்னும் ஒரு அடி கூட தாங்கள் வைக்கக் கூடாது எனக்கு மாயையைக் காட்டாமல் ” எனச் சொல்ல  முனிவரும் தன கமண்டலத்தைக் கீழே விட்டுவிட்டு அருகிலிருந்த ஒரு மரத்தை நோக்கிச் சென்று அதை இருகக் கட்டிக்கொண்டு “என்னை விட்டுவிடு, விட்டுவிடு” என்று அலற, அரசனும் “என்ன முட்டாள்தனம். நீங்கள் அதை பிடித்துக் கொண்டு அது விடவில்லை என்று சொல்கின்றீர்களே” எனக்கூற முனிவரும் “இதுதான் மாயை. ஏதாவது ஒன்றை நாம் பிடித்துக்கொண்டு அது நம்மை விடவில்லையே என்று துன்பக்கடலில் மிதக்கிறோமே அதுதான் மாயை” என்று விளக்கினார்.

உண்மை அதுவே! பல நேரங்களில் ஐம்பொறிங்களால் தூண்டப்பட்ட சிற்றின்பங்களுக்கோ நாம் விலையாகி அவைகள் நம்மை விடவில்லையே” என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றோம்.

இதனால்தான் திருமூலர் மிக அழகாகக் கூறுகின்றார்

   “வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்

   குன்று விழுவதில் தாங்கலு மாமே.”

புலன்களால் உந்தப்பட்ட உறவினை வளர்த்துக்கொள்ளும் நாம் அந்த பாசத்தில், அந்த மயக்கத்தில் எத்தனை வினைகளுக்கு நம்மை இரையாக்கிக் கொல்லுகின்றோம். இந்தவினைப்பயன்கள் நம்மை விடுவதில்லையே.

பசு, பதி  பாசம் என்ற மூன்றுக்கும் உள்ள விளக்கத்தை மிக வளமையான சொர்க்களால் விளக்கும் திருமூலர் கூறுகின்றார்

பசு பல கோடி பிரமன் முதலாய்

பசுக்களைக் கட்டிப் பாசமூன் றுண்டு

பசுத்தன்மை நீக்கிப் பாசம் அறுத்தாற்

பசுக்கள் தலைவனைப் பற்றிவிடாவே

ஐம்பொறிகளின் துன்பத்தில் துயருற்ற மாணிக்கவாசகரோ அந்த இறைவனின் துணையின்றி இதிலிருந்து விடுபட முடியாது என்பதை உணர்ந்தே அவன் ஒளி காட்டும் பொன்மேனியை வணங்கி அருள் நாடுகின்றார்.

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப

யான் உன் மணி மலர்த் தாள்

வேறுபட்டேனை விடுதி கண்டாய்

வினையேன் மனத்தே

ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச

மங்கைக்கு அரசே

நீறுபட்டே ஒளி காட்டும் பொன்  மேனி

நெடுந்தகையே 

இந்த மாயையில் பிடிபட்டு தன்னை வஞ்சித்த மனத்தை பட்டினத்தார் தன்னுடைய கோபத்திற்கு ஆளாக்கிப் பாடுகிறார்

தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை

முத்திக்கு வித்தான முப்பாழை போற்றாமல்

பற்றிப் பிடித்தியமன் பாசத்தால் கட்டும்வண்ணம்

சுற்றி யிருக்கும்வினை சூழ்ந்தனையே நெஞ்சமே

எனவே மாயையை விட்டு தியானத்தில் அவனை மட்டும் உள்நிறுத்தி அவன் அருளொருளியை நம்முடன் இணைக்கும் போது நமக்கு ஏற்படுகின்றது ஆனந்த அனுபவம்தானே ! ஆனால் பாசத்தில் உழன்று கல்லாகிப் போன இந்த நெஞ்சம் சிறிதேனும் மாறுமோ ?

திருமூலரின் நம்பிக்கைக்குத் தான் என்ன வலிமை !

 “வான் பழித்து இம் மண் புகுந்து மனிதரை

  ஆட்கொண்ட வள்ளல் “

என்று இறைவனைப் புகழ்ந்து பாடுகின்றார்

மாணிக்கவாசகரிடம் இந்த இறைக்கருணையின் இன்னொரு வளமை தென்படுகின்றது.

கல்லைப் பிசைந்து கனி ஆக்கித் தன் கருணை

வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனை”

என்று பாராட்டிப் பரவசம் அடைகின்றார்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *