Research Articles

வல்லமை மின்னிதழ், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) அங்கீகாரத்தை அண்மையில் பெற்றது நீங்கள் அறிந்ததே. வல்லமை, ஆய்வுக் கட்டுரைகளுக்காகவே தனிப் பகுதியைக் கொண்டிருக்கிறது. தரமான ஆய்வுக் கட்டுரைகளையும் இதர ஆக்கங்கள் பலவற்றையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

ஆய்வாளர்கள் பலரும் தத்தம் கட்டுரைகளை நமக்கு விரும்பி அனுப்பி வருகின்றனர். மேலும் புதிய ஆய்வாளர்கள் பலர், ஆய்வுக் கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும்? என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? எந்தெந்தக் கருப்பொருள்களில் இருக்கலாம்? என்றும் பலவுமாய் வினவி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு, சில குறிப்புகளை இங்கே வழங்குகிறோம்.

ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்:

புதிய கோணத்தில், ஆய்வுச் சிக்கல் ஒன்றுக்குத் தீர்வு காணும் வகையில் கட்டுரை அமைதல் நலம்.

ஆய்வுக் கட்டுரையானது, ஆய்வாளரின் சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு, தழுவல், போலச் செய்தல் போன்றவை கூடாது.

ஆய்வுக் கட்டுரை, புதிய ஆக்கமாக இருக்க வேண்டும். வேறு எங்கும் வாசிக்கப்பட்டது, வேறு இதழ்களில் வெளிவந்தது எனில் அதனை முதலிலேயே குறிப்பிட வேண்டும். வல்லமை ஆசிரியர் குழுவினர் விரும்பினால், அவற்றை மறுபகிர்வு என்ற பிரிவில் வெளியிடப் பரிசீலிப்போம்.

ஆய்வுக் கட்டுரை, எந்தக் கருப்பொருளிலும், எந்தத் தலைப்பிலும் இருக்கலாம். இந்தத் தலைப்பினைத் தேர்ந்ததற்கான காரணத்தையும் முன்னுரையில் குறிப்பிட்டால், வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.

ஆய்வுகள் நன்னோக்கத்துடன், ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். அதன் மூலமாகச் சமுதாயம், நன்மை அடைய வேண்டும். அந்தக் கண்ணோட்டத்துடன் ஆய்வுகள் அமைந்தால், பெரிதும் மகிழ்வோம்.

ஏற்கனவே வெளியான தலைப்புகளைத் தவிர்க்கலாம். அதே கருப்பொருள், தலைப்பினைத் தேர்ந்தெடுத்தால், அதனைப் புதிய கோணத்தில், புதிய உண்மைகள் வெளிப்படுமாறு கட்டுரைகளைப் படைக்க வேண்டும்.

வழக்கமான ஆய்வியல் நெறிகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். உரிய சான்றுகள், தரவுகளுக்கான மூலங்கள், அடிக்குறிப்புகள், உசாத் துணைகள், ஆய்வுக்கு உதவிய நூல்கள், இணையச் சுட்டிகள் உள்ளிட்டவற்றைத் தவறாது குறிப்பிட வேண்டும்.

அடிப்படைச் சான்றுகள் இல்லாத, கற்பனைக் கதைகளைச் சான்றாகக் கொண்ட கட்டுரைகளை அனுப்ப வேண்டாம். பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டவை எனில், அச்செய்தி உண்மையா என ஆராய்ந்து தெளிந்து அனுப்ப வேண்டுகிறோம். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கட்டுரைகள், சந்திப் பிழை உள்ளிட்ட இலக்கணப் பிழைகள், தட்டுப் பிழைகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றனவா எனச் சரிபார்த்து அனுப்ப வேண்டும். அளிக்கும் தரவுகளிலும் மேற்கோள்களிலும் பிழையில்லாமல் இருக்க வேண்டும்.

கட்டுரைக்குத் தேவையான படங்கள், பட்டியல்கள் உள்ளிட்டவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
கட்டுரை, தமிழிலோ, ஆங்கிலத்திலோ இருக்கலாம்.

ஒருங்குறியில் இருக்க வேண்டும். இதர எழுத்துருக்களிலோ, பிடிஎஃப் வடிவிலோ அனுப்ப வேண்டாம்.

முறையாக வாக்கியங்கள், பத்திகள், சொற்கள் பிரிக்கப்பட்டு, நிறுத்தற்குறிகள் இடப்பட்டு இருக்க வேண்டும்.

ஆய்வாளரின் படத்துடன் அவரைப் பற்றிய சிறுகுறிப்பைக் கட்டுரையின் இறுதியில் அளிக்கலாம். ஆய்வாளரின் தொடர்பு விவரங்களைக் கட்டுரையில் அல்லாமல், மடலின் ஒரு பகுதியாகவே வல்லமைக்குத் தெரிவிக்கலாம்.

தகுதி வாய்ந்த, தரமான ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை உளமார வரவேற்கிறது. இதன் வழியே அறிவுலகம் செழித்து, அனைத்துலகும் பயன்பெற விழைகிறோம். ஆய்வாளர்களின் ஒத்துழைப்பினைத் தொடர்ந்து வேண்டுகிறோம். உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – vallamaieditor@gmail.com

===================================

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்!

  1. ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனுடையதாக உள்ளது

  2. ஆராய்ச்சி  செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வல்லமை மின்னிதழ் ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துகள்…
          முனைவர் வே. சுமதி

  3. மதிப்பிற் குரியீர்,
    வணக்கம். வல்லமை மின்னிதழ் இந்தியப்பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது மகொழ்வுக்குரியது. சிறந்த கட்டுரைகளுக்கும் படைப்புகளுக்கும் வாய்ப்பு வழங்கும் என்று நினைக்கிறோம். நன்றி. வாழ்த்துகள்.
    இவண்
    இர.மணிமேகலை
    உதவிப்பேராசிரியர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை.

  4. தமிழ் வளர்ச்சிக்குத் தங்களின் சிறப்பா ன பங்களிப்புக்கு கிடைத்த மரியாதை. மேலும் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  5. வல்லமை மின்இதழ் மிகவும் வன்மையோடு இருப்பது இதன் சிறப்பாகும். தொடர வாழ்த்துகள்.

  6. Nice to get introduced to this vallamai ejournal..Hope i will be able to publish my research here in tamil for the use of Tamils across the globe….

  7. நம் இதழில் தொடா்ந்து நல்ல நல்ல ஆய்வுக் கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. பாராட்டுக்கள். ஒரு சின்ன வேண்டுகோள் வாய்ப்பிருப்பின் பரிசீலிக்கவும். ஆய்வுக் கட்டுரைகள் தொடா்ந்து வெளியடப்பட்டாலும்,அதற்கான பின்னூட்டங்கள் மறுமொழிகள் அதிகம் வருவதில்லை.ஒரு குறிப்பிட்ட நபர் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையை எத்தனை போ் பார்த்தார்கள் என்கிற விபரத்தை கூட தெரிந்து கொள்ள இயலுவதில்லை. வல்லமை ஒவ்வொரு கட்டுரையையும் விவாதப் பொருளாக்க வேண்டும் . வெளியிடுவதைத் தாண்டி பின்னூட்டங்களும் விவாதங்களுமே ஆய்வை அடுத்தக் கட்டத்திற்கு நகா்த்திச் செல்ல வல்லன . வல்லமை ஆவன செய்ய பணிவுடன் வேண்டுகின்றேன். வல்லமை வாசகா்கள் பரிசீப்பீராக.

  8. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

  9. வல்லமை இலக்கிய மின்னிதழ் பேராசிரியர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்பபடும் விதமாக அமைந்துள்ளது.பல்கலைக்கழக மானியக் குழுவில் இவ்விதழ் இடம் பெற்றுள்ளது. வரவேற்கத்தக்கதாகும்.

  10. சிறப்பாக உள்ளது ஆய்வு மாணவா்கள் மற்றும் பேராசிாியா்களுக்கு பயனுள்ளதாக இவ்விதழ் அமைகிறது.

  11. சிறப்பான கட்டுரைகள் இடம் பெறுகிறது. பயனுள்ளதாக இவ்விதழ் அமைகிறது.

  12. வல்லமை எனக்கு நண்பர்கள் வழியாக அறிமுகம் ஆனது. நிறைவாக இருகிறது.
    தொடர்ச்சியாக வாசிக்க விரும்புகிறேன். வாழ்த்துக்கள்.

Leave a Reply to Dr. J. பாண்டியலட்சுமி

Your email address will not be published. Required fields are marked *