மீனாட்சி பாலகணேஷ்

Kandapuranam-10

இன்று கந்தசஷ்டி தினம். முருகப்பிரான், அன்னை பராசக்தி (வேல்நெடுங்கண்ணி) ஆசிர்வதித்து தனக்களித்த கூரிய வடிவேலினால் அரக்கர்களைக் கொன்று தேவர்களைக் காத்தான்.

குழந்தை குமரன்; அவன் தன் சின்னஞ்சிறு கைகளால் சப்பாணி கொட்டுமாறு அன்னையும் பிறரும் வேண்டுகின்றனர். சப்பாணிப்பருவத்தின் பாடுபொருளாவன குழந்தையின் கைகளே! இங்கு குமரனின் குட்டிக்கரங்கள் எத்துணை அரும்பெரும் செயல்களைச் செய்தன என்பதனைக் காண்போமா? திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழில் காணும் ஒரு சப்பாணிப்பருவப்பாடல்.

நெய்தல்நிலமாகிய கடற்புறத்தே அமைந்தவூர் திருப்போரூர்; அங்கு மகரமீன்களைக் கொண்ட கடல் சேறாகி விட்டது; (மகரப்பரவை அளறுபட்டது). அரக்கர்களின் மாயை நிறைந்த கிரௌஞ்சமலை பொடியாகி அதிலிருந்து செந்தூள் பொடியாகப் பறக்கின்றது. வயிரம்பாய்ந்த மலைபோன்ற யானைமுகாசுரனின் மார்பு உடைந்துபட்டது. சிங்கமுகாசுரனின் ஆயிரம் வாய்களினின்றும் பெருகிய குருதி கடலைப்போல விளங்கி அலைகளை வீசி எறிகிறது. அண்டகூடம் வரை ஒரு நெடிய மாமரம் உயர்ந்து நிற்கின்றது. சூரபத்மன்தான் இவ்வாறு மாயையால் மரமாகி நிற்கிறான். குமரன்கை வேலால் தாக்கப்பட்டு முறிந்து பிளந்து அலறி விழுகின்றான். அரக்கர்கள் தமது குடியிருப்பான மகேந்திரபுரியிலிருந்து பதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்! தேவர்கள் பெருத்த நிம்மதியுடன் தங்களது விண்ணுலகக் குடியிருப்புகளில் திரும்பக் குடியேறுகின்றனராம்.

samhara-1

இவ்வாறெல்லாம் நிகழும்படிக்கு முருகன் கையிலெடுத்த வேல் அன்னை அளித்த வேல். அதுஅழகும் பொலிவும் பொருந்தி ஒளிவீசும் நீண்ட இலைபோன்ற தகட்டுவடிவில் அமைந்த கூரிய நீண்ட வேலாகும். அதனைத்தான் முருகன் தன்கையிலெடுத்து நிற்கிறான்.

‘மகரப் பரவை யளறுபட

மாயைத் திறமார் கிரவுஞ்ச

வயமால் வரைசெந் தூளியெழ

மதமா முகத்துச் சினத்தவுணன்

அகலக் குலிச வரைதகர

அரிமா முகன்பே ராயிரவாய்

……………………………………..’

(திருப்போரூர் முருகன் பி. த.- தாலப்பருவம்- சிதம்பர அடிகள்)

Murugan- soorapadman

கிரவுஞ்சமலை மாயைத்திறம் கொண்ட அரக்கன். ஆகவே அதனை ‘மாயைத் திறமார் கிரவுஞ்சம்’ எனக்கூறுகிறார். இவ்வாறு நெய்தல் நிலத்தில் அக்காட்சிகள் தோன்றும்படி சூரனை வதைத்த முருகவேளின் புகழைப் பாடியமை கண்ட நாம் அடுத்து முருகன் வாழும் திருச்செந்தூரின் நெய்தல் நிலத்தின் அழகினைக் காணலாமா?

திருச்செந்தூர் தலம் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆகவே, பகழிக்கூத்தனார் தாமியற்றிய பிள்ளைத்தமிழில் கடல்சார்ந்த நெய்தல் நிலத்தினைப் பலவிதமாகப் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் போற்றியுள்ளார்.

‘திரையெறியு மலைவாய்’ – அலைகளை வீசி எறியும் திருச்செந்தூர் (திருச்சீரலைவாய் என்பது இதன் பெயர்),

‘வெள்வளை தரும் தண்தரள மலைகொண்டு கொட்டு நகராதிபா’- வெண்மையான சங்குகள் ஈனும் குளிர்ச்சி பொருந்திய முத்துக்களை மலைபோல கடலலைகள் கொண்டு கொட்டும் நகருக்கு அதிபனே!’,

‘குரைகட லலையெறி திருநக ரதிபதி’- ஓசையிடும் கடல் அலைகளை வீசியெறியும் திருநகருக்கு அதிபதி,

‘அலையாழிசூழ் திருச்செந்தூர் வடிவேலன்.’

‘கழிதொறும் கயல்குதிக்கத் திரைவாய் முழங்கும் திருச்செந்தில் வேலவனே!’ (கழி- உப்பங்கழி- நெய்தலின் அடையாளம்) என்பன சில உதாரணங்கள்.

முத்தப்பருவத்துப் பாடலில் கூறுகிறார்: “குமரனே! உனது அலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் கடலலைகள் முத்துக்களை வாரி வாரி வீசும். அலைகள் விடாது ஒலியெழுப்பும் கடலிலும், கடற்கரையிலுள்ள உப்பங்கழிகளிலும், அவற்றில் மலர்ந்துள்ள கழுநீர் மலர்களிலும், அக்கழிகளில் உண்டாகும் நீர்ச்சுழிகளிலும், கடற்கரையில் வளர்ந்துள்ள அடர்ந்த தாழைப் புதர்களிலும், இன்னும் பல இடங்களிலும் சங்குகள் வருந்திப்பெற்ற கோடிக்கணக்கான முத்துக்களைக் காணலாம். அத்தகைய வளமுடைய திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் பெருமானே! எமக்கொரு முத்தம் தந்தருளுக,” எனத்தாய் வேண்டுவதாக அமைந்த ஒரு இனிய பாடல்.

‘கத்துங் கடலி னெடும்படவிற்

கழியிற் கழுநீ ரிற்சுழியிற்

கானற் கரையிற் கரைதிகழும்

கைதைப் பொதும்பிற் ………

…………………………………….

முத்தம் சொரியும் கடலலைவாய்

முதல்வா முத்தம் தருகவே’

(திருச்செந்தூர் முருகன் பி. த.- முத்தப்பருவம்- பகழிக்கூத்தர்)

திருவிடைக்கழி என்றொரு சிறப்பு வாய்ந்த திருத்தலம். இதுவும் சூரசங்காரத்துடன் தொடர்புடையது. திருச்செந்தூரில் சூரபதுமனை வென்றான் குமரன். சூரனின் மகன் இரணியாட்சன் என்பவன் ஒரு மகரமீனாக இருந்துகொண்டு தேவர்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தான். அவன் சிறந்த சிவபக்தனுமாவான். தேவர்களின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து முருகன் இங்குவந்து இரணியாட்சனைக் கொன்றான். பின்பு அவனைக்கொன்ற பாவம் தீர ஒரு குராமரத்தடியே சிவலிங்கத்தினைப் பிரதிட்டை செய்து வழிபட்டான். சிவனும் மனமகிழ்ந்து குமரனிடம், “நீயும் நானும் ஒன்றே,” எனக்கூறினார். ஆகவே இத்தலத்தின் சிவனும் முருகனும் ஒருவரே!

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இந்தத் தலத்து முருகன்மீது ஒரு பிள்ளைத்தமிழை இயற்றியுள்ளார். அதிலிருந்து ஒரு செங்கீரைப்பருவப்பாடல்.

‘முறுவல் கொண்ட முகத்து வேர்வை முத்தைப்போல் இலங்க, பச்சைநிறங்கொண்ட பாம்பாட, எருக்கஞ்செடிகள் போன்று சூழ்ந்திருக்கும் படையோடு உன்னை எதிர்த்துப் போரிட்ட சூரபதுமன் தோல்வியடையுமாறு போரிட்ட பன்னிரு திருத்தோள்களும் அசைந்தாட, திருவிடைக்கழி முருகனே! நீ செங்கீரையாடுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடல்.

‘………………………………

சூரனெருக்கமை கானென முற்றிச்

சுற்றிய படையொடுசூர்

தொலைதர மலைதரு நிலைதரு பன்னிரு

தோளு மசைந்தாட

…………………………………

ஆய இடைக்கழி நேய முடைக்குகன்

ஆடுக செங்கீரை’

(திருவிடைக்கழி முருகன் பி. த.- செங்கீரைப்பருவம்- மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

இதுபோன்று நயமிகுந்த பாடல்கள் பல முருகன் சூரபதுமனை அழித்த பெருமையைப்பாடியுள்ளன. இக்கந்தசஷ்டி தினத்தன்று முருகன் திருவடிகளில் இந்த எளிய கட்டுரையை வைத்து வணங்குகிறேன்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)

{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,

கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,

நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,

தமிழ்த்துறைத் தலைவர்.}

************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *