“நிதி சால சுகமா” அல்லது “முதல் இடம்”?

1

த. கணேசன்

 

ராஜ்யம் பூஜ்யம்

2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவு பெற்ற இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் இந்தியாவிற்கு ஒரு சோகக் கதையாக முடிந்துள்ளது.  உலகத்தின் “நம்பர் ஒன்” என்ற நிலையில் இருந்த அணி, இவ்வளவு மோசமாக ஒரு போதும் ஆடவில்லை.  கிரிகெட் சாம்ராஜ்யத்தில், 1983ம் ஆண்டிற்குப் பின்னர் 2011ம் ஆண்டு, உலக கோப்பையைக் கைப்பற்றிய அணி, இங்கிலாந்துத் தொடரில் நன்கிற்கு பூஜ்யம் என்ற நிலைக்கு வந்துவிட்டது.  ராஜ்யம் பூஜ்யத்தில் முடிந்துவிட்டது.

இந்தத் தொடரின் விமர்சனங்களை எழுதி எழுதி, வல்லுனர்களின் பேனா மை உலர்ந்துவிட்டது.  வர்ணனையாளர்களின் வார்த்தைகளும் வற்றிப் போய்விட்டன.  இங்கிலாந்து அணிக்கு தனது வெற்றிகளுக்கான காரணம் என்னவென்று நன்றாகவே தெரியும்.  ஆனால் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணங்கள் என்று தெரிந்தாலும் வீரர்கள் வெளிப்படையாக சொல்ல முடியாத எண்ணச்சிறையில் சிக்கியுள்ளனர்.

 

நம்பர் ஒன்

கிரிக்கெட்டில் “நம்பர் ஒன்” என்ற நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேரவா, இந்திய அணியை மட்டுமல்ல, கிரிக்கெட்டை மற்றொரு வேதமாக ஏற்றுக் கொண்டுள்ள இரசிகர்களின் மனதிலும் ஆழமாகப் பதிந்து விட்டது.  இந்திய அரசியலில் நிரந்தர முதல்வர், பிரதமர் என்று சொல்வது போன்று கிரிக்கெட்டிலும் நிலைக்கண்டு விட வேண்டும், என்ற உயிர்த்துடிப்பு, நம்முள் ஏன் பற்றி எரிய வேண்டும் என்றும் புரியவில்லை.

 

மலை ஏறினால் இறங்க வேண்டும்

மலை ஏறிய எவரும், டென்சிங் உட்பட கீழே இறங்க வேண்டியிருந்தது அல்லவா?  நம்பர் ஒன்று என்ற நிலையில்ல் இருந்த உலக விளையாட்டுச் சாதனையாளர்கள், அந்த எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை.  டென்னிஸ் விளையாட்டின் மாபெரும் மஙையான மார்ட்டின நவ்ராட்டிலோவோ ஒரு முறை சொன்னார் “நம்பர் ஒன்” என்று நிலைத்திருப்பது சாத்தியமல்ல.  அதற்காக நிறைய வேதனையான விலை கொடுக்க வேண்டும்.  அவரது இனிய எதிரியான ஸ்டெபி கிராபும் அந்த நினைவுகளில் வருந்திக்கொள்ளவில்லை.  1930களில், விம்பிள்டன் கோப்பையையும், டேவிஸ் கோப்பையையும், தொடர்ந்து மூன்று முறை வெண்ற Patty நம்பர் ஒன்று என்ற நிலைக்காக அதிகம் சிரமப்பட்டதில்லை.  ஜான் போர்கின் விம்பிள்டன் சாதனையை சாம்பிரஸ் விஞ்சிய போது போர்க் அதை ரசித்தார்.

கால் பந்தாட்ட உலகக்கோப்பை போட்டிகளில், பிரேஸிலும், அர்ஜென்டினாவும், பிரான்சும் தொடர்ந்து “நம்பர் ஒன்” என்று நிற்க முடியவில்லை.  1928ம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் தொடங்கிய இந்திய அணியின் ஆதிக்கம் 1960ல் ரோம் ஒலிப்பிக்கில் முறியடிக்கப்பட்டபொழ்ஹுது, நம்பர் ஒன் நிலைமையை இழந்து விட்டோம் என்று மரணக் கவிதையை யாரும் எழுதவில்லை.  நமது பங்காளி நாடான, பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் சூட்சுமத்தைப் பற்றி யோசித்தோம்.  தியான் சந்த், கே.டி.பாபு, சி.ஆர். பிரான்ஸிஸ், உத்தம் சிங், ஜெய்பால் சிங் இன்னும் பல வீரர்களின் நினைவுகளை நாம் “நம்பர் ஒன்” நிலைக்காக மறந்து விடவில்லை.

கிரிகெட் என்ற ஆலமரம்

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் ஏன் இந்த வருத்தம், சோகம், வேதனை என்றால் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாத திருவாளர் இந்திய விளையாட்டு வீரர்களே ஒரு முக்கிய காரணம்.  இந்தியாவில், விளையாட்டு என்றால், அது கிரிகெட் மட்டுமே என்ற சுருங்கிப்போன, விடுபட முடியாத எண்ணச் சிறையிலிருந்து விடுபடாமல் இருக்கிறோம்.  ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா பெற்ற தங்கப் பதக்கமோ, அல்லது குத்துச் சண்டை, மல்யுத்தத்தில் பெற்ற வெண்கலப் பதக்கங்களோ, பெரும்பாலான இந்தியருக்குத் தெரியாது.  அந்த ரசிகர்களுக்கு தேவையானது கிரிகெட் வெற்றி என்ற ஒன்றேயாகும்.

கொட்டிக் கொடுத்த கோடிகள்

கிரிகெட்டில் ஏன் இந்த நிலை என்று யோசித்தால் முதலில் பணம், பின்னர் புகழ்.  இந்தியன் ப்ரீமியர் லீக், கொட்டித் தந்த கோடிப் பணத்தின் திகட்டாத சுவையை இழக்க வீரர்கள் விரும்பவில்லை.  20 ஓவரின் அதிகபட்ச ஆட்ட நேரம், மூன்று மணி நேரம் என்றால், அதைத் தொடர்ந்த விருந்துகள், களியாட்டங்கள் அதிகாலை வரை நீடித்தது.  அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலோ அல்லது மும்பையின் தலால் ஸ்ட்ரீட்டிலோ அன்றாடம் நடைபெறும், பணப்புழக்கத்தை, வர்த்தகத்தையெல்லாம், ஐபிஎல் பணப் புழக்கம் விஞ்சிவிட்டது.  பொது இடங்களில் புகைபிடிக்ககூடாது, மது அருந்தக் கூடாது, ஆபாச நடனங்கள் (சியரிங் கர்ள்ஸ்) கூடாது என்ற சட்ட விதி மீறல்களுக்கு எல்லாமே ஐ.பில்.எல். இடம் கொடுத்தது.  கிரிக்கெட் விளையாட்டில் 1970களில் வர்த்தகமயமாக்கிய, கேரி பேக்கர் கூட இந்தகைய, விளையாட்டை மீறும் உணர்வுகளுக்கு இடமளிக்கவில்லை.

நிதி சால சுகமா?

பணம், பொருள் எல்லோருக்கும் அவசியம் தேவைதான்.  அந்த தேவைக்கு விளையாட்டு வீரர்கள் விதிவிலக்கல்ல.  ஆனால் பணமே பிரதானம் என்ற நிலைக்கு விளையாட்டு உணர்வுகள் சென்று விடக்கூடாது.  பணம், புகழ் என்று விளையாட்டுத் துறையில் எண்ணம் பதிக்கும் பொழுது, ஒரு அற்புத சம்பவம் நினைவிற்கு வருகிறது.  1960களில் டென்னிஸ் உலகப் போட்டிகளீல், தொழில் சார்ந்த (Professionals) மற்றும் தொழில் சாராத (Amateur) என்ற இருவகைப் பிரிவுகள் இருந்தன.  தொழில் சார்ந்த ஆட்டக்காரர்கள், விம்பிள்டன் மற்றும் டேவிஸ் கோப்பை போட்டிகளில் ஆட தடையிருந்தது.

அந்த காலகட்டத்தில் இந்தியாவின் டென்னிஸ் வீரர் இராமநாதன் கிருஷ்ணன் புகழின் உச்சத்தில் இருந்தார்.  விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் அரையிறுதிப் போட்டி வரை இரண்டு வருடங்கள் தொடர்ந்து ஆடித் தோற்றுப்போனார்.  அந்த சமயத்தில் வீரர்களை ஏல முறையில் எடுக்கும் வழக்கம் இருந்தது.  டென்னிஸ் -ன் முக்கியப்புள்ளி ஒருவர், கிருஷ்ணனை அணுகி, தனது தொழில் சார்ந்த டென்னிஸ் குழுவில் இணைந்து கொள்ள வெண்டினார்.  அதற்காக, ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்கள் (மலைப்பாக இருக்கிறது அல்லவா?) ஊதியமாகத் தரவும் முன்வந்தார்.

ஆனால் கிருஷ்ணன் பெருமளவில் அமெரிக்க டாலர்கள் மழையாய்ப் பொழிந்த அழைப்பை ஏற்கவில்லை!  காரணம் என்னவென்றால், தொழில் சார்ந்த போட்டியாளராக மாறினால் (பண வரவு அதிகம் இல்லாத) விபிள்டனிலும் ஆட இயலாது.  தாய் நாட்டிற்காக டேவிஸ் கப் போட்டியிலும் ஆட முடியாது.  பணதிற்காக, தேசத்திற்கு ஆடும் வாய்ப்பை கிருஷ்ணன் இழக்க விரும்பவில்லை.

அன்று தியாகய்யர் இசைத்த ”நிதி சால சுகமா”விற்குப் பொருத்தமானவர் டென்னிஸ் கிருஷ்ணன் என்று சொன்னால், மிகை ஏதும் இல்லை அல்லவா!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““நிதி சால சுகமா” அல்லது “முதல் இடம்”?

  1. //அந்த சமயத்தில் வீரர்களை ஏல முறையில் எடுக்கும் வழக்கம் இருந்தது. டென்னிஸ் -ன் முக்கியப்புள்ளி ஒருவர், கிருஷ்ணனை அணுகி, தனது தொழில் சார்ந்த டென்னிஸ் குழுவில் இணைந்து கொள்ள வெண்டினார். அதற்காக, ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்கள் (மலைப்பாக இருக்கிறது அல்லவா?) ஊதியமாகத் தரவும் முன்வந்தார்.//

    இதற்கு சான்று தர இயலுமா ?? என்றைக்கும் கிரேன்ட் ஸ்லாம் போட்டிகள் தொழில் முறை போட்டிகளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *