இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 253 )

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.

காலம் எனும் படகு யாருக்கும் காத்திராமல் தன்னுடைய திசையிலே மிகவும் அவசர கதியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இக்கால ஓட்டத்தினைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு வாழ்வினில் வெற்றியடைந்தோர் பலர், கால ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திக்குமுக்காடிச் சிக்கித் தவிப்போர் பலர் எனப் பலவிதமான வாழ்க்கைச் சிக்கல்களைத் தோற்றுவிப்பதும், அவிழ்ப்பதுமாக இக்கால ஓட்டப் பயணத்தின் விளைவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆண், பெண் என்று வித்தியாசம் காட்டாது அவர்களுக்கான பாதைகள் வகுக்கப் படுகிறது. பெண்ணின்மேல் ஆண் அதிகாரம் செய்வதென்பது அனைத்துக் கலாசாரங்களிலும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

ஆணுக்குப் பெண் சளைத்தவளல்ல என்பதைக் காட்டும் முகமாகவே ஈசன், அர்த்தநாரீஸ்வராகப் பெண்ணுக்குச் சமபாகம் கொடுத்தார் என்கிறது இந்து வேதங்கள். ஆனால் இன்றைய உலகில் ஆண், பெண் எனும் வேறுபாடு பலவடிவங்களில் தலைதூக்கிக் கொண்டுதானிருக்கிறது. பெண் என்பவள் இல்லத்தரசி என்றும், குழந்தைகளைப் பெறுவதும்,பேணுவதும் மட்டுமே அவர்களுக்கு உகந்த பணி எனும் வகையில் இன்று சில ஆண்கள் நடப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இன்றும் இங்கிலாந்தில் சம பணிகளில் இருக்கும் ஆணைவிடப் பெண்ணுக்கு ஊதியம் குறைவாகவே கொடுக்கப்படும் ஒரு நிலையைக் காண்கிறோம். இந்த வித்தியாசத்தை அரசாங்கம் இனங் கண்டு கொண்டு இவ்விடைவெளி நிரப்பப்படுவதற்கு காலக்கெடு விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டைக் காக்கும் பணியில் இராணுவத்தில் இணையும் பெண்கள் சமீபகாலம் வரை போர்க்களங்களில் முன்னணிக்கு அனுப்பப்படாமலிருந்த நிலை இங்கிலாந்தில் இருந்தது. அது சமீப காலத்தின் முன்னால்தான் சட்ட மாற்றம் மூலம் மாற்றியமைக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தேசங்களிலும், பின்புலங்களிலும் கணவன், மனைவி இருபாலாரும் வேலை பார்ப்பதன் மூலமே குடும்பத்தைப் பராமரிக்கக்கூடிய நிலை காணப்படுகிறது. ஆயினும் பல இடங்களில் இன்றும் வேலைக்குச் சென்று திரும்பும் பெண்களே வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு விதிவிலக்காகப் பலர் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது; இருப்பினும் ஆணாதிக்கத் தன்மையும் பல இடங்களில் ஓங்கி இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. எத்தனை கடினமாக உழைத்தாலும் பெண்ணாக இருந்தால் பதவி உயர்வுகளைப் பெறுவதிலும் பெண்கள் பல தடைகளைத் தகர்த்தெறிய வேண்டிய கட்டாயத்துக்குட்படுத்தப்படுகிறார்கள். சமீப காலத்தின் முன்னால் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் அவர்கள் பெண்ணாக இருந்ததால் அளவுக்கதிமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. உலகநாடுகளுக்கு முன்மாதிரியாக முன்னணியில் திகழ்வதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்காவிலேயே இத்தகைய நிலையானால் மற்றைய நாடுகளைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா என்ன ?

சரி, எதற்காக இந்த ஆய்வெல்லாம் எனும் எண்ணம் ஏற்படுகிறதா? சமீபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் அமைச்சரவையே உலுப்பும் அளவிற்கு வலுப்பெற்றதனை நோக்குவதே இம்மடலில் முக்கியக் காரணியாகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஹாலிவூட்டின் முன்னணித் தயாரிப்பாளரும், மிகவும் பிரசித்தி பெற்ற அமெரிக்கருமான “ஹார்வி வெயின்ஸ்டைன் (Harvey Weinstein)” என்பவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இச்சம்பவம் ஒரு பெரிய பாரிய பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது. ஒரு பெரிய அணைக்கட்டை உடைத்து வெள்ளம் பாய்வதுபோலப் பல பிரபல்யமானவர்கள், தமது பிரபல்யத்தை உபயோகித்துத் தம்மைப் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளார்கள் என்று பல பெண்கள் குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் ஆரம்பித்த இந்த குற்றச்சாட்டுகள் இப்போது இங்கிலாந்து அமைச்சரவையில் வந்து நிற்கிறது. எப்படி என்கிறீர்களா? இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கு உதவியாளர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் பணிபுரியும் பல பெண்கள் தாம் ஒரு காமப்பொருளாக அங்குப் பணிபுரியும் பல ஆண்களினால் நடத்தப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்கள். பிரபல்யமானவர்கள் மீது குற்றம் சுமத்தினால் தமது எதிர்காலம் பாழ்பட்டு விடும் எனும் பயத்தினால் பல சமயங்களில் மெளனமாக இத்தகைய செயல்களைத் தாம் பொறுத்துக் கொண்டிருந்ததாகவும் இப்போது பல வழிகளில் இத்தகைய செயல்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதால் தாமும் வெளிவருவதாகக் கூறியுள்ளார்கள்.

ஆச்சரியமான் விடயம் என்னவெனில் இத்தகைய செயல்கள் சில நடந்தது சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சிக்கலிலே மாட்டிக் கொண்ட இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் இன்று தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அப்படி இவர் மீது என்ன குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது? ஒரு முன்னணிப் பெண் ஊடகவியலாளர் கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர் சுமார் பதினைந்து வருடங்களின் முன்னால் இப்போதைய பாதுகாப்பு அமைச்சர் (நேற்றுவரை) அன்றைய பாராளுமன்ற அங்கத்தவர் தன்னுடன் தனிமையில் பேசும்போது தனது துடையில் கையை வைத்துப் பேசினார் என்றும், அத்தகைய செயலில் ஈடுபட்டால் விளைவு விபரீதமாகும் என்று தான் எச்சரித்ததினால் அவர் நிறுத்தினார் என்றும் கூறியதே அவ்வமைச்சரின் சரிவுக்குக் காரணம்.

ஆனால் ஆச்சரியம் என்னவெனில் தான் கூறியதின் விளைவு அமைச்சர் தனது பதவியை இழப்பது என்று தான் கடைசிவரை எண்ணவில்லை என்றும் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சிறிய விடயம் இத்தனை பாரதூரமாக்கப்பட்டிருக்கத் தேவையில்லை என்று அப்பெண் ஊடகவியலாளர் இப்போது கூறியிருப்பதே இப்படியான பல குற்றச்சாட்டுகளில் சில பாரதூரமானவை என்றாலும் இத்தகைய விடயங்கள் பல மிகைப்படுத்தப் படுக்கின்றன என்று சில ஊடகவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்துப் பாராளுமன்ற வளாகம் பல காமவெறியர்களைக் கொண்டது என்பது போன்ற தோற்றத்தையளிக்கும் வகையில் இருக்கிறது, இங்கிலாந்துப் பாராளுமன்றம் 14000 பேர்வரை பணிபுரியும் ஒரு கெளரவமான இடம் என்பதை மறந்து விடக்கூடது எனும் வாதமும் முன்வைக்கப்படுகிறது.

பெண்களை நோக்கிய ஆண்களின் பார்வை மாற வேண்டியது அவசியம். பெண்களை வெறும் காமத்தின் அடையாளமாய்ப் பார்க்கும் பல ஆண்கள் இருப்பது உண்மையே ! இது சிறுவயது முதலே ஆண்களின் மனத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய வகையில் அவர்களது கல்விமுறை அமைக்கப்பட வேண்டும். இச்சமயத்தில் நிவேதிதா அம்மையார் பாரதியாருக்குச் சொன்னதை நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது ” பெண்கள் விடுதலையடையும் வரை ஒரு நாடு விடுதலையடைய முடியாது .”  இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் அதிபர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *