“அவன், அது , ஆத்மா” (55)

(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 54

“வங்கக் கவிஞர் டாக்டர் ஜகன்னாத் சக்ரவர்த்தி”

டாக்டர் ஜகன்னாத் சக்ரவர்த்தி

வங்கக் கவிஞர் டாக்டர் ஜகன்னாத் சக்ரவர்த்தியின் அறிமுகம் அவனுக்கு மனைவி சீதாலட்சுமி மூலமாகக் கிடைத்தது. அவர் கொல்கத்தாவில் இருக்கும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றியவர். நவீன வங்க இலக்கியத்தின் தலைசிறந்த கவிஞர். இந்திய அரசாங்கம் வழங்கும் “தேசியக் கவி” (National poet) என்ற விருதை இரண்டு முறையும், சோவியத் நாடு நேரு பரிசையும் பெற்றவர். இனிமையாகப் பழகும் தன்மையும், அன்பும் கொண்ட ஒரு நல்லறிஞர். “ஷேக்ஸ்பியர்” படைப்புகளில் ஆழ்ந்த புலமை கொண்ட உலகத்தரத்தில் மதிக்கப் பெற்ற அறிஞர்.

பத்து கவிதைத் தொகுதிகள், மூன்று ஆய்வு நூல்கள், இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள், ஷேக்ஸ்பியர் பற்றிய ஆங்கில ஆய்வு நூல்கள் இரண்டு, காந்தியின் வாழ்க்கை வரலாறு போன்ற அவரது படைப்புகள் முக்கியமானவைகளாகக் கருதப்படுகிறது.

1985ம் வருடம் அக்டோபர் மாதத்தில், அவனுக்கு மனைவி அவனை அழைத்துக் கொண்டு கொல்கத்தாவில் ஜாதவ்பூரில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்றிருந்தார். தமிழ்நாட்டுக் கவிஞர்கள் பலரை அவருக்குத் தெரிந்திருந்தது. முக்கியமாக மகாகவி பாரதியாரின் கவிதைகளை அவர் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாக அறிந்து வைத்திருந்தார். ஞானக்கூத்தன், கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ் போன்றவர்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்ததை அவருடன் உரையாடும் பொழுது அறிந்து கொள்ள முடிந்தது. அவரது சீரிய வழிகாட்டுதலில்தான் அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மி “மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வால்ட் விட்மன் கவிதைகளை ஒப்புவமை” ஆய்வை ஆங்கிலத்தில் செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

சதக அமைப்பைக் கொண்டு வங்காள மொழியில் திரு. ஜகன்னாத் சக்கரவர்த்தி எழுதி இருந்த நூறு கவிதைகளை டாக்டர் சீதாலட்சுமி அவர்கள் “மௌன இமாலயமும் அமைதி ஆல்ப்ஸும்” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து மார்ச் மாதம் 1992ம் வருடம் அவனுக்கு நண்பர் திரு.அகிலன் கண்ணன் அவர்களின் “தாகம்” பதிப்பகம் மூலம் வெளியிட்டார்கள். அந்தக் கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் ஞானக்கூத்தன் அவர்கள் அருமையான முன்னுரை வழங்கி,” எனக்கு ஜகன்னாத் சக்கரவர்த்தியை நேரில் பார்த்து உரையாட வேண்டும். அவர் சென்னைக்கு வரும்பொழுது தெரியப் படுத்துங்கள்” என்று சொல்லி இருந்தார். இந்த மொழிபெயர்ப்புக் கவிதை வெளியான மார்ச் மாதமே (28.03.1992) அந்தத் தொகுப்பைப் பார்க்கும் முன்பே புற்றுநோய் காரணமாக தனது அறுபத்தி எட்டாவது வயதில் அவர் விண்ணுலகம் சென்றுவிட்டது ஒரு துரதிருஷ்டம்.

தொகுப்பில் இருந்து ஒரு கவிதையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

“ஒரு தடவை கலிபோர்னியாவில்”

“ஒருதடவை கலிபோர்னியாவில் …….
ரெட்வுட் காட்டில் நடக்கும் பொழுது உணர்ந்தேன்
நான் தனியொருவனாகவே
முழுக் காட்டையும் விட மேல்லானவன் என்று.
இன்றோ ஆல்ப்ஸின் மேல் ஏறி வந்தபின்
எனக்குத் தோன்றுகிறது
நான் தனியொருவனாகவே
இந்த மலை, காடு இரண்டையும் விட
மேலானவன் என்று.
காட்டாலும், மலையாலும்
தங்களுக்குள் இந்த பூமியைப் பங்கு கொள்ள முடியவில்லை
எனக்கும் உனக்கும்
மற்ற யாத்திரிகர்களுக்கும்
நிற்க இடம் தர வேண்டி வந்து விட்டது.
நான் உண்மையிலேயே அபரிமிதமானவன்.”

“இவரது கவிதைகள் எளிமையும், அமைதியும் உடையனவாக உள்ளன. மன விரிவையும், விடுதலை உணர்வையும்,சிறிதளவு துக்கத்தையும் கூடத் தருகின்றன. நமக்கு இவரது கவிதைகள் ஒரு நல்ல வரவு. மொழிபெயர்ப்பில் ஒரு இனிய இசைகூடக் கேட்கிறது” என்று கவிஞர் ஞானக்கூத்தன் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

03.11.2017

மீண்டும் அடுத்தவாரம் வருவான்……….

Share

About the Author

மீ. விசுவநாதன்

has written 257 stories on this site.

பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. நூல்கள்: "இரவில் நனவில்" என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், "காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்" கவிதைத் தொகுதிகள். இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் "லில்லி தேவசிகாமணி" இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998): பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு "கவிமாமணி" விருதளித்துக் கௌரவம் செய்தது.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.