மீ.விசுவநாதன்
பகுதி: 16

பாலகாண்டம்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1-1-2-1
“மிதிலைக்குப் புறப்படுதல்”

பொழுது புலர்ந்த வேளையதில்
புனிதக் கதிரின் மேன்மைகளை
தொழுது முடித்த இராமபிரான்
தூய முனியின் முகம்பார்த்து
விழுது நாங்கள் உங்களது
விருப்பம் அறிய விரும்புகிறோம்
எழுத முடியா குருவருளே
இயம்பும் அடுத்த செயலென்றார்! (1)

அங்கே இருந்த முனிவர்கள்
அன்பாய் இராமன் விழிநோக்கி
சிங்கம் போன்ற சீராளா
சேர்ந்து வருக எங்களுடன்
பொங்கும் ஞான மிதிலைக்குப்
போக வேண்டும் எல்லோரும்
அங்கு நடக்கும் யாகத்தின்
அருமை அப்படி என்றார்கள் ! (2)

ஜனகரிடம் உள்ள “வில்”

மிதிலை அரசன் ஜனகருக்கு
மிகுந்த செல்வம் இருந்தாலும்
எதிலும் அவர்க்குத் துளிகூட
ஈர்ப்பே இன்றி வாழ்கின்றார் !
முதியோ ரான முன்னோர்க்கு
முன்பு கிடைத்த “வில்”லொன்றை
புதியோ ரான நீர்காணப்
புறப்ப டுங்கள் என்றார்கள் ! (3)

“சோணா நதிக்கரை அடைதல்”

விசுவா மித்ரர் புறப்பட்டார் ;
விரும்பிப் பறவைக் கூட்டங்கள்
பசுவும் கன்றும் விலங்கினங்கள்
பக்தி யுடன்பின் வரக்கண்டு
“திசையாம் வடக்கில் செல்கின்றோம்
திரும்பி நீங்கள் செல்கவென்று”
அசையா மனத்து முனிமன்னன்
ஆசி தந்து அனுபினரே ! (4)

சோணா நதியின் கரைவந்து
சுகமாய் சந்தி செய்தார்கள்
காணா சாந்தி கிடைத்ததுபோல்
கவலை மறந்து செபித்தார்கள் !
வீணாய்க் காலங் கழிக்காத
விசுவா மித்ரர் குலக்கதையை
வாணாள் சிறக்க உதவுமென
மனத்தால் வணங்கிக் கேட்டார்கள் ! (5)

“விசுவாமித்ரரின் குலக்கதை”

நான்கு முகனின் மகன்”குசனின்”
நல்ல தவத்தின் பயனாக
நான்கு மகன்கள் பிறந்தார்கள்
ஞான வான்கள் ஆனார்கள் !
வான மழைக்கு ஈடாக
வளர்ந்த பிள்ளை “குசநாபன்”
மான மிகுந்த பெண்பிள்ளை
வரமாய் நூறு பெற்றிட்டான் ! (6)

நூறு பெண்கள் அழகினிலே
நொடியில் வீழ்ந்த வாயுவிடம்
வேறு பெண்ணைத் தேடுங்கள்
விட்டு விடுங்கள் ஆசையென
கூறிய மொழியில் சூடாகிக்
கோபங் கொண்ட வாயுவுமே
நேரிய பெண்கள் யாவரையும்
நெஞ்சம் நடுங்கச் செய்துவிட்டான். (7)

பெண்கள் பொறுமை நிலைபுரிந்து
“பிரும்ம தத்தர்” எனும்மன்னன்
திண்ணம் இவர்க்குத் துணையென்றே
சேர்த்து வைத்தார் தந்தைதான் !
பெண்கள் சென்ற பின்தனக்குப்
பிள்ளை வேண்டிக் குசநாதன்
எண்ணி யாகம் முடித்திட்டார் !
இனிய மகனாய்க் “காதி”பெற்றார். (8)

அறத்தை அகத்தில் காக்கின்ற
அன்புத் தந்தை “காதிக்கு”
புறத்தே இரண்டு பிள்ளைகள் !
போற்றும் படியாய் “சத்யவதி”
துறவை மனத்தில் வைத்திருக்கும்
தொண்டன் அடியேன் “கௌசிகனும்”
இறைவன் கொடுத்த கொடையாக
என்றும் நிலைத்து வாழ்கின்றோம். (9)

“கௌசிகீ நதியின் வரலாறு”

மூத்த பெண்ணை “ரிசீகமுனி”
முறையாய் மணந்த பின்னாலே
காத்த தவத்தின் பயனாக
களிக்கும் தேவ ருலகத்தில்
பூத்த பொன்னாய் ஆனார்கள் !
பூமி காக்க சத்யவதி
ஏத்த நதியாம் “கெளசிகீயாய்”
இமயம் வழிந்து செழிக்கின்றாள். (10)

“குலத்தின் பெருமை கேட்டதனால்
குணத்தைக் கூறித் தெரிவித்தேன்
நிலத்தின் பெருமை சத்தியத்தை
நிதமும் காக்கும் மேலோரின்
பலத்தில் தானே உள்ளதென்று”
பண்பு விசுவா மித்திரரும்
நிலத்தில் நிலவின் ஒளிபரவும்
நேரம் இரவில் துயில்கொண்டார். (11)

(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 31, 32, 33, 34ம் பகுதி நிறைந்தது)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *