படக்கவிதைப் போட்டி (134)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

22883441_1465870270133834_601823443_n

பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (11.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

9 Comments on “படக்கவிதைப் போட்டி (134)”

 • ரா. பார்த்த சாரதி
  R.Parthasarathy wrote on 11 November, 2017, 7:46

  நேரமும், கடல் அலையும், மனிதனுக்காக காத்திருக்காது

  பணமும், பொருளும் மனிதனிடத்தில் என்றும் தங்காது !

  அதிகாலையில் கடிகார மணியோசை கேட்டு எழுவோம்

  அன்றைய வேலைக்கு செல்ல உடனே புறப்படுவோம் !

  நம்மைவிட்டு என்றும் அகலாத ஓர் கருவி

  நாளும் நமக்கு தேவைப் படும் அதன் உதவி !

  வேலைக்குச் செல்வோர் கையில் கடிகாரம் இருக்கும்மே

  வேலை முடியும் நேரத்தையும் தெளிவாக காட்டும்மே !

  கடிகாரத்தில், அண்ணன், தம்பி போல் இரு முள்கள் இருக்கும்

  கருவேல மரத்திலும்,ரோஜா செடியிலும் முள்கள் இருக்கும் !

  பைந்தமிழில் கடிகாரத்தை நிழற் கடிகை என அழைப்பர்

  சூரியஒளி, நிலஒளி கொண்டு அன்று நேரத்தை கணக்கிடுவர் !

  கடிகாரம் இருபத்துநான்கு மணி நேரமும் ஓடிக்கொண்டியிருக்கும்

  பல தேசங்களுக்கு வித்தியாசமா நேரத்தை காட்டிகொண்டியிருக்கும்

  வாழ்க்கை எனும் வட்டம் கடிகார முள்கள் போல சுற்றி வருமே

  கடிகார முள்ளும், ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றி வருமே !

  மனித உடலில் இதயமெனும் கடிகாரம் துடித்து ஓடுகின்றது

  நேரத்தைக் காட்டும் கடிகாரமும் நிற்காமல் ஓடுகின்றது !

  நேரத்தைக் காட்டும் கடிகாரம் நின்றால் பழுது பார்க்கலாம்

  இதயம் எனும் கடிகாரம் நின்றால் பழுது பார்க்க முடியுமா !

  நேரத்தைக் காட்டும் கடிகாரமோ காலை,மாலை,நேரத்தை காட்டும்,

  இதய ரத்த ஓட்டமோ மனிதனின் நாடி துடிப்பை தெளிவாக காட்டும் !

  எல்லோருக்கும், எந்நேரத்திலும் பயன்படும் கடிகாரமே

  மனிதனின் மனதில், நிலையாய் இருப்பாய் என்பது திண்ணமே !

  ரா.பார்த்தசாரதி

 • எஸ். கருணானந்தராஜா
  எஸ். கருணானந்தராஜா wrote on 11 November, 2017, 11:32

  காலத்தைக் காட்டும் கடிகார முள் போலும்
  காயத்தைச் உருவாக்கும் காட்டு முள் போலும்
  ஞாலத்தில் எத்தனை பேர் நம்மிடையே உள்ளார்கள்
  சீலத்தால் வாய்மையினால் சிந்தனையால் உயர்ந்தோர்
  தீமையே பயக்கின்ற செயல் புரியும் கீழோர்
  எல்லோரும் வாழ்கின்ற இந்தவுலகிற்தான்
  நல்லதற்கும் தீயதற்கும் நடுவினில் நாம் வாழ்கின்றோம்

  முள்ளிலும் பலவாயுண்டு முனைப்பிலே, மாறுபட்ட
  சொல்லிலும் மாந்தராலே சுகமுண்டு துக்கமுண்டு.

  இனிய நற் செயலாலெங்கள் இதயத்தைத் தொடுவார் மேலோர்
  கனிவிலா மொழிகள் கூறிக் கவலையைத் தருவார் கீழோர்
  நனி துயர் கூட்டுகின்ற நடு வழிப் புதர் முள் போலும்
  எனிலவர் தொடர்பு நீங்கி இருப்பதே என்றும் மேலாம்.

  உரிய நேரத்தைக் காட்டி உறக்கத்தைப் போக்கும் முள்போல்
  சரியெனும் தருணந்தன்னில் தளர்ந்திடா தூக்குவிக்கும்
  அரியநல் அன்பர் தம்மோ டருகினில் என்றும் வாழ்வோர்
  புரியுநற் செயல்களெல்லாம் போற்றுதற் குரியவாகும்.

 • மா.பத்ம பிரியா,உதவிப்பேராசிரியர்,எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி,சிவகாசி wrote on 11 November, 2017, 17:19

  காலத்திற்கு முன் நானொரு சிறுதுரும்பு

  காலம் கரைகிறது
  கனவு வளர்கிறது
  ஒவ்வொரு கனவுகளும்
  ஒலமிடும் காதோரம்
  சிகரம் தொடும் எண்ணத்துடன்
  சிந்தனைகள் சிறகடிக்க
  சிக்கல்களைச் சிதறடிக்கும்
  உத்வேகம் உள்ளத்தில்
  உயரத்தின் உச்சிதனை
  தொட்டுவிட ஆசை தான்
  துவளும் மனவுறுதியை
  கட்டிவைக்க ஆசை தான்
  கண்ணில் விரியும் எல்லையின் நீளம்
  கரங்களில் உள்ளடக்கம்
  செம்மாந்த மனச்செருக்கு என்னிலும் உண்டு
  வளைந்து நெளியும் வாழ்க்கைப் பாதையில்
  வாகனஓட்டுநர் நேர்த்தியுடன் கையாளும் திறனை
  வல்லூறு கூர்நகங்கள் புரட்டிப்போடும் நாளும்
  இன்னல்களும் இன்பங்களும்
  இடையீடு செய்தாலும்
  இலட்சியத்தின் பயணத்தில்
  எச்சரிக்கை மணி அடித்தாலும்
  சிலந்தி வலையாக என்னை நான் சூழ்ந்திருக்க
  போதிமரத்து புத்தனாக ஞானஒளி யாசித்திருக்க
  புன்னகை பரிமாறும் விழிகளின் சீண்டல்கள்
  பொழுதுபோக்காக திசைமாற்றும் என்னை
  ஏனிந்த அலைபாயும் மனது
  பாதையில் பயணிக்க
  பள்ளங்களும் மேடுகளும் பயணத்தில் தடையாக
  காலத்தின் ஓட்டத்தை
  விரல்விட்டு எண்ணிப் பார்க்கும் குழந்தையின் மனசாக
  மானுட விதியோ காலத்தின் பிடியில்
  முந்திக்கொண்டு ஓடும் மானுட கதியோ
  முனகிக் கொண்டே ஜன நதியில் பயணிக்க
  நானொரு சிறுதுரும்பானேன்
  காலத்தின் பிடியில்

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 11 November, 2017, 19:33

  கால மேலாண்மை…

  காலம் காட்டிடும் கடிகாரம்
  காலமே வாழ்வின் அதிகாரம்,
  வேலையைச் செய்திடு காலத்திலே
  வெற்றியே தங்கிடும் ஞாலத்திலே,
  காலம் நமக்காய்க் காத்திராது
  கடந்தால் இலக்கில் சேர்த்திடாது,
  கோலம் வாழ்வில் நன்றாய்ப்பெற
  கொண்டிடு கால மேலாண்மையே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 11 November, 2017, 20:37

  முள்ளும் மலராகும்: முள் என்றால் காயம் மட்டுமா ,
  என் தோழா!
  அது உனைக் காக்கும் வேலி அதை ஏனோ மறந்தாய்,
  என் தோழா!
  மொட்டுக்கள் மலராய் மலர,முள்ளே காவல்,
  என் தோழா!
  விதைகள், மரமாய் வளர, முள்ளே காவல்,
  என் தோழா!
  புல்பூண்டு கூட முளைக்காத பாலைவனத்தில், முள்ளே
  விலங்கிற்கு உணவாம் என் தோழா!
  கடிகார குடும்பத்தின் உயிர் நாடி,
  முட்கள் தானே என் தோழா!
  கண்டிப்பு என்ற முள் தானே
  ஒழுக்கத்தை தந்தது, என் தோழா!
  தண்டனை என்ற ,முள் தானே
  குற்றத்தை ஒழித்தது என் தோழா!
  மருந்து என்ற முள் தானே
  நோயைத் தீர்த்தது என் தோழா!
  மரண பயம் என்ற முள் தானே
  தவறைக் குறைத்தது என் தோழா!
  முதுமை என்ற முள் தானே
  தெளிவைத் தந்தது என் தோழா!
  முள்ளென்று இழிவாய் நினைக்காதே
  என் தோழா!
  முள்ளும் மலராகும் அதன் விளைவாளே
  என் தோழா!

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 11 November, 2017, 23:20

  நேரத்தின் தத்துவம்..!
  ===================

  இயற்கை தந்ததோ இருபத்திநான்கு மணித்துளிகள்..
  ……….இதிலெத்துணை நேரத்தைப் பயனாக்குகிறோம் நாம்.!
  வியத்தகு விஞ்ஞானம் வியப்புறும் விந்தைபுரிந்தாலும்..
  ……….வீணே கழியுநல்நேரத்தை சேமிக்க வழியில்லையோ.?
  மயக்கும் செயல்கள்மீதே நம்மதிகெட்டுப் போனதால்..
  ……….மாயமாய் மறைந்தே போய்விடுகிறது மொத்தநேரமும்.!
  இயங்கும் இவ்வுலகிற்குப் பஞ்சபூதம் காரணமாமவை..
  ……….இயங்காமல் சற்றுநேரம் நிலையாயின் என்னவாகும்..?

  நேரமதை நேசிக்கநாம் பழகவேண்டும்! செயல்புரியும்..
  ……….நேரத்தில் நல்லநேரம் கெட்டநேரம் உண்டென்போர்.!
  கூரரறிவு பெற்றிட கடுமுழைப்பில் கவனம்வேண்டும்..
  ……….குறுகியநேரம் கிடைத்தால்கூட வீணடித்தல் கூடாதாம்.!
  சீரழியுமிச் சமுதாயத்தில் நாட்டமிலா நிலைவேண்டும்..
  ……….சிறுபருவத்திலேயே சீராக வாழ்வுநெறி கற்கவேண்டும்.!
  ஈரடிப்புலவன் வள்ளுவன் ஆயிரம்வருடம் முன்னமே..
  ……….இடித்துரைத்தான்!இளமையில் கல்லென எழுதினான்.!

  வானில் எழிலாயுதிக்கின்ற விரிகதிரும் வெண்ணிலவும்..
  ……….வருவதற் கொருநாளும் நேரம்பார்க்க நினைவதில்லை.!
  தேனீக்கள் மலர்நாடிச் செல்லத்தகுந்த நேரமெதுவென..
  ……….தெரிந்தா செல்கிறது! சிந்தையிலிது உதிக்கவேண்டும்.!
  நானிலத்தில் ஓடும்நதியெலாம் நிலம்செழிக்க உதவும்..
  ……….நேரம்பாரா நலமொன்றேயதன் இயற்கை விதியாகும்.!
  இனிப்புடன் கசப்பும் வாழ்வில் வருவதியற்கையப்பா..
  ……….இனியாவது நேரத்தின்மீது பழிபோடாக் கடமையாற்று.!

  நேரமில்லை நேரமில்லையெனவே புலம்புவார் பலரும்..
  ……….நேரம்குறித்த கவலையெலாம் அவரிடம் இல்லையே.!
  நேரமதைப் பகுத்து நித்தம்செயும் செயல்களினாலதை..
  ……….வகுத்தெடுத்தால் நேரமென்பது நிறையவே கிடைக்கும்.!
  பாரஞ்சுமக்கும் மாடும் நேரமறிந்து செயல்படும்போது..
  ……….பகுத்தறிவாளருக்கோ இன்னும் ஏனோ புரியவில்லை.!
  சோரமில்லாது வாழ்வில் ஏற்றம்பெற வேண்டுமெனில்..
  ……….சோம்பல் விடுத்துநேரம் கூட்டிக்கழித்து வாழப்பழகு.!

 • சொல்லின் செல்வி wrote on 11 November, 2017, 23:39

  நீயும் நானும்
  —————

  இரவுக்கும் பகலுக்கும் மத்தியில் உன்னோட்டம்
  பிறப்பும் இறப்புக்கும் மத்தியில் என்னோட்டம்.
  சிலர் சில நேரங்களில்
  நல்லநேரமென வாழ்த்துவார்கள்.
  உன்னை.
  மகராசி என வாழ்த்துவார்கள்
  என்னை.

  பலர் பல நேரங்களில்
  ராகு காலம் எமகண்டமென
  வசைப்பாடுவார்கள் உன்னை

  வாழாவெட்டி, விதவை மலடி என
  வசைப்பாடுவார்கள் என்னை.

  காலதேவனாகிய நீ
  ஒருவருடைய
  வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாம்,

  மருமகளாகிய நான்
  புகுந்தவீட்டில்
  நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணமாம்.

  உனக்குள் இருப்பது
  டிக்டிக் சத்தம்.
  எனக்குள் இருப்பது
  லப்டப் சத்தம்..

  இந்த மானுடம் இப்படித்தான்
  தன் குறைகளை களையாது
  காலம் உனை குற்றஞ்சாட்டும்
  பகுத்தறிவற்று திட்டி தீர்க்கும்
  பெண் சமூகம் எங்களையும்
  கலாச்சார வேலியிட்டு நாசப்படுத்தும்..

  ஆனாலும், கடிகாரத் தோழியே..!
  வசைப்பாடுவதாலும் வாழ்த்துவதாலும்
  நம் ஒட்டதை நிறுத்தமுடியாது
  எதிர்காலம் என்று ஒன்று உண்டு
  எவருக்கும் அஞ்சாத மனம் உண்டு.

  -சொல்லின் செல்வி

 • லீலா wrote on 11 November, 2017, 23:46

  பயணம் :

  காலக் கடிகாரத்தின்
  முட்களின் சுழற்சியில்
  ஒடிக்கொண்டும்
  உழைத்துக்கொண்டும்
  இருக்கும் நாம்,
  நம்மை வருத்தி
  சுயத்தை இழந்து
  நட்பை இழந்து
  நேரத்தைக் கடத்தி
  ஒய்ந்து.. களைத்து
  நிறைவில்
  மரணத்தின் விளிம்பில்
  கேள்விகுறியாகவே பயணிக்கிறது.
  நட்பு…
  காதல்…
  வாழ்க்கை..
  இயற்கை..
  செயற்கை
  கடவுள்.. மானுடமென..யாவும்.


  -லீலா.

 • சொல்லின் செல்வி wrote on 11 November, 2017, 23:51

  கடிக்காரத் தோழி
  —————

  இரவுக்கும் பகலுக்கும் மத்தியில் உன்னோட்டம்
  பிறப்பும் இறப்புக்கும் மத்தியில் என்னோட்டம்.
  சிலர் சில நேரங்களில்
  நல்லநேரமென வாழ்த்துவார்கள்.
  உன்னை.
  மகராசி என வாழ்த்துவார்கள்
  என்னை.

  பலர் பல நேரங்களில்
  ராகு காலம் எமகண்டமென
  வசைப்பாடுவார்கள் உன்னை

  வாழாவெட்டி, விதவை மலடி என
  வசைப்பாடுவார்கள் என்னை.

  காலதேவனாகிய நீ
  ஒருவருடைய
  வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாம்,

  மருமகளாகிய நான்
  புகுந்தவீட்டில்
  நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணமாம்.

  உனக்குள் இருப்பது
  டிக்டிக் சத்தம்.
  எனக்குள் இருப்பது
  லப்டப் சத்தம்..

  இந்த மானுடம் இப்படித்தான்
  தன் குறைகளை களையாது
  காலம் உனை குற்றஞ்சாட்டும்
  பகுத்தறிவற்று திட்டி தீர்க்கும்
  பெண் சமூகம் எங்களையும்
  கலாச்சார வேலியிட்டு நாசப்படுத்தும்..

  ஆனாலும், கடிகாரத் தோழியே..!
  வசைப்பாடுவதாலும் வாழ்த்துவதாலும்
  நம் ஒட்டதை நிறுத்தமுடியாது
  எதிர்காலம் என்று ஒன்று உண்டு
  எவருக்கும் அஞ்சாத மனம் உண்டு.

  -சொல்லின் செல்வி

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.