“அவன், அது , ஆத்மா”

(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்
10.11.2017

அத்யாயம்: 55

கீழாம்பூர் S. சங்கர சுப்பிரமணியன்

அவன் 1990ஆம் வருடம் மகரசங்கராந்தி (பொங்கல்) அன்று குருநாதரைத் தரிசிக்கச் சிருங்கேரிக்குச் சென்றிருந்தான். குருவைத் தரிசித்து விட்டு வரும் பொழுது, அவனுக்கு முன்பே பழக்கமான, “Call of Sankara”  என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.எம்.சுப்பிரமணியன் என்பவர், “ஆசார்யாள் தமிழில் ஒரு மாதப் பத்திரிகையைக் கொண்டு வரவேண்டும் என்றும், அது முன்பு வெளிவந்து கொண்டிருந்த “சங்கர கிருபா”வைப் போன்று சிறந்த ஆன்மிகப் பத்திரிகையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புவதாகச் சொல்லி, தமிழிலும், ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்ட உனக்குத் தெரிந்த இளைஞரை என்னோடு தொடர்பு கொள்ளச் சொல்லு” என்று அவனிடம் கேட்டுக் கொண்டார். அவனும் முயற்சி செய்வதாக அவரிடம் உறுதி கூறினான்.

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்சென்னைக்குத் திரும்பிய இரண்டு தினங்களில் “நெல்லை கலாசார சங்கம்” என்ற அமைப்பு நடத்திய ஒரு கூட்டம் அண்ணா சாலையில் இருக்கும் மத்திய நூலகத்தின் மாடியில் உள்ள ஒரு அறையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் அருமையாக உரையாற்றியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரின் பெயர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் என்று அறிந்து கொண்டான். நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த இளைஞரிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு,” உங்களுக்குச் சொந்த ஊர் கீழாம்பூரா?” என்று கேட்க, அவரும் ஆமாம் என்று சொல்லி தன்னையும் அவனிடம் அறிமுகப் படுத்திக் கொன்டார். அந்த நேரத்தில், தான் சமீபத்தில் சிருங்கேரி சென்று வந்த விபரத்தையும், எம்.எம்.சுப்பிரமணியம் என்ற அன்பரின் கருத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்டான். உடனேயே,” சார்..எங்களுக்கும் சிருங்கேரி ஆசார்யாள்தான் குரு”.  தானே ஒரு பத்திரிகையைத்  துவக்க வேண்டும் என்ற விருப்பத்தில் “அம்மன் தரிசனம்” என்ற பெயரையும் பதிவுசெய்து வைத்திருப்பதாகவும், விரும்பினால் இந்தப் பெயரையே அவர்கள் பயன் படுத்திக் கொள்ளக் கொடுத்து விடுகிறேன்” என்றும் சொன்னார். மேலும் தமிழறிஞர் பி.சி.கணேசன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட “இந்து மதம் அழைக்கிறது” என்ற பத்திரிகைக்காக ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாசுவாமிகளைச் சந்தித்துத் தான் கண்ட நேர்காணலையும் அவனுக்குப்  படிக்கக் கொடுத்தார்.   அவன் அவரிடம் விடை பெரும் பொழுது,” நீங்கள் எம்.எம்.எஸ். அவர்களிடம் என்னுடைய விருப்பத்தைச் சொல்லுங்கள் என்றார்”. அவன் அன்று இரவே சிருங்கேரியில் இருக்கும் எம்.எம்.சுப்பிரமணியம் அவர்களுடன் தொலைபேசியில் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியனை சந்தித்த விபரங்களைச் சொல்லி, விபரமாகக் கடிதமும் எழுதி மறுநாள் அனுப்பி வைத்தான். அதன் பிறகு எம்.எம்.எஸ். அவர்களிடம் இருந்து பத்திரிகை தொடங்குவது பற்றி, கீழாம்பூருக்கும், அவனுக்கும் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து  இருந்து வந்தது.

அம்மன் தரிசனம்” மாத இதழ் பிறந்த கதை

ஒரு நல்ல நாளில் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனை சிருங்கேரிக்கு அழைத்து, “அம்மன் தரிசனம்”  என்ற பெயரிலேயே மாதப் பத்திரிகையைத் தொடங்குங்கள். ஸ்ரீ சாரதாம்பாள்நீங்களே ஆசிரியராக இருங்கள். உங்களுக்குப் பரிபூர்ண ஆசீர்வாதம்” என்று ஆசார்யாள் ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள், ஸ்ரீ சாரதாம்பாள் பதித்த ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், மந்திராக்ஷதையையும் கொடுத்து, சென்னைக்குச் சென்றதும் திரு. எஸ். விஸ்வநாதன் (என்பீல்ட் சேர்மன்) அவர்களைத் தொடர்பு கொண்டு மேற்கொண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று அனுப்பி வைத்ததாக அவனிடம் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் சொன்னார்.

ஒரு வாரம் சென்றதும் “கீழாம்பூர்” அவர்கள் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ” சார்… என்பீல்ட் விஸ்வநாத மாமாவைப் பார்க்கப் போகிறேன். நீங்களும் வாருங்கள்” என்று அழைத்தார். இருவரும் திருவான்மியூர், சிவசுந்தர் அவின்யூவில் இருக்கும்  திரு. என்பீல்ட் விஸ்வநாதன் அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் வரும் விபரமறிந்து வைத்திருந்த திரு. என்பீல்ட் விஸ்வநாதன், இருவரையும் அன்போடு வரவேற்று, கீழாம்பூரிடம் புதிய பத்திரிகை தொடர்பான விபரங்களைக் கேட்டுக் கொண்டார். ஒரு பத்திரிகையைத் துவங்க என்னென்ன தேவையோ அவைகளை மிகவும் தெளிவாக எழுதி ” என்பீல்ட் விஸ்வநாதன்” மாமா அவர்களிடம் கீழாம்பூர் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்துப் படித்து மிகுந்த மகிழ்ச்சியோடு, “எல்லாம் நல்ல படியாக நடக்கும். கவலைப் படவேண்டாம். “அம்மன் தரிசனம்” என்ற இந்த ஆன்மிகப் பத்திரிகையில் வரும் செய்திகள், கதைகள், கட்டுரைகள் எல்லாம் சிறப்பாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும். அதுதான் இந்தப் பத்திரிகையின் தர்மம். அலுவலகத்திற்கான இடத்தையும் உடனேயே பார்த்து வந்து சொல்லுங்கள்” என்றார்.

அம்மன் தரிசனம் இதழில் திரு. ஏ.என்.சிவராமன் அவர்களைக் கொண்டு “வேத மந்திரங்கள்” என்ற பெயரில் ஒரு தொடரை எழுதவும், பெரிய புராணத்தின் நாயன்மார்களின் கதையை, சிறுகதையாக எழுத எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களிடம் கேட்கவும் எண்ணம் இருக்கிறது என்று கீழாம்பூர் சொன்னவுடன், ” ரொம்ப சந்தோஷம். ஏ.என்.சிவராமனை உங்களுக்குப் பழக்கம் உண்டா என்றதும், “அவர் எனக்குத் தாத்தா முறை. அவர்தான் எனக்கு குரு” என்று கீழாம்பூர் சொன்னார். இந்த உரையாடலின் பொழுது என்பீல்ட் திரு. விஸ்வநாதன் அவர்களின் மனைவி திருமதி. கோமதி விஸ்வநாதனும் உடனிருந்தார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். “விஸ்வப்ரியா” என்ற பெயரில் கதைகளும், சிறுகதைகளும் எழுதியவர். விகடனில் முத்திரைக் கதைகளும் எழுதி இருக்கிறார். தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் நல்ல பாண்டித்தியம் கொண்ட மிகவும் பண்பான பெண்மணி.

மயிலாப்பூரில் எல்டாம்ஸ் சாலையில் ஒரு அறையை வாடகைக்குப் பார்த்தோம். மாத வாடகை ரூபாய் ஐயாயிரம். முன்தொகை ரூபாய் பத்தாயிரம் என்று பேசி இந்தத் தகவலை திரு. விஸ்வநாத மாமாவிடம் கீழாம்பூர் சொன்னார். இடம் போதுமானதாக இருந்தது. முதல் இதழுக்கான கதை, கட்டுரை, கவிதைகளைக் கீழாம்பூர் தேர்வு செய்து, மயிலாப்பூரில் இருந்த “முருகன் பிரிண்டிங் பிரஸ்” மூலம்    மிக அருமையாக அச்சாகி “அம்மன் தரிசனம்” பத்திரிக்கையின் முதல் இதழ் 1990ம் வருடம்   செப்டம்பர் மாதம் வெளியானது. அப்பொழுது அந்த மாத இதழின் விலை ரூபாய் ஐந்து.

இதழைச் செம்மையாகக் கொண்டு வருவதற்கு மிகவும் உதவியாக இருந்தவர்களில் முக்கியமானவர்கள் கவிஞர் முருகதாசன், பாரதி காவலர் கு. ராமமூர்த்தி, கங்கா ராமமூர்த்தி, பி.ஆர்.விஸ்வநாதன், ஓவியர் ஜகன், அலுவலக உதவியாளர் குணசேகரன் ஆகியோர். அவனும் அம்மன் தரிசனம் இதழில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வந்தான்.

கலைமகள் மாதப் பத்திரிக்கைக்கு ஆசிரியராக கீழாம்பூர் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அம்மன் தரிசனம் இதழுக்கு கவிஞர் முருகதாசன் ஆசிரியரானார். அவர் சிறந்த மரபுக் கவிஞர். நேர்மையாளர். அவர் ஆசிரியராக இருக்கும் பொழுதுதான், 2006ம் வருடம் ஸ்ரீ சங்கர ஜயந்தி மாத இதழில் “ஸ்ரீ ஆதி சங்கர அத்வைத காவியம்” என்ற பெயரில் ஸ்ரீ சங்கரரின் வாழ்க்கை வரலாற்றை, மாதவீய சங்கர விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு தொடராக எழுதி வந்தான். கவிஞர் முருகதாசனுக்குப் பிறகு ஜெ.எஸ்.பத்மநாபன் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். அம்மன் தரிசனம் வெள்ளிவிழா கண்டு மிகச் சிறப்பாக நடந்து வருவது குறித்தும், அது நூற்றாண்டைக் கடந்து பல்லாண்டுகள் ஆன்மிகப் பணியில் தொடர்ந்து வர அவனும், கீழாம்பூரும் குருவிடம் வேண்டிக் கொள்வதுண்டு. “அம்மன் தரிசனம்” அவர்களின் குழந்தை அல்லவா!கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் கலைமகள் பத்திரிக்கையில் நல்ல அறிஞர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிறார். சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கும் அவருக்கு மணிவிழா சென்ற வருட இறுதியில் நடைபெற்றது.

மஞ்சரி மாத இதழின் ஆசிரியர் இலட்சுமணன் (லெமன்) அவர்களை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுமுதல் “லெமன்” அவர்களுடன் அவனுக்குத் தொடர்பு இருந்து கொண்டு வந்தது. அவன் எழுதிய “மிருதங்கம்” என்ற சிறுகதையை வாங்கிப் பிரசுரித்தார். கலைஞன் பதிப்பகம் தொகுத்த இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் “மிருதங்கம்” சிறுகதையும் தேர்வாகி இடம்பெற்றது அவனுக்கு மகிழ்ச்சி.  இலட்சுமணன் (லெமன்) மஞ்சரியில் இருந்து ஓய்வு பெற்றதும் அதன் ஆசிரியராக செங்கோட்டை ஸ்ரீராம் பொறுப்பேற்றார். அவரையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தது கீழாம்பூர்தான். இன்றும் அவனுக்கு ஸ்ரீராம் நல்ல நண்பர்.

கீழாம்பூரின் குடும்பமே அவன் மீதும், குடும்பத்தார்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருப்பதும், அவனுக்கு நல்ல நண்பனாகக் கீழாம்பூர் கிடைத்ததும் குருவின் அருள்.

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்…

Share

About the Author

மீ. விசுவநாதன்

has written 257 stories on this site.

பணி : காட்பரி நிறுவனம் (ஓய்வு) தற்சமயத் தொழில் : கவிதை, சிறுகதை, குறுநாவல், கட்டுரைகள் எழுதுவது. இலக்கியம், ஆன்மீகச் சொற்பொழிவு. பள்ளி மாணவ, மாணவியர்களுக்குக் கதைகள் சொல்வது. சுபமங்களா, கணையாழி, தினமணிகதிர், தாமரை, அமுதசுரபி, கலைமகள், புதியபார்வை ஆகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. நூல்கள்: "இரவில் நனவில்" என்ற சிறுகதைத் தொகுதி, மனிதநேயம், "காலடி சங்கரரின் கவின்மிகு காவியம்" கவிதைத் தொகுதிகள். இரவில் நனவில் சிறுகதைக்கு கோயம்புத்தூர் "லில்லி தேவசிகாமணி" இலக்கிய விருது இரண்டாம் பரிசு கிடைத்தது.(வருடம் 1998): பாரதி கலைக்கழகம் 2003ம் ஆண்டு "கவிமாமணி" விருதளித்துக் கௌரவம் செய்தது.

Write a Comment [மறுமொழி இடவும்]


six × 6 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.