க. பாலசுப்பிரமணியன்

 மனம் படுத்தும் பாடு

திருமூலர்-1-3

இறைவனை நாடும் முயற்சியில் நாம் எவ்வளவுதான் ஈடுபட்டிருந்தாலும் நமது மனம் அடிக்கடி நம்முடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகி எங்கெங்கோ அலைபாய்கின்றது. இதைத்தான் நினைக்கவேண்டும், இதற்குள்தான் சிந்திக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளெல்லாம் அதற்கில்லை. தேவையற்ற சிந்தனைகளுக்கு அடிமையாகி நாம் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நம்முடைய முக்கிய நோக்கங்களும்  குறிக்கோள்களும் பாதை தவறிப் போகின்றன. இந்த அவலநிலைக்குத் தன்னைக் கொண்டுவிட்ட நெஞ்சை மாணிக்கவாசகர் எவ்வாறு சாடுகின்றார் தெரியுமா?

வாழ்கின்றாய் வாழாத  நெஞ்சமே வல்வினைப்பட்டு

ஆழ்கின்றாய், ஆழாமற் காப்பானை ஏத்தாதே

சூழ்கின்றாய் கேடு(உ )னக்குச் சொல்கின்றேன் பல்காலும்

வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே

இது போன்ற துயரத்தை அனுபவித்த பத்திரகிரியாரோ தன்னுடைய மனநிலையை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார் :

ஊரிறந்து பேரிறந்து வொளியிறந்து வெளியிறந்து

சீரிறந்து நின்றதிலே சேர்ந்தாயே நெஞ்சமே

 ஏன் நம் மனம் இவ்வாறெல்லாம் அலைகின்றது? இதைப் பற்றி திருமூலர் என்ன நினைக்கின்றார்?

எவ்வாறு ஒரு குயில் தன் முட்டையை காகத்தின் கூட்டினிலே விட்டுவிடவே காகம் அதைத்தன் முட்டையென நினைத்து அதையும் பேணுகின்றதோ அதுபோல் நாம் மாயையில் சிக்கி தேவையற்ற ஆசைகளையும் சேர்த்து காத்துக்கொண்டு வருகின்றோம்; பேணிக்கொண்டு வருகின்றோம். இதுதான் நம்முடைய சிற்றறிவின் வினைப்பாடு.

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக்கூட் டிட்டால்

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்

இயக்கில்லைப் போக்கில்லை யேனென்ப தில்லை

மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே 

 சிற்றறிவின் தூண்டுதலால் தன்னுடைய துயரத்தின் எல்லைக்கே போய்விட்ட பட்டினதோரோ தன்னுடைய குறையை இறைவனிடம் எப்படி எடுத்துச் சொல்லுகின்றார் தெரியுமா?

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே

மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிட்ட

தூதென்றெண் ணாமற் சுகமென்று நாடுமித் துர்புத்தியை

ஏதேன் றெடுத்துரைப் பேனிறை வாகச்சி யேகம்பனே

 இதற்கெல்லாம் ஒரே வழி – தம்மைத் தாமே அறிந்து கொள்ளுதல்தானே ? தன்னை அறிந்துகொண்டு தன்னுடைய வாழ்வின் நோக்கத்தை அறிந்துகொண்டு அறவாழ்வு வாழ்பவர்க்கு எப்படி இந்தத் துயரங்கள் வரும்? ‘நான் யார்?” என்ற  கேள்விதான் காலந்தொட்டு நம்முடைய தவத்தோர்களால் கேட்கப்பட்டு வந்த கேள்வி. திருமூலர் கூறுகின்றார்

தாம் அறிவார் அண்ணல்தான் பணிவார் அவர்

தாம் அறிவார் அறந்தாங்கி நின்றார் அவர்

தாம் அறிவார் சில தத்துவராவர்கள்

தாம் அறிவார்க்குத் தமர்ப்பர னாமே .

தன்னைப் பற்றி அறிந்துகொள்பவர்க்கு தன்னுள் மற்ற உயிரினங்களின் தரிசனம் கிடைக்கின்றது. அந்த எல்லா உயிரினங்களிலும் அந்த ஒரே இறைவன் ஆட்சி கொண்டிருப்பதும் புலனாகின்றது இந்த நல்ல உணர்வே அறம் சார்ந்த வாழ்விற்கு அடிப்படையாகவும் அமைகின்றது.

தன்னைப் பற்றிய அறிவு ஒரு மனிதனுக்கு கிடைக்கப்பெற்றால் அது ஒரு பெரிய விழிப்புணர்வு. அது சோதி வடிவில் நிற்கும் பரம்பொருளின் ஆனந்த தரிசனம். அந்த நிலையில் தன்னுள் இறைவனையும் இறைவனில் தன்னையும் காண்கின்ற ஒரு ஒன்றுபட்ட உன்னத நிலை   வெளிப்படுகின்றது.

மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்

தன்னுற்ற சோதி தலைவன் இலையிலி

பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்

என்னுற் றறிவனான் என்விழித்  தானே

என்று அந்த பேரின்பநிலையை விளக்குகின்றார் திருமூலர்.

இந்தப் பேரானந்த நிலைக்கு நம்மை எவ்வாறு ஆண்டவன் அழைத்துச் செல்லுகின்றான்? அவனுடைய பெருங்கருணைக்கு காரணம் என்ன? இந்த அருள் கிடைப்பதற்கு நாம் எவ்வாறு தகுதி உள்ளவராகின்றோம்? இந்த வினாக்களுக்கெல்லாம் பதில் கிடைப்பதில்லை. நம்மால்  இந்தக் கருணையைக் கண்டு வியக்கத்தான் முடியும். திருவாசகத்தில் மாணிக்க வாசகருக்கும் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை

மூத்தானே மூவாத முதலானே முடிவில்லா

ஒத்தானே பொருளானே உண்மையாய் இன்மையுமாய்ப்

பூத்தானே பூத்திங்குப் புரள்வேனைக் கருணையினால்

பேர்த்தேநீ ஆண்டவா றன்றேஎம் பெருமானே

சிற்றறிவின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி இப்பேரானந்த நிலைக்குச் செல்ல நாம்கூட முதல் படி எடுத்து வைக்கலாமே !

(தொடருவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *