நலம் .. நலமறிய ஆவல் (81)

நிர்மலா ராகவன்

கேள்விகள் ஏனோ?

நலம்

ஒருவர் கேட்கும் கேள்வியை வைத்தே அவரைப்பற்றிப் புரிந்துகொண்டு விடலாம்.

தாம் மற்றவரைவிட உயர்த்தி என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு எதையாவது கேட்டுவைப்பது சில அறிவிலிகளின் வழக்கம்.

கதை

நான் அசைவ உணவு சாப்பிடுவதில்லை என்று சொல்லக் கேட்டு, ஒருத்தி கேலியாகக் கேட்டாள், “அப்படியெல்லாம் உயிர் வாழ முடியுமா?”

அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று என்னால் விட்டுவிட முடியவில்லை. “என்னைப் பார்த்தால் இப்போதே செத்துவிடுகிறவள்போலவா இருக்கிறது?” என்று பதில் கேள்வி கேட்டேன்.

யாரோ சிரிக்க, அவளுக்கு அவமானமாகிவிட்டது. என்னை அவமானப்படுத்த நினைத்தவள் தானே பலியானாள்.

கதை

“உன் தந்தை இன்னும் குதிரைப் பந்தயத்துக்குப் போகிறாரா?” என்று ஓர் இளைஞன் இன்னொருவனைக் கேட்டான். பர் முன்னிலையில்.

குறிப்பிடப்பட்ட நபருக்கு அந்த பழக்கமே கிடையாது. அறிவாளியாக இருப்பினும், எதிர்பாராது வந்த கேள்வியால், மகனுடைய வாய் அடைத்துப்போயிற்று.

கேள்வி கேட்டவனுக்குப் பதில் வராது என்று தெரிந்துதான் இருந்தது. அவனுடைய நோக்கம் தன்னைவிட மேலான நிலையில் இருந்தவனைத் தாக்குவதுதானே! அவன் எண்ணம் கைகூட, இம்முறையைப் பிறர்மீதும் கையாள்வான்.

நம்மையே நாம் கேட்டுக்கொள்ளும் கேள்வி

நோயோ, உற்றவருக்கு மரணமோ சம்பவித்தால், நமக்குள் `ஏன்?’ என்ற கேள்வி எழுகிறது. உடனே பதில் கிடைக்காது. பொறுமையாக இருந்தால், பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதில் கிடைக்கக்கூடும்.

கதை

ஒரு பெண்ணுக்குத் திருமணம் தட்டிக்கொண்டே போயிற்று. ஒரு முறை, திருமணத்திற்கு முதல் நாள் நின்று போயிற்று – யாரோ அத்தை, `இந்தப் பெண் ரொம்ப ஒல்லியா இருக்கா. டி.பியா இருக்கும்!’ என்று சொன்னதால். கன்னியாகவே அப்பெண்மணி தொண்ணூறு வயதுக்குமேல் நோய்நொடி இல்லாமல் வாழ்ந்தாள்.

அவளுக்குக் கல்யாணமாகி, குழந்தைகள் பெற்றிருந்தால், தன் குடும்பம், குழந்தை என்று சுயநலமியாக ஆகியிருப்பாள். இப்போதோ, எவர் பெற்ற குழந்தையாக இருந்தாலும் பரிவும் பாசமுமாக நடத்த முடிந்தது.

இன்னொரு கதை

எனது சீன நண்பர் ஒருவர் இருமுறை திருமணம் புரிந்துகொண்டும், தனக்குக் குழந்தைகளே இல்லை என்று என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

“உங்கள் சகோதர சகோதரிகளின் குழந்தைகள் உங்களிடம் அன்புடன் இருப்பார்களே!” என்றேன்.

உற்சாகமடைந்து, “ஆமாம். அவர்களைப் பெற்றவர்களைவிட என்னிடம்தான் அவர்களுக்கு ஒட்டுதல்!” என்றார். `எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டு வருந்தியவருக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க கீழ்க்கண்ட கேள்விகளைப் பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள்:

1 அவன் எப்போதும் உன்னை மரியாதையாக நடத்துகிறானா?

2 உன் முன்னேற்றத்தில் பொறாமை கொள்ளாது, அக்கறை செலுத்துவானா?

3 பத்து வருடங்களுக்குப் பின்னரும் நீ அவனுடன் இருக்க விரும்புகிறாயா?

மனிதன் எப்போதும் மாற்றம் அடையாது இருப்பதில்லையே!

இங்குதான் கேள்வி அவசியமாகிறது: மேற்கண்ட கேள்விகள் எந்த அளவுக்குப் பலன் தரும்?

பொழுதைப் போக்க அநாவசியமான கேள்விகள் கேட்பர் சிலர்.

கடைத்தெருவில் பார்ப்பவரை, `கடைக்கு வந்திருக்கிறீர்களா?’ என்று கேட்பது உரையாடலை ஆரம்பிக்க ஒரு வழி.

இதையே நான் சற்று மாற்றிக் கேட்டேன், ஒரு முறை.

பேரங்காடியில் சந்தித்த என் மாணவியிடம், “ஊர் சுற்ற வந்திருக்கிறாயா?” என்று கேட்டேன். பள்ளி மாணவ மாணவிகள் வீட்டுக்குப் போகாது, கடைத்தெருக்களில் சுற்றி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தினசரியில் வரும்.

அவள் போலியாகக் கோபித்து, “ஆங்! சாமான் வாங்க வந்தேன்,” என்றாள்.

`இன்று உங்கள் வீட்டில் என்ன சமையல்?’ என்று வெளிநாட்டிலிருப்பவரைக் கேட்பதும் இந்த ரகம்தான். கேட்பவருக்குச் சமைப்பதிலும் உண்பதிலும் ஆர்வம் இருக்கலாம். ஆனால், எல்லாரும் அப்படியே இருப்பார்களா!

கேள்வி கேட்பது நன்மையா? அப்படியானால் ஏன்?

வாழ்வைப் புரிந்துகொள்ள கேள்விகள் அவசியம். நம்மைச்சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் பார்த்தவுடனே புரிந்துகொள்ள முடியாது. கேள்விகள் அவசியமாகின்றன.

ஒரு விஞ்ஞானிக்குள், `ஏன் இப்படி?’ என்ற கேள்வி எழுந்தால்தான் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க முடிகிறது. பதிலையும் அவரே தயாரித்துக்கொள்ளவேண்டிய நிலை. அது தவறு என்று புரிந்ததும், `ஒரு வேளை, இப்படி இருக்குமோ?’ என்று வேறு கோணத்தில் பிரச்னையை அணுகுகிறார். அவருக்குத் தோன்றிய பதிலால் பிறருக்கு நன்மை விளைகிறது.

படைப்பாளிகள், `இப்படியும் இருக்கலாமோ?’ என்று யோசிப்பதால் வித விதமான புனைக்கதைகள் கிடைக்கின்றன.

மூடநம்பிக்கைகளை ஒழிக்க

சிறு வயதில் பயமுறுத்தி வைத்திருந்ததை நம்பி, எப்போதுமே ஒரு செயலுக்குப் பயப்படுவது சரிதானா?

`பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்’.

பொய் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஆனால், வீணாக தெய்வத்தை இழுப்பானேன்?

உடனுக்குடனே தண்டனை அளித்தால், கடவுள் எப்படி கருணை மிக்கவர் ஆவார்?

அவருக்கும் மானிடனுக்கும் என்ன வித்தியாசம்?

கடவுள், மதம் என்ற பெயரால் மனிதனின் சிந்திக்கும் திறனை, அத்திறனால் கேள்வி கேட்கும் பழக்கத்தை ஒடுக்கி விடுகிறார்கள் சிலர்.

எனக்கு ஒரு பெண் விரிவுரையாளர் எழுதியது: `நீ நிறைய கேள்விகள் கேட்கிறாய். எல்லாவற்றையும் கடவுள் கொடுத்தது என்று ஏற்றுக்கொள்!’

கடவுள் பெயரைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டு, மனிதன் விதித்த நடைமுறைகளை கேள்வி கேட்காது ஏற்க வேண்டுமா?

தொடருவோம்

Share

About the Author

நிர்மலா ராகவன்

has written 230 stories on this site.

எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 1 = four


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.