கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 7 – 12

1

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 7

         தஞ்சைப்பெரியகோயிலின் அதிட்டானப்பகுதியில் அமைந்துள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் எழுத்துகளை நாம் கற்றுவருகிறோம். அவ்வெழுத்துகளுக்கு முந்தைய காலக் கல்வெட்டு எழுத்துகளும் பிந்தைய காலக் கல்வெட்டு எழுத்துகளும் பலவாறு மாற்றம் கொண்டவை. அம்மாற்றங்களோடு அவ்வெழுத்துகளையும் இனம் கண்டு படிக்க இங்கே பயிற்சி தொடங்குகிறது.

         சோழர்களுக்கு முன் தமிழகதிலிருந்த பல்லவர் காலத்திலேயே தமிழ் எழுத்துகள் கல்வெட்டுகளில் வழக்கத்துக்கு வந்தன என்றாலும் குறைவான எண்னிக்கையிலேயே அவை கிடைத்துள்ளன. பல்லவர்கள் வடநாட்டுப் பின்புலத்திலிருந்து வந்தவராதலால் பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளையே பயன்பாட்டுக்குட்படுத்தினர். பிறகு தமிழும் தமிழ் எழுத்தும் பயன்பாட்டுக்கு வந்தன. தமிழகத்தில் கிடைத்த காலத்தால் முந்திய தமிழ் எழுத்து பல்லவ அரசன் சிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்த பள்ளன்கோயில் செப்பேட்டில் உள்ளது. காலம் கி.பி. 575-600. அச்செப்பேட்டிலிருந்து சில வரிகள் இங்கு தரப்பட்டுள்ளன. (இரண்டு ஒளிப்படங்கள்).

முதல் ஒளிப்படம்:

1kal

இப்படத்தின் பாடம் கீழ்வருமாறு:

1 ….. விடுதகவென்று   நாட்டார்க்குத்திருமுக………..

2 … ந் திருமுகங்கண்டு தொழுது தலைக்கு வைத்து படா

3 கை நட(ந்)து கல்லுங்கள்ளியுநாட்டி நாட்டார் விடுத்த

4 அறையோலைப்படிக்கெல்லை கீழ்ப்(பா)

5 லெல்லை ஏந்தலேரியின் கீழைக்கடற்றி

இரண்டாம் ஒளிப்படம்:

2kal

இப்படத்தின் பாடம் கீழ்வருமாறு:

1 ந் மேற்கு மோமைக்கொல்லை எல்லை இன்னு

2 ம் தென்பாலெல்லை வேள்வடுகன் கேணியி

3 ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபா

நாம் கற்ற எழுத்துவடிவங்களிலிருந்து சற்று மாற்றம் பெற்ற எழுத்துகளைப்பற்றிய

குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றில் கவனம் தேவை.

pallankooyil thiruththam-3

pallankooyil thiruththam-4

பின்னிணைப்பு : (3-7-2015 அன்று இணைத்தது.)

ஒரு ஒளிப்படமும் சில குறிப்புகளும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன.

5kal

 பள்ளன்கோயில் செப்பேடு,  பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும் சிற்றூரைத் தந்த செய்தியைக் கூறுகிறது.

மேலே நாம் பார்க்கும் செப்பேட்டுப் பாடத்தில் வரும் சில தொடர்களுக்கு விளக்கம் வருமாறு :

பள்ளிச்சந்தம் – ஜைன, பௌத்த மதத்தவர்க்கு அளிக்கப்பெற்ற இறையிலி (வரி நீக்கம் பெற்ற) நிலம்.

குரவர் – சமண ஆச்சாரியர்.

நாட்டார் – நாட்டுச்சபையார்

திருமுகம் – அரசனின் ஆணை எழுதப்பெற்ற ஓலை.

தொழுது தலைக்கு வைத்து – நாட்டார் அரசனின் திருமுகம் வரக்கண்டு தொழுது தலைமேல் வைத்துக்கொண்டனர்.

படாகை – பிடாகை=உட்கிடை ஊர்.

படாகை நடந்து  கல்லுங்கள்ளியு(ம்) நாட்டி –  பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து  எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நட்டனர். சிவன்கோயிலாக இருப்பின் சூலம் பொறித்த கற்களும், திருமால்கோயிலாக இருப்பின் சக்கரம் (ஆழி) பொறித்த கற்களும் நடுவது மரபு.

விடுத்த அறையோலை – கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவித்தனர்.

கிழக்கு எல்லை – ஏந்தலேரி என்னும் ஏரியின் கீழைக்கடறு; ஒமைக்கொல்லை. (கடறு=காடு)

தெற்கு எல்லை – வேள்வடுகன் கேணி.

துணை நின்ற நூல் : புலவர் வே.மகாதேவன் எழுதிய “கல்வெட்டுக்கள் வினா-விடை விளக்கம்”.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

நிலக்கொடை அளித்தலில் அரசன் ஆணையிடுவது தொடங்கி, பின்பற்றப்பட்ட நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியன பற்றி அறிகிறோம்.

தமிழகத்தில் இன்றும் ஆங்காங்கே சூலக்கற்களும், ஆழிக்கற்களும் தொல்லியல் சிதறல்களாகக் காணக்கிடைகின்றன.

சமணப்பெரியாரைக் குரவர் என  அக்காலத்தே அழைதுள்ளனர் என்பதை அறிகிறோம். இவ்வழக்கத்தைப் பின்பற்றியே, பின்னாளில் சைவப்பெரியாரையும் குரவர் என அழைக்கும் வழக்கு வந்திருக்கக்கூடும். திரு.வி.க. பற்றிய செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. சிலப்பதிகாரத்தில் சமணப்பெரியோராக வரும் கௌந்தி அடிகள் பெயரை அடியொற்றித் திரு.வி.க. அவர்கள், காந்திப்பெரியவரைக் “காந்தியடிகள்” என அழைத்து ”அடிகள்” என்னும் சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார் எனக்கேள்வி.

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  8

பல்லவர் காலக் கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சென்ற வகுப்பில் பல்லவ அரசன் சிம்மவர்மனின் பள்ளன்கோயில் செப்பேட்டின் எழுத்துகளைப்படித்தோம். அச்செப்பேடு தமிழ் வரிவடிவத்தைக் கொண்ட முதல் செப்பேடு என்று கருதப்பட்டது. ஆனால் அதில் காணப்படும் வரிவடிவத்தின் அடிப்படையில் அச்செப்பேடு கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அந்த வகையில், முதலாம் மகேந்திரனின் வல்லம் கல்வெட்டே தமிழ் வரிவடிவம் தாங்கி நிற்கும் முதல் கல்வெட்டு எனலாம். அந்த வல்லம் கல்வெட்டைத் தற்போது பார்க்கலாம். கல்வெட்டின் மூலப்படியின் படத்தையும், (கையால் எழுதிய) பார்வைப்படியின் படத்தையும் கீழே தந்துள்ளேன்.

மூலப்படி :

6kal

பார்வைப்படி :

8kal

         கல்வெட்டின் மூலப்பாடம் கிழே தரப்பட்டுள்ளது:

கல்வெட்டின் பாடம்:

              சத்துரும் மல்லன் குணபரன்

              மயேந்திரப்போத்தரெசரு அடியான்

              வயந்தப்பிரிஅரெசரு மகன் கந்தசேன

              ன் செயிவித்த தேவகுலம்


குறிப்பு : சத்துரு(ம்)மல்லன், குணபரன் – மகேந்திரவர்மனின் விருதுப்பெயர்கள்.

        போத்தரசர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடர் பல்லவ அரசர்களை                    மட்டுமே குறிக்கும் எனக்கருதலாம். தேவகுலம் என்னும் சொல்

         கோயிலைக்குறிக்கும்.

         வல்லம் கல்வெட்டின் எழுத்துகளை ஊன்றிப்பார்க்கும்போது, சிம்மவர்மனின் செப்பேட்டில் உள்ள எழுத்துகள் சற்றுப் பிற்காலத்தவை என்பது புலப்படும். ஏனெனில், நாம் அடிப்படை எழுத்தாகப் பயின்ற தஞ்சைப்பெரிய கோயில் எழுத்துகளை செப்பேட்டெழுத்துகள் பெரிதும் ஒத்திருப்பதைக் காணலாம். வல்லம் கல்வெட்டு எழுத்துகள் தமிழ் வரிவடிவத்தின் பழைய வடிவம் என்பது அவை தமிழ் பிராமி எழுத்தின் வடிவமைப்பை உள்ளடக்கி இருப்பதால் அறியலாம். எப்படி என்பதைக்கீழே காட்டியுள்ளேன்.

vallam kalvettu- 9

         அடுத்து, நாம் பயின்றுவரும் அடிப்படை எழுத்துகளுக்கும் வல்லம் எழுத்துகளுக்கும் இடையே உள்ள மாற்றத்தையும் கீழே கொடுத்துள்ளேன்.

vallam kalvettu-10

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  9

                  பல்லவர்காலத் தமிழ் எழுத்துகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டைச் சென்ற பாடத்தில் பார்த்தோம். இங்கு, மாமல்லன் நரசிம்மவர்மனின் ஒரேயொரு தமிழ்க்கல்வெட்டெனக் கருதப்படும் திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டைக் காண்போம். கல்வெட்டு திருக்கழுக்குன்ற மலைமேல் உள்ள குகைக்கோயிலில் உள்ளது. இதன் காலம் கி.பி. 630 – 668. கல்வெட்டின் பாடம் கீழே கொடுக்கபட்டிருப்பினும் கல்வெட்டை நேரடியாகப் படித்துப் பயிற்சி செய்க.

கல்வெட்டின் பார்வைப்படி (Eye copy) :

12

கல்வெட்டின் பாடம் :

ஸ்ரீ திருக்கழுக்குன்றத்து பெருமான்

னடிகளுக்கு களத்தூர் கோட்டத்

து …………………… திருக்கழுக்குன்ற

த்து ஸ்ரீமலை மேல்

(மூ)லட்டானத்து பெருமான்

னடிகளுக்கு வழிபாட்டுப்புறமா

க வாதாபி கொண்ட நரசிங்கப்

போத்த(ர)சர் வைத்தது.

குறிப்பு :

  • இறைவன் பெயர் திருக்கழுக்குன்றத்துப் பெருமானடிகள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
  • மூலட்டானம் என்பது கருவறை ஸ்ரீகோயிலைக்குறிக்கும்.
  • புறம் என்பது கோயில் பணிகளுக்காக விடப்பட்ட நிவந்தம் அல்லது கொடையைக் குறிக்கும். பணிகளுக்கேற்பப் பெயரமையும். இங்கே கோயிலின் வழிபாட்டுக்காக (பூசை)க் கொடை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வழிபாட்டுப்புறம். அமுதுபடிக்காக (நைவேத்தியம்) எனில் அமுதுபடிப்புறம் என்றும், விளக்குக்காக எனில் விளக்குப்புறம் என்றும், மடைப்பள்ளிக்காக எனில் மடைப்புறம் என்றும் பலவாறு வழங்கப்படும்.
  • மகேந்திரவர்மனின் வல்லம் கல்வெட்டில் கண்டவாறே இங்கும் ”போத்தரசர்” என்னும் பெயர் வந்துள்ளதை நோக்குக.
  • கோட்டம் என்னும் ஆட்சிப்பிரிவு பல்லவர் காலத்திலேயே இருந்துள்ளது கருதத்தக்கது.
  • நரசிம்ம வர்மனின் பெயர் இக்கல்வெட்டில் ”நரசிங்க” என வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பல்லவர் கல்வெட்டுகளில் “சிம்ம” என்னும் சொல்லுக்குப் பதில்  “சிங்க” என்னும் சொல்லே பயின்றுவருகிறது எனலாம்.
  • ஸ்ரீ என்பது கிரந்த எழுத்து.

 

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் –  10

பல்லவர்க்கு அடுத்து சோழர்களின் கல்வெட்டுகளில், நாம் அடிப்படையாகப் பயின்றுவரும் முதலாம் இராசராசனின் தஞ்சைக்கல்வெட்டுகளுக்கு முற்பட்ட எழுத்துகளின் வடிவ வேறுபாட்டை இரு கல்வெட்டுகளின் வாயிலாகப் பார்ப்போம். முதலாவது கல்வெட்டு கி.பி. 895-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. முதலாம் ஆதித்தனின் தக்கோலம் கல்வெட்டு. முதலாம் ஆதித்தன், பிற்காலச் சோழப்பேரரசுக்கு அடித்தளமிட்ட விசயாலயனின் மகனாவான். இவனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 871-907. கல்வெட்டின் பார்வைப்படி கிழே தரப்பட்டுள்ளது.

         பல்லவ அரசன் அபராசிதனின் கீழ் ஒரு குறுநில மன்னனாக இருந்த விசயாலயன், பல்லவருக்கும், வரகுணபாண்டியனுக்கும் இடையே நடைபெற்றபோரின்போது பல்லவர் பக்கம் நின்று பல்ல்வனுக்கு வெற்றியைத் தேடித்தந்ததோடல்லாமல், முத்தரையரைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றினான். விசயாலயன் மகனான முதலாம் ஆதித்தன் காலத்திலும் பல்லவர்-வரகுணபாண்டியனிடையே நடந்த போரில், ஆதித்தன் பல்லவர் பக்கம் நின்று வெற்றி ஈட்டித்தந்தான். பல்லவன் சில ஊர்களை ஆத்தித்தனுக்குத் தந்தான். ஆதித்தன் சோழநாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்தில், பல்லவ அரசன் அபராசிதனையே எதிர்த்துப்போரிட்டு வென்று பல்லவரின் தொண்டை நாட்டைக்கைப்பற்றி, சோழநாட்டோடு இணைத்துக்கொண்டான். விசயாலயன் காலத்திலும், ஆதித்தன் காலத்திலும் சோழரோடு துணை நின்றவர்கள் கங்கமன்னர்கள். ஆதித்தனின் கீழ் குறு நிலமன்னராயிருந்த கங்க மன்னன் பிருதிவிபதி, தக்கோலம் கோயிலுக்கு ஆனிமாதம் சூரிய கிரகணத்தன்று 317 கழஞ்சு எடையுள்ள ஒரு வெள்ளிக்கெண்டிகையை அளித்தான். இந்தச் செய்தியைத் தாங்கிய கல்வெட்டுதான் நாம் இங்கே காண்பது.

முதலாம் ஆதித்தனின் தக்கோல கல்வெட்டு-பார்வைப்படி

13

கல்வெட்டின் பாடம்:

(ஸ்வஸ்திஸ்ரீ) கோவிராசகே

சரி பன்பக்கு யாண்டு

இருபத்து நாலாவது ஆ

னித்தலைப்பிறையால்

தீண்டின (ஸூர்யக்3ரஹணத்)

தி நான்று திருவூறல் மாதேவ

ர்க்கு மாரமரையர் மகனார்

பிரிதிபதியார் குடுத்த வெ

ள்ளிக்கெண்டி நிரை முன்நூ

ற்று ஒருபத்தேழு கழஞ்சு

இது பன்மா(ஹேச்0வரர் ரக்‌ஷை)

சில குறிப்புகள்:

  • தலைப்பிறை –  வளர்பிறையில் முதல் நாள்
  • திருவூறல் – தக்கோலத்தின் பழம்பெயர் (கல்வெட்டில் உள்ளபடி)

                தக்கோலம் தற்போது அரக்கோணத்துக்கருகில் உள்ள ஊர்.

  • பிரிதிபதி – கங்க அரசன் பிருதிவிபதி
  • கெண்டி – மூக்குள்ள செம்பு

 இன்னொரு கல்வெட்டு அடுத்த பாடத்தில்.

தக்கோலம் கல்வெட்டின் பார்வைப்படியை எழுத உதவியது : முனைவர் சூ. சுவாமிநாதன்

அவர்களின் “கல்லெழுத்தில் காலச்சுவடுகள்” நூலில் உள்ள ஒளிப்படம்.

அது இங்கே

14

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  11

         சென்ற வகுப்பில், சோழப்பேரரசுக்கு அடித்தளமிட்ட விசயாலயனின் மகனான முதலாம் ஆதித்தனின் தக்கோலத்துக் கல்வெட்டைப் (கி.பி.895) பார்த்தோம். இங்கு, ஆதித்தனின் மகனான முதலாம் பராந்தகனின் இரு கல்வெட்டுகளைப் பார்ப்போம். பராந்தகனின் காலம் கி.பி. 907-955. இரு கல்வெட்டுகளுமே திருநாவலூர் கல்வெட்டுகள். முதல் கல்வெட்டின் பார்வைப்படியின் படம் கீழே:

15

இப்பொழுது கல்வெட்டின் பாடத்தையும் எழுத்துகளின் வடிவ மாறுபாடுகளையும் பார்ப்போம்.

கல்வெட்டின் பாடம்

ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்

ட கோப்பரகேசரி பன்மற்கு

யாண்(டு..) ஆவது திருநாவ

லூர் வியாபாரி முருகன் விச்சி

யன் அட்டுவித்த கூத்தப்

பெருமாளுக்கு வைத்த விளக்கு ஒன்றிற்

க்கு வைத்த ஆடு தொண்ணூ(று) இவை

(பன்) மாஹேச்0வரர் (ர) க்‌ஷை

16

இரண்டாம் கல்வெட்டின் பார்வைப்படியின் படம் கீழே :

17

இப்பொழுது கல்வெட்டின் பாடத்தையும் எழுத்துகளின் வடிவ மாறுபாடுகளையும் பார்ப்போம்.

கல்வெட்டின் பாடம்

ஸ்வஸ்தி(ஸ்ரீ) … மதிரைகொண்ட

கோப்பரகேசரி பன்ம(ர்)க்கி(யா)

ண்டு … ஆவது திருநாவ

லூர் திருக்கொண்டீச்0வர ..

ம் மாகிய ராஜாதித்த கு(..) ர க

த்துக்கு ராஜாதித்த மலையா……

ன் பரிவாரத்து சேவகன் ஒருக்கு

 …………….ழ சேந்தகுமரன்

வைத்த நொந்தா விளக்கு ஒன்று

க்கு வைத்த ஆடு நூறு சாவா

மூவாப்பேர்ராடு இவை ப

ன்மாஹேச்0வரர் ரக்‌ஷை

 கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 12

         சற்றே கால இடைவெளிவிட்டு  மீண்டும் கல்வெட்டு எழுத்துகள் கற்போம்

பாடம் தொடர்கிறது. இராசராசனின் தஞ்சைக்கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை அடிப்படையாக வைத்தே நாம் எழுத்துகளைக் கற்றோம். அவனுடைய காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளைப்

பார்த்துக்கொண்டிருந்தோம். முதலாம் பராந்தகனின் இரு கல்வெட்டுகளைச்

சென்ற வகுப்பில் பார்த்தோம். (காலம் கி.பி. 907-955). இப்போது  உத்தம சோழனின் காலத்துக் கல்வெட்டு ஒன்றையும் (கி.பி. 976 ) மற்றும் அதே காலத்தை ஒட்டிய 10-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றையும் பார்ப்போம்.

1             மயிலாடுதுறை வட்டம்-திருவேள்விக்குடி மணவாளேசுவரர் கோயில்

               கல்வெட்டு.   அரசன் :உத்தம சோழன்.  காலம் : கி.பி. 976.

19

கல்வெட்டின் பாடம் :

ஸ்வஸ்திஸ்ரீ  யாண்டு ஆறாவது திருவே

ழ்விக்குடி ஆழ்வார்க்கு உடையபிராட்

டியார் பிராந்தகன் மாதேவடிகளாரா

ன செம்பியந் மஹாதேவியார் குடு(த்)

த வெள்ளிக்கலைசம் ஒந்று இது நி

றை நூற்று நாற்ப்பத்து ஒரு கழை(ஞ்)

சு இது பந்மாஹேச்வரர் ர(க்‌ஷை)

குறிப்புகள் :

 வரி 1   ஸ்வஸ்திஸ்ரீ –  கிரந்தம்

வரி  3   தே –  கிரந்தம்

வரி 4   மஹாதே  –  கிரந்தம்

வரி 7  மாஹேச்வரர் ர –  கிரந்தம்

20

2           தஞ்சை வட்டம் கருந்திட்டைக்குடி வசிஷ்டேஸ்வரர் கோயில்

             கல்வெட்டு. காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு.

கல்வெட்டின் பாடம் :

ஸ்வஸ்திஸ்ரீ  இப்படைஇ

ல் இருபத்து இ

ரண்டு கல்லுகி(ழ)

(வந்) ஆனை காவன் தா

யார்ருக்கும் த(ன)

க்கும் இருபத்

தொன்று காசுபெற்றி

குறிப்பு :

வரி 1   ஸ்வஸ்திஸ்ரீ – கிரந்தம்

22

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 7 – 12

  1. வல்லம் கல்வெட்டைப் பார்த்தால் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி வைக்கும் வழக்கம் பல்லவர் காலத்தில் வழக்கில் இருந்து, அதன் பின்னர் பிற்காலச் சோழர் காலத்துக்கு முன் எப்போதோ கைவிடப் பட்டதாகத் தெரிகிறது. சரியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *