படக்கவிதைப் போட்டி (135)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

23573984_1478741622180032_1160826125_n
சத்யா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (18.11.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

11 Comments on “படக்கவிதைப் போட்டி (135)”

 • சியாமளா ராஜசேகர் wrote on 14 November, 2017, 0:12

  குடும்பமுடன் கூடிவாழும் குரங்கினத்தைக் காணீர்
  ***கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்துப் புலவோரே பாடீர் !
  தடுமாற்ற மில்லாமல் கிளைகளிலே தாவும்
  ***தன்னோடு குட்டியையும் சுமந்துகொண்டு போகும் !
  படுவேக மாகவது மலைமீதி லேறும்
  ***பழந்தின்று பசியாறிக் களிப்பினிலே ஆடும் !
  வெடுக்கென்று கைப்பொருளைப் பறித்துக்கொண் டோடும்
  ***விரட்டிவிட்டால் முறைத்தவண்ணம் பார்த்திருக்கும் நின்றே !!

 • ரா. பார்த்த சாரதி
  R.Parthasarathy wrote on 16 November, 2017, 10:59

  மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு என்றான்

  சிந்திக்கும் ஆற்றலை குரங்கிற்கு கடவுள் கொடுக்க மறந்தான்

  அவைகளுக்கிடையே ஒற்றுமை எனும் பண்பை கண்டான்

  பிறரிடம் பறித்து கொண்டு தின்னும் குணத்தையும் கண்டான்

  மலையும், மரக்கிளை அதன் குடியிருப்பாக கொள்ளும்

  இடம்விட்டு இடம் மாறி உணவிற்காக செல்லும்

  குட்டியை தன் வயிற்றில் விட்டுவிடாமல் சுமந்து செல்லும்

  தானும் உண்டு, தன்னை சூழ்ந்த தன் இனத்திற்கு கொடுக்கும்.!

  மனித மனம் ஓரூ குரங்குதான், அது அங்கும்மிங்கும் தாவும்

  மனம் சொன்னபடி மனிதனின் உடல் கேட்காது என தெரியும்

  இருந்தும் கடல் அலைபோல் மனம், அலைபோலப் பாயும்

  மன இறுக்கத்தால் உடல் சோர்வும், நோயும் வந்தடையும் !

  குரங்காட்டி, குரங்கினை தன் சொல்படி ஆட்டுவிக்கின்றான்

  அரை வயறு நிரப்புவதற்காக அவன் சொல்படி ஆடுகின்றதே

  படிக்காத முதலாளி முன் படித்தவனின் அறிவும் செல்லாதே

  குழை கும்பிடு போட்டு காலத்தை தள்ள நினைக்குதே !

  பகுத்துண்டு எனும் பண்பினை அதனிடம் கற்கவேண்டும்

  குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றது ஆதிகாலம்

  மனிதன் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்யும்

  பேசும் ஆற்றல் இல்லாத பிராணியாகவே கருதப்படும் !

  குரங்கே, மூன்று குட்டிகளானாலும் அன்புடன் வளர்க்கிறாய்

  ஒன்று உன் முதுகின் பின்னும்,சிறிய குட்டியை அனைத்தும்

  மற்றொன்றை தங்கப்பனிடம் பாதுகாப்பாக அமர்த்தியும்

  உண்ண என்ன கிடைக்கும் என நினைத்து கூடி அமர்ந்துளாயா !

  .

  ரா.பார்த்தசாரதி .

 • கொ.வை.அரங்கநாதன் wrote on 16 November, 2017, 12:04

  கோடையிலே இளைப்பாற
  கூடு ஒன்று எங்களுக்கில்லை
  கொட்டு மழை பெய்தால்
  நனைவதைத் தவிர வழியில்லை

  காட்டிலே வாழ்ந்திருந்தால்
  கஷ்டமின்றி இருந்திருப்போம்
  நாட்டுக்குள் வந்ததால்
  நாங்கள் படும் துயரம் கொஞ்சமல்ல

  சுவற்றின்மேலே நாங்கள்
  சும்மாவே உட்கார்ந்திருந்தாலும்
  கல்லால் அடித்துவிட்டு
  கைகொட்டி சிரிக்கிறீர்கள்

  குழந்தை குட்டியுடன் நாங்கள்
  குடும்பமாய் திரியும்போதும்
  வேடிக்கையும் பார்த்துவிட்டு
  விரட்டவும் செய்கிறீர்கள்

  பூட்டிய வீட்டினுள்ளும்
  புகுந்துத் திருடும்
  மனிதர்களே இருக்கும்போது
  திறந்த வீட்டினுள்
  திண்பண்டங்கள் நாங்கள் எடுத்தால்
  தேசத்துரோகிப் போல்
  தேடித் தேடி வதைக்கிறீர்கள்

  ஆஞ்சனேய அம்சமென்று
  கன்னங்களில் போட்டு கொள்கிறீர்கள்
  அடுக்களையில் எட்டிப் பார்த்தால்
  அலறி ஏன் ஓடுகின்றீர்கள்?

  தடியெடுத்து நீங்கள்
  தாக்க வரும்பொழுது
  தற்காப்பு கருதி நாங்கள்
  இரண்டடி முன்னெடுத்து
  எச்சரிக்கை செய்தால்
  ஊரை கூட்டி ஏன் ஓலமிடுகின்றீர்கள்?

  மனிதர்களின் மனமெல்லாம்
  மந்திகள் போன்றெதென்று
  தத்துவங்கள் பேசுகின்றீர்கள்
  எங்களை அடக்கத்தான்
  எத்தனை பேர் வருகின்றீர்கள்
  உங்கள் உள்ளிருக்கும்
  ஒரு மந்தியினை அடக்க
  உங்களால் முடியுமாவென்று
  ஒரு முறை முயன்று பாருங்கள்
  அப்புறமாய் எங்களிடம் வாருங்கள்!

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 17 November, 2017, 21:33

  மனிதக் குரங்குகள் : குரங்கின் பரிணாம வளர்ச்சி மனித இனமாம்!
  டார்வின் உலகிற்குச் சொன்ன உண்மை!
  தட்டிப் பறிப்பதினால், மனிதனும், குரங்கும்!
  ஒன்றென்று சொன்னாரோ!
  தாவும் பழக்கத்தால் இரண்டும்!
  ஒன்றென்று சொன்னாரோ!
  குரங்கின் நல்ல பண்புகளை என்றேனும்!
  நினைத்துப் பார்த்ததுண்டா!
  குரங்குகள் கூட்டமாய் வாழும் அதன் ஒற்றுமையைக் காட்டி!
  குட்டியை சேர்த்தணைத்துத் தான் திரியும்!
  குட்டி பெரிதாகும் வரையில் பாசத்தைக் காட்டி!
  குரங்குகள் துணையோடு, ராமன், சீதையை சிறை மீட்டார்!
  அனுமன் என்ற குரங்கோ பக்திப் பெருக்காலே!
  ராமர், சீதையையே தன் இதயச் சிறையில் வைத்தார்!
  அண்ணல் காந்தி மகான், தீயவை அழிவதற்கு!
  குரங்கு பொம்மைகளால், நீதிதனை உரைத்தார்!
  ஆதிகால மனிதர்கள் கூட்டமாய் தான் வாழ்ந்தார்!
  குழந்தைகள், குடும்பமென்று அன்போடு தான் இருந்தார்!
  ஆதலினால் சொல்கிறேன்!
  ஆதி கால குரங்குகள் நல்லவை தான்!
  தரங்கெட்ட மனிதர்களைப் பார்த்துத்தான்!
  குரங்குகள் குணம் கெட்டதாய் மாறியதோ!

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 18 November, 2017, 19:41

  தாய்மையே சிறப்பு…

  குரங்கி லிருந்து பிறந்ததாகக்
  கூறிக் கொள்ளும் மானிடரே,
  தரமது குறைந்து நீங்களெல்லாம்
  தாய்மையை இழிவாய் விடலாமா,
  உரமாய்ப் போய்விடக் குப்பையிலே
  உங்கள் பிள்ளையைப் போடலாமா,
  வரமாய்க் குட்டிகளை வளர்ப்பதைத்தான்
  வந்து பாரீர் எம்மிடமே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • சிந்து .மூ wrote on 18 November, 2017, 22:45

  உன்னில் இருந்து வந்த
  என்னை எண்ணித்
  தலை குனிகிராயோ?
  என் செயல்களால்
  உன் தலை குனிவதை
  நினைத்து…….

 • மா.பத்ம பிரியா,உதவிப்பேராசிரியர்,எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி,சிவகாசி wrote on 18 November, 2017, 23:03

  தாய்மை

  அன்பின் பகிர்வில் பாகுபாடு இல்லை
  அரவணைத்துக் கொள்வதில் அவளுக்கு ஈடு இல்லை
  ஒரறிவு முதல் ஆறறிவு வரை குழந்தை வளர்ப்பு அன்னையின் நிழலில்
  குட்டியின் பசியாற்றி பசியாறும் ஒரே ஜீவன் அன்னை மட்டுமே
  குழந்தையின் நலன் ஒன்றே தாய்மையின் எதிர்பார்ப்பு
  குழந்தையின் புன்னகையே தாயின் பூரிப்பு
  ஆதரவு தருவதாய் ஏமாற்றும் இவ்வுலகில்
  அன்னையின் அன்பு மட்டுமே நிரந்தரமானது
  கும்பிடும் தெய்வம் தேடிஅலையும் மானுடம்
  குலங்காக்கும் தாய்மையின் நலங்காத்தல் இல்லை
  குரங்கினம் தன் குட்டியின் நலம் ஒன்றை பேணுகையில்
  குழந்தை முதல் பேணி வளர்த்த பெற்றோரைப் பேணாமல்
  முதியவர் காப்பகம் சேர்ப்பது மானுட இனத்தில் மட்டுமே
  காட்டுக்குள் கூடிவாழும் உயிரினக் குடும்பம்
  கரம்கோர்த்து உறவினைக் அன்பில் மூழ்கடிக்கும்
  செல்ல விளையாட்டும் கள்ளக் குறும்பும்
  உள்ள மகிழ்வோடு நாளும் அரங்கேறும்
  கானகம் கூத்தாட உயிரினநேயம்
  வையகம் தழைக்க செய்தி சொல்லும்
  வைப்பு நிதி தராத இன்பமதனை
  தாய்மையின் அருகினில் நித்தம் பருகலாம்
  ஆதலால்
  தாய்மை போற்றுவோம்.

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 18 November, 2017, 23:22

  குரங்கின் செயல் நல்வழிகாட்டும்..!
  ===============================

  பக்தியுடன் பார்த்தால் குரங்கல்ல வானரவீரன்..
  ……….பகவானிடம் பணிசெய்யும் பக்திச் சேவகனாம்.!
  சக்தி வேண்டினதுவே சஞ்சீவி ஆஞ்சனேயன்..
  ……….சரணடையின் சுமையிலாது புலனடக்க எளிது.!
  யுக்திசெயும் இயல்பினிலிது தந்திர மந்தியாம்..
  ……….வாலில்வைத்த தீயால் இலங்கையை அழித்தது.!
  முக்திதரும் காகுத்தனைக் காட்டும் மாருதியாய்..
  ……….முன்வினை பின்வினை அகல வழிகாட்டுமாம்.!

  குடும்பம் பிரிவினை பொறாமை ஏதுமில்லை..
  ……….கூட்டுக் குடும்பமாய் வாழுமிதன் இயல்பாகும்.!
  எடுத்துச் சொல்லு மளவுக்கு இராமகாதையில்..
  ……….இடம் பிடித்தபெருங் குடும்பப் பேரினமாகும்.!
  இடுப்பில் இறுகப்பற்றித் தொங்குமதன் குட்டி..
  ……….இடுக்குவழி வீழாததைக் “குரங்குப்பிடியென்பர்”.!
  கடுவணிண் சாதனையாம்!.சீதாப் பிராட்டியைக்..
  ……….காணும்வரை உண்ணா நோன்பிருந்தது வரலாறு.!

  “குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” எனும்..
  ……….கூற்றை உணர்த்தும் செயல்கள் பலவுண்டாம்.!
  மரத்துக்கு மரம்தாவும் குரங்கின் செயல்களில்..
  ……….மானுடம் கற்கவேண்டும் “வாழ்வியல் பாடம்”.!
  அரக்கச் செயல்கள் செய்யும் மனிதர்களையே..
  ……….குரங்குச் சேட்டையொடு ஒப்பிட்டுப் பேசுவர்.!
  இரண்டு மனமுடன் குழப்பும் இம்மாந்தரைக்..
  ……….குரங்குமனம் கொண்டவர்கள் என்றே கூறுவர்.!

  இன்றொரு பேச்சு நாளையது மாறிப்போச்சு..
  ……….என்றொரு நிலையில் “மனமொரு குரங்காம்”.!
  இன்றிருக்கும் அரசியலே இதற்கு உதாரணம்..
  ……….இவர்கள்செயும் செயலே “குரங்குகை பூமாலை”.!
  தின்று ஏப்பம்விட்ட மக்கள்வரிப் பணமெலாம்..
  ……….திரைக்குள் மறைக்க “இஞ்சிதின்ன குரங்காவார்”.!
  மென்று விழுங்கியது போதா தென்கிறபோதில்..
  ……….வெகுண்டெழுவார் “கள்ளுண்ட குரங்கு போல”.!

 • leela wrote on 18 November, 2017, 23:44

  குரங்கு பொம்மை:

  ஒரு பக்கம் விவசாய போராட்டம்..
  மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம்
  அணு உலை போராட்டம்
  மீனவர் சிறைபிடிப்பு..
  மணல் கொள்ளை…
  மழை, டெங்கு இதற்கு இடையில் சின்னத்தை மீட்பதில் இருக்கிறது இன்றைய அரசாங்கம்
  இந்தியாவை விட்டு
  தமிழ்நாடு பிரிந்தால் இந்தியாவே …
  ஒற்றை காலில்
  நிற்கும்… என்று அறைகூவல் விட எனக்கும் ஆசை தான்…
  தேசபக்தி பற்றி படம் எடுக்கும் கூட்டம்…
  ஒருபுறம்…
  விமானவிபத்தில் இறந்த ராணுவ வீரரை மதிக்காமல் அட்டைபெட்டியில் சுற்றி வைத்துள்ளது மறுபுறம்…
  டிஜிட்டல் இந்தியாவா மாற்ற நினைக்கும் மத்திய அரசு … இராணுவ வீரனுக்கான இறுதி மரியாதைக்கூட வழி இல்லாமல் தவிக்கிறது…
  அரசாங்க ஊழியர்களுக்கு 20% தரும் அரசு…
  ஏழைகள் அன்றாடம்
  உபயோகிக்கும் பொருட்களின் விலை
  உயர்த்தியுள்ளது…
  தன் இனத்திற்கு ஒரு
  கொடுமை என்றால்
  மற்ற இனங்கள் துணிந்து போராடும்…
  மனித வர்க்கம் மட்டுமே
  செல்பி எடுக்கும்…
  காந்தி சொன்ன
  வார்த்தைகளை பின்பற்ற
  அநீதி கண்டால்
  கண்களை, காதுகளை, வாயும் மூடும் குரங்கு கூட்டம் யாமே.. வீழ்வதா?! வாழ்வதா?!

 • சொல்லின் செல்வி wrote on 18 November, 2017, 23:52

  குரங்கின் மனமாய்
  —-

  போதும் புறப்பட்டு வந்துவிடு

  ஏதும் காரணம் சொல்லிவிடு
  காசுக்கு ஆசைப்பட்டு
  வெளிநாட்டு அடிமையாய்
  வீட்டுக்கு பொருள் சேர்த்தது போதும்

  அடுத்தவர் ஒன்றாய் வாழ்ந்தது பார்த்து / அழுது தவித்தது போதும்
  எனக்கு கணவனாக
  பிள்ளைக்கு தகப்பனாக
  ஒரு முழு நாள் ஆனது .
  ஆண்டு மூன்றாண்டுகிறது/
  அப்பா என கூப்பிட்டு
  அழும் குழந்தையை
  அள்ளி அணைக்கவா முடியும்.
  அலைப்பேசியில்
  காதலாக பேசினாலும்
  இறுக்கி அணைக்கவா முடியும்.
  ஏக்கத்தை கொடுக்கும் என் வாழ்க்கை
  தாக்கத்தை தருகிறது தனிமையில் சிறையில்..!

  குரங்குகள் கூட்டு குடும்பமாய்..
  குரங்கின் பரிணாமம் நாமோ தனிதனியாய்
  பாசத்திற்கு ஏங்குகிறேன்
  குரங்கை விட மோசமாய்..!

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 19 November, 2017, 12:48

  நேற்றிரவு 1130 மணி அளவில், பதிவேற்றியது இதுவரை இன்னும் பதிவாகவில்லை என்பதால் மீண்டும் ஒரு முறை பதிவேற்றுகிறேன்.

  நான்குரங்கின் செயல் நல்வழிகாட்டும்..!

  பக்தியுடன் பார்த்தால் குரங்கல்ல வானரவீரன்..
  ……….பகவானிடம் பணிசெய்யும் பக்திச் சேவகனாம்.!
  சக்தி வேண்டினதுவே சஞ்சீவி ஆஞ்சனேயன்..
  ……….சரணடையின் சுமையிலாது புலனடக்க எளிது.!
  யுக்திசெயும் இயல்பினிலிது தந்திர மந்தியாம்..
  ……….வாலில்வைத்த தீயால் இலங்கையை அழித்தது.!
  முக்திதரும் காகுத்தனைக் காட்டும் மாருதியாய்..
  ……….முன்வினை பின்வினை அகல வழிகாட்டுமாம்.!

  குடும்பம் பிரிவினை பொறாமை ஏதுமில்லை..
  ……….கூட்டுக் குடும்பமாய் வாழுமிதன் இயல்பாகும்.!
  எடுத்துச் சொல்லு மளவுக்கு இராமகாதையில்..
  ……….இடம் பிடித்தபெருங் குடும்பப் பேரினமாகும்.!
  இடுப்பில் இறுகப்பற்றித் தொங்குமதன் குட்டி..
  ……….இடுக்குவழி வீழாததைக் “குரங்குப்பிடியென்பர்”.!
  கடுவணிண் சாதனையாம்!.சீதாப் பிராட்டியைக்..
  ……….காணும்வரை உண்ணா நோன்பிருந்தது வரலாறு.!

  “குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்” எனும்..
  ……….கூற்றை உணர்த்தும் செயல்கள் பலவுண்டாம்.!
  மரத்துக்கு மரம்தாவும் குரங்கின் செயல்களில்..
  ……….மானுடம் கற்கவேண்டும் “வாழ்வியல் பாடம்”.!
  அரக்கச் செயல்கள் செய்யும் மனிதர்களையே..
  ……….குரங்குச் சேட்டையொடு ஒப்பிட்டுப் பேசுவர்.!
  இரண்டு மனமுடன் குழப்பும் இம்மாந்தரைக்..
  ……….குரங்குமனம் கொண்டவர்கள் என்றே கூறுவர்.!

  இன்றொரு பேச்சு நாளையது மாறிப்போச்சு..
  ……….என்றொரு நிலையில் “மனமொரு குரங்காம்”.!
  இன்றிருக்கும் அரசியலே இதற்கு உதாரணம்..
  ……….இவர்கள்செயும் செயலே “குரங்குகை பூமாலை”.!
  தின்று ஏப்பம்விட்ட மக்கள்வரிப் பணமெலாம்..
  ……….திரைக்குள் மறைக்க “இஞ்சிதின்ன குரங்காவார்”.!
  மென்று விழுங்கியது போதா தென்கிறபோதில்..
  ……….வெகுண்டெழுவார் “கள்ளுண்ட குரங்கு போல”.!

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.