-மேகலா இராமமூர்த்தி

clock

காலங்காட்டும் கடிகார முள்ளும், காலைப் பதம் பார்க்கும் கடிதான முள்ளும் நெருங்கியமர்ந்து தாமாற்றும் பணிகள்பற்றி உரையாற்றிக் கொள்கின்றனவோ?

இருவேறு பணிசெய்யும் முட்களை ’வித்தியாசமான இரசனையோடு’ அணிசேர்த்துப் படமெடுத்திருக்கும் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி!

”ஏற்ற காலமும் இடமும் அறிந்து முயற்சிகளைத் தொடங்கினால் ஞாலமும் வசப்படும் நம்கையில்” என்பது ஐயனின் பொய்யாமொழி.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.

நம் கவிஞர்கள் கவிபாட வேண்டிய காலமிது…களமிது! செந்தமிழ்ச் சொல்லெடுத்து, ஞாலம் வெல்லும் கவிதை சொல்ல அவர்களை அன்போடு அழைக்கிறேன்!

*****

”கடிகார முட்கள் சுற்றிவருவதுபோல் நம் வாழ்க்கையும் ஒரு வட்டத்துக்குள் சுற்றிவருகின்றது. மனித உடலுக்குள்ளும் இதயம் எனும் கடிகாரம் ஓய்வின்றிச் சுற்றுகின்றது. காலங்காட்டும் கடிகாரம் நின்றால் பழுது பார்க்கலாம்; இதயமென்னும் கடிகாரம் நின்றால் அழுது தீர்ப்பதைத் தவிர வேறென்ன செய்வது?” என்று வாழ்க்கை ஓட்டத்தைக் கடிகார ஓட்டத்தோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

நேரமும், கடல் அலையும், மனிதனுக்காக காத்திருக்காது
பணமும், பொருளும் மனிதனிடத்தில் என்றும் தங்காது!
அதிகாலையில் கடிகார மணியோசை கேட்டு எழுவோம்
அன்றைய வேலைக்கு செல்ல உடனே புறப்படுவோம்!
நம்மைவிட்டு என்றும் அகலாத ஓர் கருவி
நாளும் நமக்கு தேவைப் படும் அதன் உதவி!
வேலைக்குச் செல்வோர் கையில் கடிகாரம் இருக்கும்மே
வேலை முடியும் நேரத்தையும் தெளிவாகக் காட்டும்மே!
கடிகாரத்தில், அண்ணன், தம்பி போல் இரு முள்கள் இருக்கும்
கருவேல மரத்திலும் ரோஜா செடியிலும் முள்கள் இருக்கும்!
பைந்தமிழில் கடிகாரத்தை நிழற் கடிகை என அழைப்பர்
சூரியஒளி  நிலவொளி கொண்டு அன்று நேரத்தைக் கணக்கிடுவர்!
கடிகாரம் இருபத்துநான்கு மணி நேரமும் ஓடிக்கொண்டேயிருக்கும்

பல தேசங்களுக்கு வித்தியாசமான நேரத்தைக் காட்டிகொண்டியிருக்கும்
வாழ்க்கை எனும் வட்டம் கடிகார முள்கள் போல சுற்றி வருமே
கடிகார முள்ளும், ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றி வருமே!
மனித உடலில் இதயமெனும் கடிகாரம் துடித்து ஓடுகின்றது
நேரத்தைக் காட்டும் கடிகாரமும் நிற்காமல் ஓடுகின்றது!
நேரத்தைக் காட்டும் கடிகாரம் நின்றால் பழுது பார்க்கலாம்
இதயம் எனும் கடிகாரம் நின்றால் பழுது பார்க்க முடியுமா!
நேரத்தைக் காட்டும் கடிகாரமோ காலை,மாலை,நேரத்தை காட்டும்,
இதய ரத்த ஓட்டமோ மனிதனின் நாடி துடிப்பை தெளிவாக காட்டும்!
எல்லோருக்கும், எந்நேரத்திலும் பயன்படும் கடிகாரமே
மனிதனின் மனதில், நிலையாய் இருப்பாய் என்பது திண்ணமே!

*****

கடிகாரமுள் காலத்தைக் காட்டும்; காட்டுமுள் காலில் காயம்தந்து வாட்டும். அக் காட்டுமுள்போல் துயர்கூட்டும் மனிதரும் நானிலத்தில் உண்டு. அவர்தம் தீயுறவைக் கழித்து, காலங்காட்டி ஊக்குவிக்கும் கடிகாரமுள் போன்றோரின் நல்லுறவைக் கூட்டினால் நற்செயல்கள் கைகூடும்” என்று பொன்மொழி பகர்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

காலத்தைக் காட்டும் கடிகார முள் போலும்
காயத்தைச் உருவாக்கும் காட்டு முள் போலும்
ஞாலத்தில் எத்தனை பேர் நம்மிடையே உள்ளார்கள்
சீலத்தால் வாய்மையினால் சிந்தனையால் உயர்ந்தோர்
தீமையே பயக்கின்ற செயல் புரியும் கீழோர்
எல்லோரும் வாழ்கின்ற இந்தவுலகிற்தான்

நல்லதற்கும் தீயதற்கும் நடுவினில் நாம் வாழ்கின்றோம்
முள்ளிலும் பலவாயுண்டு முனைப்பிலே, மாறுபட்ட
சொல்லிலும் மாந்தராலே சுகமுண்டு துக்கமுண்டு.
இனிய நற் செயலாலெங்கள் இதயத்தைத் தொடுவார் மேலோர்
கனிவிலா மொழிகள் கூறிக் கவலையைத் தருவார் கீழோர்
நனி துயர் கூட்டுகின்ற நடு வழிப் புதர் முள் போலும்
எனிலவர் தொடர்பு நீங்கி இருப்பதே என்றும் மேலாம்.
உரிய நேரத்தைக் காட்டி உறக்கத்தைப் போக்கும் முள்போல்
சரியெனும் தருணந்தன்னில் தளர்ந்திடா தூக்குவிக்கும்
அரியநல் அன்பர் தம்மோ டருகினில் என்றும் வாழ்வோர்
புரியுநற் செயல்களெல்லாம் போற்றுதற் குரியவாகும்.

*****

பள்ளங்களும் மேடுகளும் வாழ்க்கைப் பயணத்துக்குத் தடையாகிட, காலத்தின் பிடியில் சிக்கிச் சிறுதுரும்பாய்த் தத்தளிக்கும் மானுட வாழ்வை அருமையாய்ப் படம்பிடிக்கிறார் திருமிகு. மா. பத்ம பிரியா  தன் கவிதையில்.

காலத்திற்கு முன் நானொரு சிறுதுரும்பு

காலம் கரைகிறது
கனவு வளர்கிறது
ஒவ்வொரு கனவும்
ஓலமிடும் காதோரம்

சிகரம் தொடும் எண்ணத்துடன்
சிந்தனைகள் சிறகடிக்க
சிக்கல்களைச் சிதறடிக்கும்
உத்வேகம் உள்ளத்தில்
உயரத்தின் உச்சிதனைத்
தொட்டுவிட ஆசைதான்
துவளும் மனவுறுதியைக்
கட்டிவைக்க ஆசைதான்
கண்ணில் விரியும் எல்லையின் நீளம்
கரங்களில் உள்ளடக்கம்
செம்மாந்த மனச்செருக்கு என்னிலும் உண்டு
வளைந்து நெளியும் வாழ்க்கைப் பாதையில்
வாகனஓட்டுநர் நேர்த்தியுடன் கையாளும் திறனை
வல்லூறு கூர்நகங்கள் புரட்டிப்போடும் நாளும்
இன்னல்களும் இன்பங்களும்
இடையீடு செய்தாலும்
இலட்சியத்தின் பயணத்தில்
எச்சரிக்கை மணி அடித்தாலும்
சிலந்தி வலையாக என்னை நான் சூழ்ந்திருக்க
போதிமரத்து புத்தனாக ஞானஒளி யாசித்திருக்க
புன்னகை பரிமாறும் விழிகளின் சீண்டல்கள்
பொழுதுபோக்காகத் திசைமாற்றும் என்னை
ஏனிந்த அலைபாயும் மனது
பாதையில் பயணிக்க
பள்ளங்களும் மேடுகளும் பயணத்தில் தடையாக
காலத்தின் ஓட்டத்தை
விரல்விட்டு எண்ணிப் பார்க்கும் குழந்தையின் மனசாக
மானுட விதியோ காலத்தின் பிடியில்
முந்திக்கொண்டு ஓடும் மானுட கதியோ
முனகிக் கொண்டே ஜன நதியில் பயணிக்க
நானொரு சிறுதுரும்பானேன்
காலத்தின் பிடியில்

*****

”தம்பி! காலம் நமக்காய்க் காத்திராது; ஆதலால் வேலையைக் காலத்தில் செய்துவிடு; வெற்றியை ஞாலத்தில் கொய்துவிடு!” என்பது திரு. செண்பக ஜெகதீசன் சொல்லும் அனுபவமொழி!

கால மேலாண்மை

காலம் காட்டிடும் கடிகாரம்
காலமே வாழ்வின் அதிகாரம்,
வேலையைச் செய்திடு காலத்திலே
வெற்றியே தங்கிடும் ஞாலத்திலே,
காலம் நமக்காய்க் காத்திராது
கடந்தால் இலக்கில் சேர்த்திடாது,
கோலம் வாழ்வில் நன்றாய்ப்பெற
கொண்டிடு கால மேலாண்மையே…!

*****

”வெண்ணிலவும் செங்கதிரும் ஒருநாளும் நேரந் தவறுவதில்லை. நாமும் அதுபோல் கூரறிவோடு நேரத்தை நிர்வாகம் செய்தால் நேரமில்லை எனும் புலம்பலுக்கு வேலையில்லை; வாழ்க்கையிலும் தோல்வியில்லை” என்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

நேரத்தின் தத்துவம்..!

இயற்கை தந்ததோ இருபத்திநான்கு மணித்துளிகள்..
……….
இதிலெத்துணை நேரத்தைப் பயனாக்குகிறோம் நாம்.!
வியத்தகு விஞ்ஞானம் வியப்புறும் விந்தைபுரிந்தாலும்..
……….
வீணே கழியுநல்நேரத்தை சேமிக்க வழியில்லையோ.?
மயக்கும் செயல்கள்மீதே நம்மதிகெட்டுப் போனதால்..
……….
மாயமாய் மறைந்தே போய்விடுகிறது மொத்தநேரமும்.!
இயங்கும் இவ்வுலகிற்குப் பஞ்சபூதம் காரணமாமவை..
……….
இயங்காமல் சற்றுநேரம் நிலையாயின் என்னவாகும்..?
நேரமதை நேசிக்கநாம் பழகவேண்டும்! செயல்புரியும்..
……….
நேரத்தில் நல்லநேரம் கெட்டநேரம் உண்டென்போர்.!
கூரரறிவு பெற்றிட கடுமுழைப்பில் கவனம்வேண்டும்..

……….குறுகியநேரம் கிடைத்தால்கூட வீணடித்தல் கூடாதாம்.!
சீரழியுமிச் சமுதாயத்தில் நாட்டமிலா நிலைவேண்டும்..
……….
சிறுபருவத்திலேயே சீராக வாழ்வுநெறி கற்கவேண்டும்.!
ஈரடிப்புலவன் வள்ளுவன் ஆயிரம்வருடம் முன்னமே..
……….
இடித்துரைத்தான்!இளமையில் கல்லென எழுதினான்.!
வானில் எழிலாயுதிக்கின்ற விரிகதிரும் வெண்ணிலவும்..
……….வருவதற் கொருநாளும் நேரம்பார்க்க நினைவதில்லை.!
தேனீக்கள் மலர்நாடிச் செல்லத்தகுந்த நேரமெதுவென..
……….
தெரிந்தா செல்கிறது! சிந்தையிலிது உதிக்கவேண்டும்.!
நானிலத்தில் ஓடும்நதியெலாம் நிலம்செழிக்க உதவும்..
……….
நேரம்பாரா நலமொன்றேயதன் இயற்கை விதியாகும்.!
இனிப்புடன் கசப்பும் வாழ்வில் வருவதியற்கையப்பா..
……….
இனியாவது நேரத்தின்மீது பழிபோடாக் கடமையாற்று.!
நேரமில்லை நேரமில்லையெனவே புலம்புவார் பலரும்..
……….
நேரம்குறித்த கவலையெலாம் அவரிடம் இல்லையே.!
நேரமதைப் பகுத்து நித்தம்செயும் செயல்களினாலதை..
……….
வகுத்தெடுத்தால் நேரமென்பது நிறையவே கிடைக்கும்.!
பாரஞ்சுமக்கும் மாடும் நேரமறிந்து செயல்படும்போது..
……….
பகுத்தறிவாளருக்கோ இன்னும் ஏனோ புரியவில்லை.!
சோரமில்லாது வாழ்வில் ஏற்றம்பெற வேண்டுமெனில்..
……….
சோம்பல் விடுத்துநேரம் கூட்டிக்கழித்து வாழப்பழகு.!

*****

”கடிகாரத் தோழி! நீயும், பெண்ணான நானும் ஒன்றுதான்! மனிதர்கள் தம்முடைய தோல்விக்கு நேரம் சரியில்லை என்று உன்மீதோ, மருமகள் வந்தநேரம் சரியில்லை என்று என்மீதோ பழிபோடத் தவறுவதில்லை. இசையோ, வசையோ எதுவும் நம் ஓட்டத்தை நிறுத்தாது” என்று சூளுரைக்கிறார் திருமிகு. சொல்லின் செல்வி.

கடிக்காரத் தோழி 

இரவுக்கும் பகலுக்கும் மத்தியில் உன்னோட்டம்
பிறப்பும் இறப்புக்கும் மத்தியில் என்னோட்டம்.
சிலர் சில நேரங்களில்
நல்லநேரமென வாழ்த்துவார்கள்.

உன்னை.
மகராசி என வாழ்த்துவார்கள்
என்னை.
பலர் பல நேரங்களில்
ராகு காலம் எமகண்டமென
வசைப்பாடுவார்கள் உன்னை
வாழாவெட்டி, விதவை மலடி என
வசைப்பாடுவார்கள் என்னை!
காலதேவனாகிய நீ
ஒருவருடைய
வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாம்,
மருமகளாகிய நான்
புகுந்தவீட்டில்
நல்லதுக்கும் கெட்டதுக்கும் காரணமாம்.
உனக்குள் இருப்பது
டிக்டிக் சத்தம்.
எனக்குள் இருப்பது

லப்டப் சத்தம்..
இந்த மானுடம் இப்படித்தான்
தன் குறைகளை களையாது
காலம் உனை குற்றஞ்சாட்டும்
பகுத்தறிவற்றுத் திட்டி தீர்க்கும்
பெண் சமூகம் எங்களையும்
கலாசார வேலியிட்டு நாசப்படுத்தும்..
ஆனாலும், கடிகாரத் தோழியே..!
வசைபாடுவதாலும் வாழ்த்துவதாலும்
நம் ஒட்டதை நிறுத்தமுடியாது
எதிர்காலம் என்று ஒன்று உண்டு
எவருக்கும் அஞ்சாத மனம் உண்டு.

*****

”கடிகார முள்ளின் சுழற்சிக்கேற்பச் சுற்றித் திரியும் மானுடருக்கு, நட்பும் காதலும் வாழ்க்கையும் இன்னபிறவும் இறுதிவரை விளங்காத கேள்விக்குறிகளே” என்பது திருமிகு. லீலாவின் கவிதை செப்பும் கருத்து. 

பயணம்:

காலக் கடிகாரத்தின்
முட்களின் சுழற்சியில்
ஒடிக்கொண்டும்
உழைத்துக்கொண்டும்
இருக்கும் நாம்,
நம்மை வருத்தி
சுயத்தை இழந்து
நட்பை இழந்து
நேரத்தைக் கடத்தி
ஒய்ந்து.. களைத்து
நிறைவில்
மரணத்தின் விளிம்பில்
கேள்விகுறியாகவே பயணிக்கிறது.
நட்பு
காதல்
வாழ்க்கை..
இயற்கை..
செயற்கை
கடவுள்.. மானுடமென..யாவும்.

*****
கடிகாரத்தை வைத்து ’மணி’யான கருத்துக்களைத் தம் கவிதைகளில் பொதிந்து தந்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் வாழ்த்தும் பாராட்டும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து… 

முள்ளும் மலராகும் 

முள் என்றால் காயம் மட்டுமா,
என் தோழா!
அது உனைக் காக்கும் வேலி அதை ஏனோ மறந்தாய்,
என் தோழா!
மொட்டுக்கள் மலராய் மலர முள்ளே காவல்,
என் தோழா!
விதைகள் மரமாய் வளர  முள்ளே காவல்,
என் தோழா!
புல்பூண்டுகூட முளைக்காத பாலைவனத்தில், முள்ளே
விலங்கிற்கு உணவாம் என் தோழா!
கடிகாரக் குடும்பத்தின் உயிர்நாடி,
முட்கள் தானே என் தோழா!

கண்டிப்பு என்ற முள்தானே
ஒழுக்கத்தை தந்தது என் தோழா!
தண்டனை என்ற முள்தானே
குற்றத்தை ஒழித்தது என் தோழா!
மருந்து என்ற முள்தானே
நோயைத் தீர்த்தது என் தோழா!
மரணபயம் என்ற முள்தானே,
தவற்றைக் குறைத்தது என் தோழா!
முதுமை என்ற முள்தானே
தெளிவைத் தந்தது என் தோழா!
முள்ளென்று இழிவாய் நினைக்காதே
என் தோழா!
முள்ளும் மலராகும் அதன் விளைவாலே
என் தோழா!

”காலங்காட்டும் கடிகாரத்தில் முட்கள் இல்லையெனில் மணி தெரியாது; வாழ்க்கைப் பாதைவழிச் செல்லும் பயணத்தில் முட்கள் இல்லையெனில் அனுபவங்கள் கிடையாது.

காலைத் தாக்கும் அதே முள்தான் வேலியாகிப் பயிரைக் காக்கிறது. நோயைத் தாக்கும் மருந்தெனும் முள்தான் உயிரைக் காக்கிறது. முதுமையெனும் முள் தெளிவைத் தருகிறது; மரணமெனும் முள் தவற்றைக் குறைக்கிறது.

ஆதலால் மானிடா! முள்ளென்று தள்ளாதே! அதனையும் நல்அனுபவங்கள் நல்கும் மலரென்று கொள்!” என்று சிந்தனைக்கு விருந்தாகும் சீரிய கவிதையைத் தந்திருக்கும் திரு. பழ.செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 134-இன் முடிவுகள்

  1. அருமையான படத்தை எடுத்துத் தந்த திரு.பிரேம்நாத் திருமலைசாமிக்கு மிக்க நன்றி!
    வல்லமை ஆசிரியருக்கு உளமார்ந்த நன்றி.
    என் கவிதையை இந்த வாரத்திற்கான சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்த திருமதி. மேகலா இராமமூர்த்திக்கு நன்றி பல கோடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *