கபீர்தாசரின் கவிதைகள் (தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்)

க. பாலசுப்பிரமணியன்

kabir-424x282

கைகளில் மாலைகள் உருண்டிட

நாவினில் சொற்கள் உருண்டிட

நினைவோ எங்கெங்கோ உருண்டிட

இதுவோ மனிதா! இறைவன் பக்தி?

 

குயவனைப் பார்த்து மண்ணே சொன்னது

எத்ததனை நாட்கள் உருட்டுவாய் என்னையே

எனக்கென ஒருநாளும் உண்மையில் வந்திடும்

உருட்டுவேன் உன்னையே இந்த மண்ணினில்!

 

மற்றவரிடம் கேட்பது மரணத்துக்கு நிகர்

எவரிடமும் எதுவும் கேட்காதீர் !

கேட்கும் பொழுதே மனமே மடிக்கும்

இல்லை என்பவனோ மடிந்தான் முன்னே !

 

வண்ணமே வண்ணமே எந்தன் இறைவன்

எங்கும் எதிலும் அன்னவன் வண்ணமே

வண்ணத்தைக் காண நானும் சென்றேன்

அந்தோ! என்னிலும் வண்ணமே வண்ணமே !

 

நீரில் குடமும் குடத்தில் நீரும்

உள்ளும் புறமும் நீரே நீரே ;

குடமும் உடைந்திட உள்ளும் புறமும்

ஒன்றே ஒன்றே நீரே நீரே நீரே !

 

மூட்டையாய் மூட்டையாய் நூல்கள் படித்தும்

முடிவினில் அறிஞன் எவனும் இல்லை :

அன்பெனும் இரண்டரை அட்சரம் அறிந்தவன்

அறிவுக்கு எவரும் நிகராய் இல்லை !

 

நலமா நலமா என்றே அனைவரும் கேட்பார்

நலமாய் இருந்தவர் யாரு மில்லை !

மரணத்தின் பயத்தினில் மனத்தினை நிறுத்தியே

மாந்தரில் நலமாய் இருந்தவர் யாரோ ?

 

 

Share

About the Author

க. பாலசுப்பிரமணியன்

has written 366 stories on this site.

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]


five × 5 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.