யாருமில்லாத மேடையில்..!

 

பெருவை பார்த்தசாரதி

download (22) (1)

 

 

 

 

 

பாருக்கு பாரதியும் பகன்றபல நற்கருத்தையெலாம்..

……….படித்துப் புரிந்துகொண்டோர் எத்துணை பேராவார்.!

ஆருடம் சொல்லும் இடமங்கேதான் கூட்டமதிகமாம்..

……….அருந்தலைவர்கள் ஆற்றுவதைக் கேட்க ஆளில்லை.?

ஊருடன் ஒத்துவாழ உலகமக்களுக்கு அறிவுறுத்திய..

……….ஒருமித்த கருத்துள்ள உத்தமரோயிரம் உண்டிங்கே.!

யாருமில்லாத மேடையில்நான் கூச்சல் போடுகிறேன்..

……….வாருங்களய்யா!..வந்துஅவர் பேச்சைக் கேளுமென்று.!

 

 

ஊருக்குள் இருப்பவருக்கு எங்கிருக்கிறது அக்கரை..

……….உலகில் யாவர்குமெளிதாய் வருமோ?…நாட்டுப்பற்று.!

நேருவும் காந்தியும் நேத்தாஜியும் வ.உ.சிதம்பரமும்..

……….நெறிதவறி வருமானம்பெற வழிதவறிப் போகவில்லை.!

ஆருமே அறியாதபல அற்புத வாழ்வியல்கல்வியை..

……….அய்யன் வள்ளுவனும் வாழ்வினுக்கு வழங்கினான்..!

பெருமதிப்பு கொண்ட பெரியோர்களின் நல்லுரையை..

……….பெறமறவாதீர்! என்கிறேன் யாருமில்லா மேடையில்.!

 

கம்பனும் இளங்கோவனும் காப்பியம் படைத்தார்கள்..

……….கலையுலகம் விழிப்புணர கண்ணுறங்காமல் எழுதினர்.!

அம்பரீடன் சரித்திரத்தை ஒருமுறை படித்துப்பாரும்..

……….அகங்காரம் ஒருபோதும் நம்மிடமே வாராதுபோகும்.!

இம்பருலகம் இறைஞ்சும் எதுவும் வேறெங்குமில்லை..

……….இந்தியாவின் காப்பியங்களில் கொட்டியே கிடக்கிறது.!

பம்பரமாய்ச் சுழன்றே பாரதத்தின் பெருமைசொல்ல..

……….பரப்புரை செய்யவந்தேன்! யாருமில்லாத மேடையில்.!

 

படிப்பறிவு இல்லாதவரே பள்ளிகல்லூரி நடத்துகிறார்..

……….படித்த மாமேதையங்கே பாடம் சொல்லித்தருகிறார்..!

கொடிபடரக் கொழுகொம்பு தேவையென்பது போல..

……….பிடிதளராத மாணவனும் பட்டம்பெற மன்றாடுவார்..!

மடிச்சுக்கட்டிய வேட்டியுடன் வளைத்துப் போடவே..

……….மதிப்புமிகு கல்வியைத் தொழிலாக்கும் விந்தையிதை..

இடித்துரைக்க ஓடிவந்தேன் யாருமில்லா மேடையிலே..

……….இசைந்து வந்தவரெலாம் கொடிபிடிக்கச் சென்றனரே.!

 

நன்றி:: தினமணி கவிதைமணி:: 11-11-17

நன்றி:: படம் கூகிள் இமேஜ்.

பெருவை பார்த்தசாரதி

பெருவை பார்த்தசாரதி

கல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம்
கல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
அலுவலகம் :: சென்னை விமானநிலையம்
குடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை

Share

About the Author

பெருவை பார்த்தசாரதி

has written 80 stories on this site.

கல்வித் தகுதி :: வணிகவியலில் முதுகலைப் பட்டம் கல்லூரி :: தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி அலுவலகம் :: சென்னை விமானநிலையம் குடியிருப்பது :: கலைஞர் நகர், சென்னை

Write a Comment [மறுமொழி இடவும்]


− 1 = six


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.