நிர்மலா ராகவன்

ஊர்வம்பு

நலம்-1

முன்பெல்லாம், `கிசு கிசு’ என்று திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளைப்பற்றிய ரகசியங்களை வெளியிட்டு வந்தது ஒரு பத்திரிகை. சம்பந்தப்பட்டவரே அதைப் படிக்கும்போதுதான் அந்த விஷயத்தை அறிந்திருப்பார். அவ்வளவு உண்மை இருக்கும் அச்செய்தியில்!

இன்றைய கலாசாரத்தின்படி, வம்பு பேசுவது செய்தி. கூறப்படுவதில் நல்லது எதுவும் இருக்காது என்பது வேறு விஷயம். பிறரைப்பற்றி நல்லது இருந்தால் அதில் என்ன சுவாரசியம்! அதனால்தான் இப்போது தொலைகாட்சியும் கணினியும்கூட அப்பாணியைக் கைப்பிடிக்கின்றன.

எந்த நடிகை மூக்கில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாள், இந்த நடிகைக்கும் அந்த நடிகருக்கும் இருக்கும் தொடர்பு காதலா, இல்லை, வெறும் நட்பு மட்டும்தானா என்றெல்லாம் ஆராயும் நேரத்தில் உபயோகமாக எதையாவது செய்யலாமே என்று நிறைய பேர் நினைப்பதில்லை.

ஏன் வம்பு?

`வம்பு’ என்றாலே எதிர்மறையான எண்ணம்தான் வருகிறது. தன் குறைகளைப்பற்றிப் பிறர் எண்ணிவிடவோ, பேசவோ இடங்கொடுக்க விரும்பாததாலோ பலரும் வம்பு பேசுகிறார்கள்.

இவைகளைப் பார்ப்பவர்களும் கேட்பவர்களும் பிரபலமானவர்களின் பலவீனங்களை அறிவதால் நாம் அவர்களைவிட உயர்ந்துவிட்டோம் என்று நினைக்கிறார்களா, இல்லை, பொழுதுபோகாமல் இருக்க, எப்படியோ நேரத்தைக் கடத்தினால் சரி என்ற எண்ணமா?

வம்பு பேசுவது பொய்யுரைப்பதற்குச் சமானம் (பழமொழி).

சிற்றூர்களில் வம்படிப்பது பிரதான பொழுதுபோக்கு.

செய்வதற்கு நிறைய காரியங்கள் இல்லாத சலிப்புடன், ஊரிலிருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதை ஒன்றுக்குப் பத்தாக பரப்புவார்கள். தம்மைப்பற்றி நினைக்கவும் விரும்பாது, பிறரது வாழ்வு எப்படி அமைகிறது என்று ஆராய்வதில் இவர்களுக்கு எல்லை கடந்த ஆர்வம்.

பெரிய நகரத்திற்குக் குடிபெயர்ந்தாலும், பழைய பழக்கம் மாறுவதில்லை.

கதை

சக ஆசிரியையான ராணி பென்ஸ் காரை ஓட்டிவந்து, தினமும் கெட்டி ஜரிகை போட்ட பட்டுப்புடவைகளை உடுத்து வருவதைப் பார்த்து மிஸஸ் யாப்பிற்கு ஒரே வயிற்றெரிச்சல். அவளுக்கு எல்லாருடனும் போட்டி.

ஒரு முறை, “ராணியின் கணவருக்கு எங்கு வேலை?” என்று என்னிடம் ரகசியக் குரலில் விசாரித்தாள்.

அலட்சியமாக, “நீ அவளிடமே கேட்பதற்கென்ன!” என்றேன். என்னைப்பற்றியும் நாளை வம்பு பேசுவாள்! அதற்கு நானே இடங்கொடுக்கலாமா!

என் தலை ,மறைந்ததும், `பிறருடன் ஒத்துப்போகாத ஜன்மம்!’ என்று என்னைப்பற்றி யாரிடமாவது புலம்பி இருப்பாள்.

ஜாவியா இன்னொரு `வம்பி’. “குள்ளமாக இருக்கிறாள்! இவ்வளவு பெரிய ஜரிகை போட்ட புடவைகள் சகிக்கவில்லை! இதுகூடத் தெரியாதா!” என்று ராணியை விமரிசித்தாள் என்னிடம்.

நான் அவளை ஆமோதிக்காததால், பொதுவாகவே `நட்புடன் பழகத் தெரியாதவ’ளாகிப் போனேன்.

வம்பு பிறர் வாழ்வை எப்படிப் பாதிக்கும் என்பதில் இவர்களைப் போன்றவர்களுக்கு அக்கறை இல்லை. இப்படிப்பட்டவர்கள் எல்லாவற்றிலும், எவரிடத்திலும் குற்றம் காண்பவர்கள். பிறர் மகிழ்ச்சியாகவோ, தம்மைவிடச் சிறப்பாகவோ இருப்பதைக் காணப் பொறாதவர்கள். ஒருவரது முகத்திற்கு நேரே கூற தைரியம் இல்லாததை பிறரிடம் விவாதித்து நிறைவடைகிறவர்கள்.

சில சமயம், தாம் சந்தித்தே இராதவரைப்பற்றிக்கூட அலசுவார்கள்.

கதை

ஆசிரியர்களின் பொது அறையில், மூன்று பேர் எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். நான் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன்.

என்னைப் பலமுறை அழைத்து என் கவனத்தைக் கவர்ந்து, “நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்க, “எதைப்பற்றி?” என்று புரியாமல் கேட்டேன்.

“நாங்கள் இப்போது பேசிக்கொண்டிருந்ததைப்பற்றி!”

“என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்?”

படிக்கும்போது என் கவனம் எதிலும் செல்லாது, காது தற்காலிகமாக செவிடாகிவிடும், இதனாலேயே பள்ளி நாட்களில் பல முறை திட்டு வாங்கியிருக்கிறேன் என்று தெரிந்து ஆச்சரியப்பட்டார்கள்.

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் குருவாகப் போற்றப்படும் ஒருவர் உண்மையிலேயே உயர்ந்தவர்தானா என்று ஆராய்ந்து, அவர்கள் எதிர்மறையான முடிவுக்கு வந்திருந்தார்கள். அவரைப்பற்றி அவர்களுக்குக் கேள்விஞானம் மட்டுமே.

“எனக்குத் தெரியாத விஷயத்தில் நான் எப்படி கருத்து சொல்வது?” என்று மறுத்துவிட்டேன்.

சராசரி மனிதர்கள் நிகழ்வுகளை விவாதிப்பர் எனில், எதிரில் இல்லாதவரைப்பற்றி அவதூறாகப் பேசுகிறவர் எதில் சேர்த்தி?

கதை

`கேட்பது எதையும் நம்பாதே, காண்பதில் பாதியை நம்பாதே!’

எங்கள் பகுதியில் வசித்துவரும் முதிய பெண்மணியான லீ என்னிடம் கேட்டார், “உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் உங்கள் தங்கையாமே! சொல்லிக்கொள்கிறார்கள்!”

பக்கத்து வீட்டுக்காரி இந்தியனே அல்ல. ஆங்கிலமும் சீனக் கலப்பும் கொண்டவள். கவுன்தான் அணிவாள்.

நான் மறுத்ததும், விடாப்பிடியாக, “அவளுடைய கணவர் உங்கள் மாப்பிள்ளையின் தம்பியாம்!” என்று தொடர்ந்தாள். அதுவும் தவறு.

அவர்களுக்கெல்லாம் பொழுது போகவில்லை என்பதால், என் மண்டையை உருட்டுகிறார்கள். அவர்கள் பேசும் சீன மொழி எனக்குப் புரியாது என்பதாலும் இருக்கலாம்.

`கேள்விப்பட்டேன்,’ `சொன்னார்கள்,’ என்றெல்லாம் ஆரம்பிக்கும் செய்தியில் அனேகமாக உண்மையின் கலப்பு இருக்காது.

தடுக்க முடியாது, தொத்து வியாதி

யாருக்கும் உபயோகமற்ற வம்பைத் தடுக்கும் வழி தன்னைப்பற்றி தாறுமாறாகப் பேசியவரை நேருக்கு நேர் சந்தித்து, அவரிடம் நியாயம் கேட்பதுதான் என்கிறார்கள் சிலர். அப்போது வம்பர்கள் சற்றுத் தடுமாறலாம். ஆனாலும், குணம் மாறவா போகிறது! ஆகவே, அதை அலட்சியம் செய்வதுதான் சிறந்த வழி என்று தோன்றுகிறது.

எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பார்கள் இவர்கள். நம்ப முடியாது. அவர்களுடன் நெருங்கிப் பழக நேர்ந்தால், நம்மையும் அறியாது, இந்த வியாதி தொற்றிக்கொள்ளும். யாரோ, எதுவோ செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

வம்பின் உபயோகம்

புனைக் கதைகளுக்கு வம்பு இன்றியமையாதது.

ஒருவரைப் பார்த்து, `இப்படித்தான் இருக்குமோ?’ என்று அவரைப்பற்றி நம் எண்ணங்களைச் சுழலவிட்டால் நல்ல கதைகள் கிடைக்கும். அவரது பெயரை மாற்றி, எதிர்காலத்தையும் கணித்து நாம் அளப்பதில் உண்மை இருக்காது. அதனால் அவர் நம்மேல் ஆத்திரப்பட முடியாது.

பத்திரிகைகளில் ரகசியச் செய்திகளைத் திரட்டி எழுதுபவருக்கு இது எளிதில் சம்பாதிக்கும் வழி.

முன்பு ஒரு `மஞ்சள்’ பத்திரிகையில் இதே தொழிலாக, `கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு,’ எந்த ஊரில் யார், யாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து வெளியிடுவார்களாம்.

அப்படி என் தாத்தாவின் கிராமத்தில் ஒருவரைப்பற்றி அவதூறாகச் செய்தி வர, அவமானம் தாங்காமல் அந்த மனிதர் தற்கொலை செய்துகொண்டாராம்.

இந்த நிகழ்வை என் தாய் அடிக்கடி தெரிவித்ததால், இன்னொருவரைப்பற்றித் தவறாகப் பேசுவது தீய குணம் என்று என் மனதில் படிந்துவிட்டது. உண்மையாகவே இருந்தாலும், உரக்கச் சொல்லக்கூடாதவைகளைப் பரப்புவானேன்!

கதை

நாகலட்சுமிக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள். மணமகனோ, மனைவியை இழந்தவர். ஒரு குழந்தையின் தந்தை. இருவருக்கும் பெரிய வயது வித்தியாசம்.

எல்லாப் பெண்களையும் ஏதாவது ஒரு ஆணுடன் தகாத முறையில் சம்பந்தப்படுத்திப் பேசுவதிலேயே ஓய்ந்த பொழுதைக் கழித்தாள் நாகலட்சுமி.

இதனால் பேசப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி, அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மன வேதனை. தாம்பத்தியங்களில் பிளவு உண்டாயின. ஒரு பெண் தற்கொலை முயற்சியில் இறங்கினாள்.

`அறியாப் பருவத்தில் உடலுறவு ஏற்பட்டதால், கற்பழிப்புக்கு ஆளானதுபோல் நாகலட்சுமி மனதளவில் பாதிக்கப்பட்டுவிட்டாள்,’ என்கிறார் ஓர் உளவியல் மருத்துவர். (எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி பாதிக்கப்படுவதில்லை).

அந்திம காலத்தின் இருபது வருடங்களைப் ஒரு வார்த்தைகூட பேச முடியாமல், படுக்கையிலேயே கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது நாகலட்சுமிக்கு.

`இவளுக்கு ஏன் இப்படி ஒரு நிலை!’ என்று மிகச் சில உறவினர்கள் பரிதாபப்பட்டார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் ஒரே வார்த்தையைத்தான் சொன்னார்கள்: “பேச்சு?”

ஒருவர் தாழ்ந்திருக்கும்போது உதவி செய்யும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லாது, அவர்களது வீழ்ச்சியிலேயே ஆனந்தம் காணலாமா?

இதற்கு நேர் எதிராக இருப்பவர்களும் உண்டு. பிறரது நற்பண்புகளையும் செயல்களையும் பாராட்டுகிறவர்கள் பொறாமையை வென்றவர்கள். இவர்கள் பிறருடன் நல்ல கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு, முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுபவர்கள்.

நீங்கள் எப்படி?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *