-மேகலா இராமமூர்த்தி

crackers

கந்தக வெடிகளைச் சுற்றிக்கொண்டிருந்தாலும் மந்தகாசப் புன்னகையைக் குறைவின்றி அள்ளி வழங்கும் வனிதையரைப் படத்தில் காண்கிறோம். திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன் படம்பிடித்து வந்திருக்கும் இவ்வண்ணப் படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் நம் நன்றிக்குரியோர்.

’செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்றார் குமரகுருபரர். இவர்கள் இன்முகத்தில் பூத்திருக்கும் கள்ளமிலா வெண்முறுவல் இவர்களின் நிறைவான சிந்தையின் வெளிப்பாடாகவே காட்சிதருகின்றது.

வனிதையரையும் வாணவெடிகளையும் வைத்துப் பாப்புனையப் பாவலர்களை ஆவலுடன் அழைக்கின்றேன்.

***** 

கரித்துகளில் கிடந்துழன்றாலும் கம்பீரமாய், ஔவையின் மொழிபோற்றும் அரிவையராய் வாழும் இலட்சியப் பெண்களைத் தன் கவிதையில் காட்சிப்படுத்துகின்றார் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணன்.

பூரிப்பு

ஆனந்த சிரிப்பு..அடடா
ஆச்சரியச் சிரிப்பு அக்காவின் முகத்தில்
ஆவலில் சென்று கேட்டேன்..
துயரங்களை உன்னுள் மறைத்து
துளிர்விடும் இந்தப் புன்னகை போலிதானே?!
புன்னகை மாறாமல் அழகாய்ப்
புரிய வைத்தாள் எனக்கு.
கழுதை போலப் பொதி சுமந்தாலும்
காகம் போல வெயிலில் அலைந்தாலும்
கரித்துகள்களிலே கிடந்து கஷ்டப்பட்டாலும்
கம்பீரமாய் நிற்கிறேன்.. பூரிக்கிறன்.. ஆம்
கல்வி கற்கிறேனடா என் கண்ணே!
ஔவை மொழி கேட்டிலையோ?
அஃதே செய்கிறேன் புரியலையோ?
நீயும்
அடியெடுத்து வை இன்றே – புதிய
அத்தியாயம் துவங்க..
அடியெடுத்து வை இன்றே
அடிமைச் சிறையை தகர்த்தெறிய..
அடியெடுத்து வை இன்றே
அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க..
அடியெடுத்து வை இன்றே
அழகிய வருங்காலம் வரைய..

வெகு தொலைவில் இல்லை
வெற்றிப் பாதை!

*****

”குடும்ப வறுமையெனும் இடும்பையைச் செயற்கை முறுவலால் மூடி, வெடிகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வாடும் பூங்கொடிகள் இவர்கள்” என்று இப்பெண்களின் வாழ்க்கைப் பின்னணியை வேதனையோடு விளம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

சிரிப்பிலே

வெடித்துச் சிதறும் வெடிகளுடன்
வெடிக்கும் சிரிப்புடன் வேடிக்கையாய்த்
துடிப்புடன் உழைக்கும் வனிதையரும்
துயரைச் சிரிப்பில் தான்மறைத்தார்,
குடிக்கும் தந்தை செயலாலே
குடும்ப வறுமை தனைப்போக்கக்
கொடிகள் காய்ந்தே பணிக்குவரும்
காரணம் காட்ட வேண்டாமே…!

*****

”விதி செய்த (வறுமையெனும்) சதியால் கல்விகற்க முடியாமல், வீட்டுத்திண்ணையிலே அமர்ந்து வெடிசுற்றும் பிஞ்சுகளைக் காணுகையில் நெஞ்சுபொறுக்குதிலையே…இதற்கோர் விடிவிலையோ?” என்று நொந்து வினவுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

உயிருக்கும் உலகுக்கும் ஆபத்து பட்டாசு..!

பாட்டெழுதிக் குவித்தார்கள் பாவலரும் கவிஞரும்..
……….பஞ்சம் பசிபட்டினி வறுமை கொடுமைபற்றியே.!
நாட்டில் நடக்கும் அநியாயதையும் அவலத்தையும்..
……….நம்பிய மக்களுக்கு நயம்படப் புரியவைத்தார்கள்..!
பட்டாசு வெடிப்பதாலே பயனென்ன என்பதையும்..
……….பலருக்கும் புரியும்படிப் பகலிரவாய் எழுதினார்கள்.!
கேட்டவரால் புவிகொரு பயனுமில்லை இன்னும்..
……….கெடவைக்கிறார் ஓசோனையும் காற்றுவெளியையும்.!

ட்டுக் கல்வியென்பது ஏழைக்கு எட்டாக்கனியாகும்..
……….இலவசக்கல்வி என்பது இன்னும் ஏட்டளவிலேதான்..!
ஓட்டுக் கேட்கும்போது உங்களுக்கும் வழிபிறக்கும்..
……….என்பார்.! அதன்பிறகு அடுத்தமுறைதான் வருவார்.!
வீட்டுத் திண்ணையிலே அமர்ந்து வெடிசுத்துகிறோம்..
……….விதியை நொந்து படிக்கமுடியாமல் போராடுகிறோம்.!
பாட்டுகொரு புலவன் மாகவிபாரதியும் இதைத்தானா..
……….புண்ணியம்கோடி ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான்.?

ஆட்டுக்குட்டி மாடுகன்னு வளர்த்தாலும் ஆயுளாவது..
……….அதிகரிக்கும் இத்தொழிலோ உயிருக்கே உலைவைக்குது.!
ஓட்டுப்போட்ட மக்களால் மிகஉயர்வுக்குச் சென்ற..
……….அதிகாரியே முறையின்றியிதைச் செய்ய அனுமதிப்பது.!
பட்டாசு ஆலைகளும் ஆவணமின்றி முளைக்கிது..
……….பசும்பிஞ்சுகளும் பட்டாசோடு சேர்ந்து சாம்பலாகுது.!
அட்டபந்தன விழாவில் அனுமதியின்றிக் கொல்லத்தில்..
……….ஆயிரம்வாலா வெடித்ததில் ஐநூறுபேரையது கொன்றது.!

குடிக்காதே புகைக்காதே எச்சரிக்கிறது அரசாங்கம்..
……….குடிபுகை இரண்டையும் மறந்துவிடு அவைநலமில்லை.!
குடித்தலும் புகைத்தலும் உடல்நலத்துக்குத் தான்கேடு..
……….வெடிக்கும் பட்டாசோ வேறுலகுக்கு அனுப்பிவிடும்.!
வெடிதயாரிப்பதை உரிமமின்றிச் செய்கின்றார் பலர்..
……….விதிகள்பல இதற்குண்டு பின்பற்றுவோர் யாருமில்லை.!
வெடித்து உயிர்கருகியபின் விபத்தென்பார் இதுகூட..
……….படித்த மாந்தர்களுக்கும் புரிவதில்லை..“இந்தமாயை”.!

*****

”மருந்துகளோடு பணிபுரிவதால் நீ மருத்துவச்சி இல்லை; வெடிகுண்டு தயாரிப்பதால் நீ தீவிரவாதியும் இல்லை. இந்த ஆபத்தான தொழில் உன் வாழ்க்கைக்கான பிழைப்பு! இத்தொழிலால் ஊறின்றி நீ வாழ்ந்திடவேண்டும் ஆண்டு நூறு!” என்று வாழ்த்துகின்றார் திருமிகு. சொல்லின் செல்வி.

கந்தகச் சிரிப்பு

மருந்துகளோடு பணிபுரிவதால்
நீ மருத்துவச்சியும் அல்ல
வெடிகளை உருவாக்குவதால்
நீ தீவிரவாதியும் அல்ல.
ஆபத்தென தெரிந்தாலும்
உன்னை வேலைக்கு அனுப்பிய
அன்னையும் இந்நேரம் ஏனோ
அனல் மூட்டிய
பட்டாசு திரியாய்
பதறிக்கொண்டுதானே இருப்பாள்.?
ஆமாதானே தோழி.?

உன் கந்தகம் தோய்ந்த
கரங்களில்
முத்தம் பாய்ச்சும்
உன்னவனுக்கு
உன் மத்தாப்பு வெட்கம்
பூக்கும் இந்த சிரிப்புதானே
காதல் சங்கீதம்..?
ஆமாதானே தோழி..?

நீ திரிக்கும்
இந்த பட்டாசு மட்டும்
எங்கள் வீடுகளில் வெடித்தாலும்
சிலசமயம்
இதோ வெடிக்கும்
உன் புன்னகை போலவெ
சில புன்னகைப் பூக்களின்
சில தொழிலாள சோதிரிகளின்
யாக்கையும் வெடித்திடும் போது
உள்ளம் ரணமாகி
இருதயம் வெடித்து விடுகிறது
தோழி..?

என்றாலும் என்ன..
ஆபத்தில்லா வாழ்வை
நீ வாழ
வாழ்த்துகிறேன்..
உன் கந்தக புன்னகை
கண்டு
என் கண்களில்
கந்தக கண்ணீர் தோழி
ஆனந்தமாய்..
ஆனந்தமாய்!

*****

வெடிகளையும் அதைச்சுற்றும் பூங்கொடிகளையும் வைத்துப் பொருள்பொதிந்த கவிதைச் சரத்தைத் தொடுத்துத் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டு.

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து வருகின்றது…

நீ சிரித்தால் தீபாவளி:

நம் மகிழ்ச்சியை கொண்டாட விதவிதமாய் வெடிகள்!
செய்து தருவது எண்ணற்ற பிஞ்சுக் கரங்கள்!
படிக்கும் வயதில், இவர்களுக்கேன் இந்தப் பாடு?!
வறுமையால் விளைந்தது இந்தக் கேடு!
பூச்சரம் சூடி வாழத்தான் ஆசைகள்!
வெடிச் சரம் செய்வது விதி வரைந்த கோலங்கள்!
இவர்கள் கை வண்ணத்தில் மத்தாப்பின் ஒளிச் சிதறல்கள்!
ஆனால் இவர்களின் வாழ்வில் என்றும் இருட்டின் சாயல்கள்!
வானை முட்டும் இவர்கள் உழைப்பில் கிடைத்த வெடிகள்!
மண்ணிலே புதைந்து போகும் இவர்களின் ஆசைகள்!
ஆண்டவன் படைப்பினிலே ஏனிந்த பேதங்கள்!
வசதிகள் சிலருக்கும், வறுமை பலருக்கும், ஏன் இங்கே?
விடை தெரியாக் கேள்விகள்!
இருந்தும் இப்பெண்கள் முகத்தில் புன்னகைப் பூக்கள்!
போனதை எண்ணிச் சிறிதும் கலங்காத மாதர்கள்!
வரும் காலம், நன்மை தரும் எனும் நேரிடை எண்ணங்கள்!
நம்பினோர்க் கெடுவதில்லை! ஆன்றோரின் வார்த்தைகள்!
நல்லகாலம் அமைவதற்கு நம் அனைவரின் வாழ்த்துக்கள்!

”படிக்கும் வயதில் வெடித் தொழிற்சாலையில் வேலை செய்யும் பிஞ்சுகளைப் பார்க்கையில் நெஞ்சு துடிக்கின்றது. இவர்கள் கைவண்ணத்தில் உருவான மத்தாப்புக்கள் ஒளிச்சிதறல்களை எங்கும் வாரியிறைத்த போதிலும் இவர்கள் வாழ்வில் படிந்திருப்பதென்னவோ மருட்டும் இருட்டின் சாயலே!

இந்த முரணான வாழ்விலும் முறுவலிக்கும் இவர்களின் மனோதிடம் மற்றவரும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம். இந்தப் பிஞ்சுகளின் வாழ்வில் காரிருள் அகன்று கவினொளி துலங்கட்டும்! அதுவே நம் அனைவரின் வாழ்த்தாக இருக்கட்டும்!” எனும் கருத்தமைந்த கவிதையைத் தந்து நம் இதய வீணையின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிச் சென்றிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 136-இன் முடிவுகள்

  1. படத்தில் இருக்கும் வனிதையரின் சிரிப்பு ஒரு அழகான கவிதை.
    என் கவிதையை இந்த வாரத்திற்கான சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *