க. பாலசுப்பிரமணியன்

அறிவால் இறைவனை அடைய முடியுமா ?

திருமூலர்-1-3

சலனமற்ற மனத்தைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதை அடைய எப்படிப்பட்ட அறிவு நமக்கு வேண்டும்? எந்த புத்தகங்களைப் படித்தால் இந்த அறிவு நமக்குக் கிட்டும்? எந்த மொழியில் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்? எந்தக் காலத்தில் எழுதப்பட்ட புத்ததகங்களில் இந்த அறிவு நமக்குக் கிட்டும்? இப்படிப்பட்ட பல கேள்விகள் நமது மூளையைத் துளைத்துக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கெள்ளாம் பதில் கொடுக்கும் வண்ணம் கபீர்தாசர் கூறுகின்றார்.

“மூட்டை மூட்டையாகப் புத்தகங்களைப் படித்துவிட்டு எவரும் அறிஞர்கள் ஆவதில்லை. அன்பு என்ற இரண்டரை அட்சரத்தை எவன் படித்து அறிந்துள்ளானோ அவனுக்கு நிகர் யாருமில்லை.”

இறைவனை அன்புப்பூர்வமாக உணரவேண்டும். அறிவு என்பது என்ன? ஐம்பொறிகளால் நமக்குக் கிடைக்கும் உணர்வுகள் மூளையில் பரிசீலிக்கப்பட்டு நம்முடைய பழைய நினைவுகள் உணர்வுகள் ஆகிவயவற்றோடு விவாதிக்கப்பட்டு ஒரு புதிய கருத்தாக பொருளாகக் கிடைப்பதுதானே அறிவு? ஆனால் இந்த ஐம்பொறிகளுக்கப்பால் உணர்வுகளுக்கு அப்பால் எவ்வளவு அனுபவப்பூர்வமான அறிந்த, அறியாத அறிவு சாம்ராஜ்யம் இருக்கிறது? எனவே, இறைவனை அறிவதற்கும் அவனுடைய முழுமையை உணர்வதற்கும் நாம் படித்துச் சேர்த்த அறிவு மட்டும் போதாது. திருமூலர் கூறுகின்றார்

அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்

அறிவு அறியாமை யாரும் அறியார்

அறிவு அறியாமை கடந்தறி வானால்

அறிவு அறியாமை யழகிய வாறே.

அறிவையும் அறியாமையையும் கடந்து நிற்கின்ற பேரறிவை நாம் அறிந்தால் அது ஒரு பேரின்பமாக அமைந்துவிடும் .

வாழ்வில் பல ஆண்டுகள் இந்த அறிவைப் பின் தொடராது காலம் கழித்தபின் மனதில் தன் தவறுக்கு வருத்தம் ஏற்படுகின்றது. இது எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் வழக்கமாக ஏற்படுவதுதான். இந்தத் துயரை வெளிப்படுத்தும் மாணிக்கவாசகர் சொல்கின்றார்

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்

பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே.

புறப்பார்வைக்குத் தென்படும் பல இடங்களில் இறைவனைத் தேடும் நாம் அவன் இருக்கும் உண்மையான இடத்தைக் கண்டுகொள்வதில்லை  இந்த  அறியாமையை விளக்கும் வண்ணம் பட்டினத்தார் கூறுகின்றார்

சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்

அல்லினு மாசற்ற வகாயந் தன்னிலு மாய்ந்துவிட்டோர்

இல்லிலு மன்ப ரிடத்திலு மீசனி ருக்குமிடங்

கல்லிலுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள் கண்ணுதலே

இந்தக் கருத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது பட்டினத்தாரின் அனுபவத்தில் வந்த மற்றொரு பாடல் –

எல்லா மறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி

வல்லா னறிந்துள னென்றுண ராது மதிமயங்கிச்

சொல்லான் மலைந்துறு சூழ்விதி யின்படி துக்கித்துப்பின்

எல்லாஞ் சிவன் செய லென்பர் காண் கச்சி யேகம்பனே

இந்த நிலையை அடைவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?. அந்த அனுபவம் சலனமற்ற மனதிற்கன்றோ கிடைக்கும். அந்த சலனமற்ற நிலையை விளக்கும் திருமூலர் கூறுகின்றார்:

தூங்கிக் கண்டார் சிவ லோகமும் தம் உள்ளே

தூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே

தூங்கிக் கண்டார் சிவ போகமும் தம் உள்ளே

தூங்கிக் கண்டார் நிலை சொல்வதெவ்வாறே

இந்த தூக்கம் நாம் நித்தம் இரவில் உறங்கும் உறக்கம் அல்ல. இது விழிப்புணர்விலிருந்தும் மயக்க நிலையிலும் இருந்து விடுபட்ட நிலை. உலக நடப்புக்களிலிருந்து விடுபட்ட நிலை. உணர்ந்தும் உணராத நிலை. யோகத்தில் ஆழ்ந்த நிலை. போகங்களிருந்து விடுபட்ட நிலை. இந்தத் தூக்கத்தில் ஒளிமயமாக அவன் மட்டும் உணர்வோடு ஒன்றி இருக்கும் நிலை.

இந்த நிலை எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதா ?  இதற்கு என்ன முயற்சி செய்ய வேண்டும் ?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *