சிந்து.மூ

 

உதவிப்பேராசிரியர்

      தமிழ்த்துறை

    கற்பகம் பல்கலைக் கழகம்

       ஈச்சனாரி.

            மனித இனம் தோன்றியகாலம் முதலே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றியது எனலாம். மனிதனது உள்ளத்தில் தோன்றம் உணர்வுகளின் வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியமாகத் தோன்றுகிறது. வாய்மொழி இலக்கியமாக  விளங்குகின்ற  நாட்டுப்புறப் பாடல் ஏட்டிலக்கியமாக மாறியதில் முன்னோடியாக இருந்தது தாலாட்டுத்தான். தாலாட்டு மனித வாழ்வோடு தொடர்புடையது. மிகத் தொன்மையான தாலாட்டின் சிறப்பை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

பெயர்க்காரணம்

          ‘தால்’ என்றால் நாக்கு. நாவினை ஆட்டிப் பாடுவதால் தால் + ஆட்டு தாலாட்டாயிற்று. குழந்தையின் அழுகை ஒலியைக் கேட்கும் தாய் அவ்வெலியை அடக்கத் தன் உதடுகளைக் குவித்து நாவினை ஆட்டிக் குரலையிடுவதே தாலாட்டாகும். தாலாட்டு நாட்டு வழக்கில் “ராராட்டு“ எனவும் வழங்கிவருகிறது. மேலும் தாலாட்டைத் தாராட்டு, தாலேலோ, ஓராட்டு, ரோரோட்டு, ராராட்டு, தொட்டில் பாட்டு, ஓலாட்டு, திருத்தாலாட்டு எனப் பல்வேறு பெயர்கள் இன்றைய உலக வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் வழங்கப்படுகிறது.1

            “தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு”2 என்பர் தமிழண்ணல். குழந்தைக்கு முதன்முதலில் புலனாகும் உணர்வுகளில் கூர்மையானது, குறிப்பானது செவியுணர்வே. தாயையும், பிறரையும் வேறுபடுத்தி உணர குழந்தைகளுக்கு  உதவுவது அவரவர் குரலே இக்கருத்தின் வழி, தாலாட்டுப் பாடலில் குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள பிணைப்பு தெளிவாக வெளிப்படுகிறது. பிறப்பின் போது பாடப்படும் தாலாட்டும், இறப்பின் போது பாடப்படும் ஒப்பாரியும் மனிதனுக்குக் கிடைத்தற்கரியதாய் உணரலாம்.

தாலாட்டுப் பாடல்களின் தோற்றம்

            ‘தாலாட்டு’ என்ற சொல்லாட்சியை மையமாகாக் கொண்ட இடைக்கால இலக்கியங்கள் “தாராட்டு” என்றும், பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் “தாலேலோ” என்றும் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம்.

            தொல்காப்பியர்  “குழவி மருங்கினும் கிழவதாகும்”3 என்று தொல்காப்பியத்தில் குழந்தைக்குரிய பருவகளைச் சுட்டிக்காட்டுகிறார்.மேலும், சங்க இலக்கியத்தில் புறப்பாடலாக விளங்கும் பரிபாடலிலும் “வரையழி வாலருவி வாதாலாட்ட”4 என்ற பாடல்வரிகள் தாலாட்டினைப் பற்றிக் கூறுகிறது.

            தமிழ் மொழியில் முதன் முதலாகத் தாலாட்டுப் பாடல்களைப் பாடியவர் பெரியாழ்வார். குலசேகர ஆழ்வாரும், பிள்ளைத்தமிழ்ப் புலவர்களும் தாலாட்டினைத் தாய்ப்பருவம் என்று தனித்துறையாக வளர்த்தனர். ஞானசம்பந்தர் தாலாட்டு, நம்மாழ்வார் தாலாட்டு போன்ற தாலாட்டுச் சிற்றிலக்கியங்கள் அதன் வளர்ச்சியைக் காட்டுவன எனலாம். தற்காலத்தில் தாலாட்டுப் பாடல்கள் சூழ்நிலைகளால் உணர்ச்சி வசப்படும் பாடல்களல்ல, தாயின் ஓய்விலே குழந்தை தவிழும் போது பிறக்கின்ற பாடலாகும் என்பதை உணரமுடிகிறது.

தாலாட்டிசைக்கும் காலம்

            குழந்தை அழும் போது அதன் அழுகையை  அடக்கித்துயிலச் செய்யத் தாய் தாலாட்டுப் பாடுகிறாள். குழந்தைப் பிறந்த ஓரிரு வாரங்களிலிருந்து மூன்று வயது வரை குழந்தை தூங்க இத்தாலாட்டுத் தேவைப்படுகிறது. எனவே, அக்காலமே தாலாட்டிற்குரிய காலாமாகும். 96 வகைத் தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் பிள்ளைத் தமிழ் இலக்கியமும் ஒன்றாகும். அது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும். ஒவ்வொரு   பிள்ளைத் தமிழும் பத்துப் பருவங்களால் பாடப்பெறும். ஒவ்வொரு நிலையிலும் குழந்தையின் அழகினையும், சிறப்பினையும் உயர்வாகப் பாடப்படும்,

தாலாட்டுப்பாடலின் அமைப்பு

            தாலாட்டுப் பாடல்கள் குறுகிய அளவு உடையன.ஆனால் பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களுக்கு அடிவரையரை இல்லை என்றே கூறலாம். குழந்தையின் உறக்க நிலைக்கேற்பவும், தாயின் மனநிலைக்கேற்பவும் தாலாட்டுப் பாடல்கள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ அமையப்பெறுகிறது.

தாலாட்டு சமுதாயத்தில் பெறுமிடம்

            சமுதாயத்தில் பெண் தன் கருத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய ஒரு இடம். தன் எண்ணத்தை வெளிப்படுத்த தாய்க்கு வேறு இடம் இல்லாததால்  தாலாட்டில் வெளியாகின்றது எனத் தாலாட்டுப் பிறக்கும் நிலையை விளக்கியுள்ளமை தாலாட்டின் பயன் நிலையைச் சுட்டுவதாய் உள்ளது.

            இருவர் கொள்ளும் காதலைவிட, உடன் பிறந்தவர் கொள்ளும் வாஞ்சையை விட, உலகளக்கும் அருளினையும் விட பிள்ளைப் பாசமே ஆழமானது. இத்தகைய ”தாயும், சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலை தான் தாலாட்டு”5 ஆகும்.

தாலாட்டில் பாடுப்பொருளாக வருவன

  • பிள்ளைப்பேறு கிட்டியமைக்கு நன்றி கூறல்.
  • தெய்வம் தொடர்பான கதைகளைக் கூறல்.
  • குழந்தை இல்லாத போது தாய்பட்ட துன்பங்களைக் கூறல்.
  • குழந்தையின் அழுகைக்கானக் காரணங்களைக் கூறல்.
  • குழந்தைப் பேற்றை வேண்டி செய்த அறங்களைக் கூறல்.
  • குழந்தையை வர்ணித்துக் கூறல்.
  • குழந்தையின் எதிர்காலத்தை எண்ணி வர்ணித்தல்.

தாலாட்டின் பிரிவுகள்      

1.குழந்தை பற்றியன

            குழந்தையின் நிலையைப் பற்றித் தாலாட்டுப் பாடுதல் ஒரு வகையாகும்.

                         “என்

                    தேனே தினைமாவோ – என் சாமி

                    சிவந்தானோ மாங்கனியோ – என்

                    மாங்கனியே யாரடிச்சோரோ”

என்ற பாடலில் குழந்தையின் நிலையிணை விளக்குகிறது.

2.குழந்தைக்கு உரிமையானப் பொருட்களைப் பற்றியன

            குழந்தையின் சிலம்பு பற்றிக் கூறும் போது,

                         “என் போல் திருப்பங்கண்ணாய்

                    ஒருகால்  சிலம்பு அசைய – என்

                    மறுச்சு திருப்பங்கண்ணாய் – என்

                    வலதுகால் சிலம்பு அசைய”

என்ற பாடல் சான்றாகும்.

3.தாய்மாமன் சீர் வரிசை

          ‘தாயில்லாப் பெண்ணுக்குச் சீர் இல்லை என்பார்கள்’.அதுபோல தமையன் இல்லாப் பெண்ணக்குச் சீர் மட்டுமல்ல பலமும் குறைந்து விடுகின்றது.தாலாட்டுப் பாடல்களில் அதிகமாகச் சொல்லப்படும் உறவுநிலை தாய்மாமன் உறவுநிலையேயாகும்.

            பெண்கள் தன் உடன்பிறந்தோர் கொடுக்கின்ற சீதனங்களை அவ்வபொழுது ஞாபகப்படுத்திக் கொள்வதுண்டு. குழந்தைப் பிறந்தவுடன் தாய்மாமன், குழந்தையின் பாலுக்காகப் பசு மாடு வாங்கிக் கொடுத்தல் வழக்கம். இதனை ‘ஆச்சிமாடு கொடுத்தல்’ என்று அழைப்பர்.

                        “மழைக்கால் இருட்டுலே

                              மாரளவு சன்னிலிலே

                              குடப்பால் கொண்டுவரும்

                              குணமுள்ளார் உன் மாமன்”

என்ற வரிகள் மூலம், தாய்மாமன் குழந்தைக்கு எவ்வளவு இன்னல்களுக்கு இடையில் பால் கொண்டு வரும் நிலையினை உணர்த்துகிறது.

            தாலாட்டுப் பாடல்கள் தாயின் மனவோட்டத்தில் அமையப் பெற்று ,குழந்தையை தாயானவள் எல்லா நிலையிலும் வர்ணித்துப்பாடக்கூடிய நிலையைக் காணமுடிகிறது.

முடிவுரை

  • நாட்டுப்புறப் பாடல்களுக்கு முன்னோடியாகத் திகழ்வது தாலாட்டாகும்.
  • தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசுதான் தாலாட்டு என்பது உணரமுடிகிறது.
  • இருவர் கொள்ளும் காதலை விட, உடன் பிறந்தோர் கொள்ளும் வாஞ்சையை விட, ஏன் உலகளக்கும் அருளினையும் விட, பிள்ளைப் பாசம் ஆழமானது என்பதை உணரமுடிகிறது.
  • தாயும் சேயும் என்ற உறவுப் பிணைப்பிலே பிறந்த இயற்கைக் கலைதான் தாலாட்டு என்பதை உணரமுடிகிறது.
  • தாலாட்டுப் பாடல்கள் இருக்கும் வரை தாய்மாமனின் பெருமைகள் இருக்கும்.
  • தாலாட்டு தாய்க்குரிய இலக்கியமாகையால் அதில் தாய்மாமனின் பெருமையும், செல்வச் செழிப்பும், சீர்வரிசையும் சிறப்பாகப் போற்றக் கூடிய நிலையைக் காணமுடிகிறது.

அடிக்குறிப்பு

1.டாக்டர் சு.சத்திவேல் , நாட்டுப்புற இயல் ஆய்வு.ப-43

  1. தமிழண்ணல்,காதல் வாழ்வு,ப-10

3.வ.த.இராமசுப்பிரமணியம் (உரையாசியர்),தொல்காப்பியம் பொருளதிகாரம் நூ-82

4.அறிஞர்.வ.வே.சுப்பிரமணியன் சங்க இலக்கியம் மூலமும் தெளிவுரையும்,பரிபாடல்

    பா-6,52வது வரி

  1. தமிழண்ணல்,தாலாட்டு ப-11

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *