தமிழ் யாப்பு எழுத்துக்களும் வடமொழி யாப்பு எழுத்துக்களும் – 2

-ம. பிரபாகரன்

யாப்பருங்கல விருத்தி, ” நாலெழுத்தாதியா…எனத்தொடங்கும் சூத்திரம் முதல் தன்சீர் எழுத்தின் சின்மை மூன்றே ” என்ற, தொல்காப்பியர் எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் அமைந்த சூத்திரங்கள் அனைத்தையும் எடுத்துக்காட்டி என்றார் ஆசிரியர்  தொல்காப்பியனார் ஆகலின்  (இரா.இளங்குமரன் பதிப்பு, யாப்பருங்கல விருத்தி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பக்: 112:1973) என்று தெளிவாகக் கூறுகிறது. இதுவும், இதனைத் தொடர்ந்து வரும், யாப்பருங்கலவிருத்தியின் நேரிசை வெண்பா உரைச்சூத்திரங்களும், தொல்காப்பியம் தொடர்ந்து பயிலப்பட்டு வந்தது என்பதையும், இச்சூத்திரங்கள் எந்த உரையாசிரியரின் கைச்சரக்கும் இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. யாப்பருங்கல விருத்தி காட்டும் நேரிசை வெண்பா உரைச்சூத்திரங்கள் பின்வருமாறு:

ஈரிரண்டும் ஒரேழும் ஈரைந்தும் மூவைந்தும்
பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் – ஓரா
விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந்
தளவுநெடில் கழிலோ டைந்து ”

ஐந்தும் அகவற்கு வெள்ளைக் களவடியும்
சிந்து நெடிலடிக்கண் தொல்லிரண்டும் – வந்த
தளவிரண்டும் ஆன்ற நெடில்கழியும் ஒண்பாற்
றளைசிதைவில் தண்டாக் கலிக்கு ”       – யா.வி.95

ஈரிரண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச்
சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம் – ஓரும்
நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக்
கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து ” – யா.வி. 95 மேற்.

அளவியற்பா ஆன்றசீர் ஐந்தெழுத்திற் பல்கா
வளவஞ்சிக் காறுமாற்மாம் மாதோ – வளவஞ்சிச்
சின்மையொரு மூன்றாகும் என்பர் சிறப்புடைமைத்
தன்மை தெரிந்துணர்வோர் தாம் ” – யா.வி.95. மேற்.

குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமும்
ஒற்றும் எனவொரு நான்கொழித்துக் – கற்றோர்
உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் எண்ணச்
செயிரகன்ற செய்யுள் அடிக்கு ” – யா.வி.36. மேற்.

(25 வது நூற்பா உரை, மேலது பக்.113)

அதுமட்டுமின்றி தொல்காப்பியரின் சிந்தனைகள் அவர் காலத்தோடு முடிந்து போகாமல் அவர் காலத்திற்குப் பிறகும் ஒரு சிந்தனைப்பள்ளியாக விளங்கியமையையும் யாப்பருங்கலவிருத்தி மூலம் அறிந்துகொள்ள முடிகிறது:

ஈரிரண்டும் ஏழெழுத்தும் ஈரைந்து மூவைந்தும்
பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் – ஏர்பாய்
விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந்
தளவு நெடில்கலியோ டைந்து ” 

………………………………………………. 

ஐந்தாதி ஐரண் டீறாம் அறுநிலமும்
வந்தவடி வெள்ளைக் களவு ”

பண்பாய் ஏழு பதினா றிழிபுயர்வா
வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் – வெண்பாவின்
ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும்
பாற்படுத்தார் நூலோர் பயின்று ”…………………………………………………..

” அவற்றுள் ஐந்தடியாலும் ஆசிரியம் வரப்பெறும். சிந்தடியாலும், அளவடியாலும், நெடிலடியின் முதல் இரண்டடியாலும் வெண்பா வரப்பெறும். வெண்பாவின் ஈற்றடி ஐந்தெழுத்து முதலாகப் பத்தெழுத்தின்காறும் உயர்ந்த ஆறுநிலத்தானும் வரப்பெறும்.

பதின்மூன்றெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த எட்டுநிலத்தானும் இலக்கணக் கலிப்பா வரப்பெறும். இலக்கணக் கலிப்பா அல்லாதன, மிக்கும் குறைந்தும் வரப்பெறும்.

இருசீரடி வஞ்சிப்பா நான்கெழுத்து முதலாகப் பன்னிரண்டெழுத்தின்காறும் உயர்ந்த ஒன்பது நிலத்தானும் வரப்பெறும். முச்சீரடி வஞ்சிக்கு எழுத்து எண்ணி வகுத்திலரேனும், ஏழெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்ந்த பத்தடியாலும் வரப்பெறும்………..

நாற்சீரடிப் பாவினங்களின் அடி இருபது எழுத்தின் மிக்கு, இருபதெழுத்தின்காறும் வரப்பெறும் என்பது. (மு.சு.நூ, பக்.495-496 )

இதில் வெண்பா சிந்தடியாலும், அளவடியாலும், மட்டுமின்றி, நெடிலடியின் முதல் இரண்டடியாலும் வரப்பெறும் என்பதும் வெண்பாவின் ஈற்றடி ஐந்தெழுத்து முதலாகப் பத்தெழுத்தின் காறும் ஆறுநிலத்தானும் வரப்பெறும் என்பதும், முச்சீரடி வஞ்சிக்கு ஏழெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்ந்த பத்தடியாலும் வரப்பெறும் என்பதுவும், தொல்காப்பியத்தில் இல்லாதவை. அதுபோல இலக்கணக்கலிப்பா அல்லாதன என்பதும் நாற்சீரடிப் பாவினங்களின் அடி இருபது எழுத்தின் மிக்கு இருபத்துநான்கு எழுத்தின்காறும் வரப்பெறும் என்பதுவும் தொல்காப்பியத்தில் இல்லாதவை. இக்கருத்துக்கள்  எல்லாம் பிற்கால தொல்காப்பியச் சிந்தனைப்பள்ளியால் வளர்த்தெடுக்கப்பட்டவை எனலாம். இவ்வெழுத்து வகைப்பட்ட அடிகளுக்கு தரப்படும் உதாரணங்கள், அச்சிந்தனைப்பள்ளி தொல்காப்பியக் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் அறிவிப்பனவாய் உள்ளன. உதாரணங்கள் பின்வருமாறு:

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

குறளடி

4-6               பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து    (4)

தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து        (5)

வண்டு சூழ விண்டு வீங்கி             (6)

சிந்தடி

7-9              நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம்   (7)

ஊர்வாய் ஊதைவீச ஊர்வாய்        (8)

மணியேர் நுண்டோ டொல்கி மாலை (9)

அளவடி

10-14          நன்மணம் கமழும் பன்னெல் ஊர  (10)

அமையோர் மென்றோள் ஆயரி நெடுங்கண் (11)

இணையீ ரோதி ஏந்திள வனமுலை (12)

இறும்பர் மலரிடை யெழுந்த மாவின் (13)

நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல் (14)

நெடிலடி

15-17       அணிநடை அசைஇய அரியமை சிலம்பின் (15)

மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் (16)

ஒலிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு (17)

கழிநெடிலடி

18-20             நளிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநாள் (18)

இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை (19)

கலனளவு கலனளவு நலனளவு நலனளவு (20)

பெருமணம் புணர்ந்தனை என்பவஃ

தொருநீ மறிப்பின் ஒழிகுவ தன்றே (  மேலது பக். 496)

பேராசிரியரும் இதே உதாரணங்களையே பயன்படுத்துகிறார். (கணேசையர் .சி, தொல்காப்பியம் பொருளதிகாரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, பக், 298,299:2007)

எனவே இவ்வுதாரணங்கள் பிற்காலத் தொல்காப்பியச் சிந்தனைப்பள்ளியால் பயன்படுத்தப்பட்டவை என ஊகிப்பது தவறாகாது.

இதுகாறும் கண்டவற்றால் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு வடமொழி நெறிபற்றியதன்று என்பதையும், எழுத்தெண்ணிக்கை பற்றிய நூற்பாக்கள் இளம்பூரணருக்கு முன் உள்ள உரையாசிரியர்களால் இடைச்செருகப்பட்டதன்று என்பதையும் அறிந்து கொண்டோம். தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு  வடமொழி நெறிபற்றியதன்று என்பதைப் புறநிலைரீதியாக மேலே சுட்டிக்காட்டினோம். எழுத்து அடிப்படையில் அமைந்த தமிழ், வடமொழிப் பாக்களை ஒப்பிடுவதன்மூலம் இரண்டும் வேறு வேறு மரபைச் சார்ந்தவை என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டமுடியும். இதை விளக்கமான  ஒப்பீடு மூலம் கூறவேண்டும். இரண்டையும் ஒப்பிடுவதற்குமுன் தொல்காப்பிய எழுத்தெண்ணிக்கை மரபைப் புரிந்து கொள்ளவேண்டும். முதலில் எழுத்தெண்ணிக்கை பற்றிய தொல்காப்பிய நூற்பாக்களையும், கருத்துக்களையும் தொகுத்துக்கொள்வோம்.

 1. நால் எழுத்து ஆதியாகி ஆறெழுத்து

ஏறிய நிலத்தே குறளடி என்ப

பொருள்: நால் எழுத்து முதலாக ஆறுஎழுத்து ஈறாக ஏறி நிலத்தில் வருவது குறளடி.

 1. ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே

ஈர் எழுத்து ஏற்றம் அல்வழி யான

பொருள்: சிந்தடிக்கு அளவு ஏழு எழுத்து என்று கூறுவர்; இரண்டு எழுத்து ஏற்றம் இல்லாதவிடத்து.

 1. பத்தெழுத் தென்ப நேரடிக் களவே

ஒத்த நாலெழுத்து ஒற்றலங் கடையே

பொருள்: பத்து எழுத்து முதல் பதினான்கு எழுத்து வரை நேரடி என்ற அளவடியாகும்.

 மூவைந் தெழுத்தே நெடிலடிக்கு அளவே

ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப

பொருள்: பதினைந்து எழுத்து முதல் பதினேழெழுத்துவரை நெடிலடிக்கு அளவாம் என்று கூறுவர்.

 1. மூவாறு எழுத்தே கழிநெடிலடிற்கு அளவே

ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப

பொருள்: பதினெட்டு எழுத்து முதலாக இருபது எழுத்தளவும் கழிநெடிலடியின் இயல்பென கூறுவர்.

 1. சீர்நிலை தானே ஐந்து எழுத்து இறவாது

பொருள்: ஒருசீரின்கண் நிற்கும் எழுத்துக்கள் ஐந்தினைக் கடவாது.

 1. நேர்நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும் 

பொருள்: இருசீர் அடிகளான் வரும் வஞ்சியடிக்கண் ஒருசீரில் ஆறெழுத்தும் வரும்.

 1. ஐவகை யடியும் ஆசிரியர்க்கு உரிய

பொருள்: நாற்சீரடிக்கண் வகுக்கப்பெற்ற ஐவகை அடிகளும் ஆசிரியப்பாவிற்கு உரிய.

 1. அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய

தளைவகை ஒன்றாத் தன்மை யான 

பொருள்: அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற்கு உரிய; தளைவகை ஒன்றாத் தன்மைக்கண்.

 1. அளவடி மிகுதி உளப்படத் தோன்றி

இருநெடில் அடியும் கலியிற் உரிய 

பொருள்: அளவடி முகுதிஒயாகிய 13 எழுத்து முதலாக நெடிலடியும், கழிநெடிலடியும் ஆகிய 20 எழுத்தின்காறும் வரும் அடி, கலிப்பாவிற்குரிய.

 1. குறளடி முதலா அளவடி காறும்

உறழ்நிலை இலவே வஞ்சிக்கு என்ப

பொருள்: குறளடி முதலாக அளவடி வரையும் வஞ்சியுரிச்சீர் வந்து மயங்கும் நிலை இல்லை என்று கூறுவர். இங்கு இயற்சீரும் ஆசிரியவுரிச்சீரும் வரும்.

இவற்றைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்: 

அட்டவணை 2

எழுத்துக்கள்                        பாக்கள்

அளவு- 10 எழுத்து முதல் 14 எழுத்து வரை

(10,11,12,13,14)

 

சிந்து – 7 எழுத்து முதல் 9 எழுத்து வரை

 

வெண்பா

குறளடி – 4  எழுத்து முதல் 6 எழுத்துக்கள் வரை

(4,5,6)

சிந்தடி – 7 எழுத்து முதல் 9 எழுத்து வரை

(7,8,9)

அளவடி – 10 முதல் 14 எழுத்துக்கள்

(10,11,12,13,14)

நெடிலடி- 15 முதல் 17 எழுத்துக்கள்

(15,16,17)

கழிநெடிலடி – 18 முதல் 20 எழுத்துக்கள்

(18,19,20)

ஆசிரியப்பா

நெடிலடி – 15 முதல் 17 எழுத்துக்கள்

கழிநெடிலடி – 18 முதல் 19 எழுத்துக்கள்

6 எழுத்து

6 முதல் 12 எழுத்துக்கள்                இருசீரடி வஞ்சி

வஞ்சி

இதுவரை கண்ட வடமொழி, தமிழ் எழுத்துக்கள் பற்றிய செய்திகளின் அடிப்படையில்

தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபை வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபோடு கீழ்க்காணும் வகையில் ஒப்பிடலாம்:

எழுத்துக்கள்

வடமொழி சந்தஸ்கள்

தமிழ்ப்பாக்கள்

1

2

3

4              ப்ரதிஷ்டா              ஆசிரியப்பா

5              சூப்ரதிஷ்டா           ஆசிரியப்பா

6              காயத்திரி                ஆசிரியப்பா, இருசீரடி வஞ்சியின் ஒருசீர், வஞ்சி

7             உஷ்ணிக்               ஆசிரியப்பா

வெண்பா(சிறப்பு)

8            அனுஷ்டுப்பு         ஆசிரியம், வெண்பா, வஞ்சி

9            ப்ரகதி          ஆசிரியம், வெண்பா, வஞ்சி

10        பங்தி              ஆசிரியம் , வெண்பா(சிறப்பு), வஞ்சி

11        த்ருஷ்டுப்பு              ஆசிரியம், வெண்பா (சிறப்பு), வஞ்சி,

12        ஜகதி              ஆசிரியம், வெண்பா (சிறப்பு), வஞ்சி

13        அதிஜகதி   ஆசிரியம்

வெண்பா (சிறப்பு)

14        சக்வரி          ஆசிரியம், வெண்பா

15        அதிசக்வரி             ஆசிரியம்,

கலிப்பா

16        அஷ்டி           ஆசிரியம்,

கலிப்பா

17         அதியஷ்டி              ஆசிரியம்

கலிப்பா

18        த்ருதி           ஆசிரியம்

கலிப்பா

19        அதித்ருதி     ஆசிரியம்

கலிப்பா

20        க்ருதி            ஆசிரியம்

கலிப்பா

மேலே காட்டிய ஒப்பீடு புறநிலையானதே. பொதுநிலையானதே. இவ்வொப்பீட்டின் மூலம் வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபிற்கும் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபிற்கும் பெரும் வேறுபாடு இருப்பதை நன்றாக உணரமுடியும். வடமொழி எழுத்தெண்ணிக்கைமரபு மிகவும் கட்டுப்பாட்டோடு இருக்க (6 எழுத்து – காயத்திரிதான், வேறு எதுவுமாக இருக்க முடியாது. தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு, நெகிழ்வுடன் தனக்கேயுரிய சுயேச்சைத்தன்மையுடன் இருப்பதை உணரமுடியும். அதாவது 10 எழுத்து பங்திக்கு மட்டும்தான் உரியது என்று கூறும் வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபை விட 10 எழுத்து ஆசிரியப்பா வெண்பாவிற்கும் உரியது என்னும் தமிழ் மரபு இயல்புத்தன்மையோடு அதாவது தனக்கேயுரிய சுயேச்சைத்தன்மையோடு இருப்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளமுடிகிறது.

தமிழில் எழுத்தெண்ணும் போது வடமொழி சந்தஸ்களைப்போல் எழுத்துக்களை  கட்டுப்பாட்டோடு புலவர்கள் நிறுத்தவில்லை. அப்படி அவர்கள் செய்ய நினைத்தாலும் அது செயற்கைப் பாக்களை உருவாக்குவதாகவே அமையும். தமிழ்ச் செய்யுள்களின் தூக்கு எழுத்துக்களைக் கட்டுபாட்டோடு நிறுத்துவதற்கு வாய்ப்பும் கொடுக்காது. தொல்காப்பியர் 6 ,7,8,9,10 என்று பாக்களுக்கு எழுத்துக்களைக் கூறுகிறாரேயொழிய அவை குறிலா? நெடிலா? என்றெல்லாம் வேறுபடுத்தவில்லை. அதாவது அவர் வடமொழியில் இருப்பதைப் போல மகணம், சகணம் என்பது போல் கட்டுப்பாட்டோடு எழுத்துக்களை எண்ணவில்லை. அதே போல் வடமொழி மாத்ரா விருத்தங்களைப் போல் ஒருஅடியில் வரும் எழுத்துக்கள் இத்தனை மாத்திரை பெற்று வரவேண்டும் என்றும் அவர் கூறவில்லை. இனியும் வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபும், தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபும் வேறு வேறு என்பதற்குச் சான்றுகள் தந்து விளக்க வேண்டியதில்லை. இரண்டு மொழிகளின் எழுத்தெண்ணிக்கை மரபும் வேறு வேறு என்ற நிலையில் இருமொழிகளின் எழுத்தெண்ணிக்கை மரபும் பரஸ்பரம் மற்ற மொழிகளின் எழுத்தெண்ணிக்கை மரபு வளர்ச்சிக்குப் பங்காற்றியிருக்கலாம். இது வேறொருதளத்திலான பரந்துபட்ட ஆய்விற்குரியது.

******

ஆய்விற்குப் பயன்பட்ட கட்டுரை மற்றும்  நூல்கள்:

 1. தொல்காப்பியச் செய்யுளியல் இரு சூத்திர விளக்கம், மணிமேகலை மன்றம், இராஜபாளையம், ஆண்டு தெரியவில்லை.
 2. சி.வை.தாமேதரம்பிள்ளை பதிப்பு, வீரசோழியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2008.

   3.இரா.இளங்குமரன் பதிப்பு, யாப்பருங்கல விருத்தி,     சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை,1973

 1. கணேசையர் .சி, தொல்காப்பியம் பொருளதிகாரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, 2007

வடமொழி யாப்பு செய்திகளுக்கு  பயன்பட்ட நூல் மற்றும் ஆய்வேடு:

 1. இராஜ இராஜ வர்மா , எ.ஆர்., விருத்தமஞ்சரி, கரன்ட் புக்ஸ், கோட்டயம், 2008. கேரளா.
 2. Ranjith rajan, –  Metres of bhattananarayana (M.Phil Desertaton), Department of Sanskrit,  University of   Kerala, 2009.

******

கட்டுரையாசிரியர்
ஆய்வாளர்,
EFEO,
புதுச்சேரி.

 

 

Share

About the Author

ம. பிரபாகரன்

has written 6 stories on this site.

முனைவர் ம. பிரபாகரன் -சிறுகுறிப்பு கல்வித்தகுதி: M.A., M.Phil., Ph.d. முனைவர் பட்ட தலைப்பு: யாப்பருங்கலம், வீரசோழியம் யாப்புப்படலம் -ஓர் ஒப்பீட்டாய்வு முனைவர் பட்ட நெறியாளர்: முனைவர். கி.நாச்சிமுத்து முனைவர் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்: தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நூல்கள்: 1. பேரா.கி.நாச்சிமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறு, சேகர் பதிப்பகம், சென்னை. 2. வீரசோழிய யாப்பு, காவ்யா பதிப்பகம், சென்னை: 2014 3. செவ்வியல் நோக்கில் தமிழ் யாப்பிலக்கணம், நெய்தல் பதிப்பகம், சென்னை: 2016 தற்போது பணி பற்றிய விபரம்: Researcher – Topic : Critical Edition of Tolkapiyam Ceyyuliyal Under the guidance of Dr. Eva Wilden and Dr. Jean Luc-Chevillard. EFEO ( Ecole francaise d'Extreme-Orient), Pondicherry-605001, India மின்னஞ்சல்: prabhatamil@gmail.com

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.